முன்னுரை
முனைவர். தொல். திருமாவளவன்
இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!
மனுஸ்மிருதி எங்கே உள்ளது? தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படி சிவர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அதன் விவரம் அறியாமல் கேட்பது சரி. ஆனால் எல்லாம் அறிந்திருந்தும் சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கேட்கின்றனர்.
இந்துச் சமூகம் எனப்படுவது முழுக்க முழுக்க மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதனை அடிப்படையாகக் கொண்டே அது இயங்குகிறது. சமூகம், கலாச்சாரம் பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் மற்றும் பொருளாதாரம் என அனைத்துமே மனுஸ்மிருதி அடிப்படையிலான வரையறைகளைக் கொண்டே செயல்படுகிறது. தலைமுறைத் தலைமுறையாகத் தொடர்கிறது. இந்துச் சமூகத்தினரின் இன்றைய வாழ்விலும் மனுஸ்மிருதி என்னும் மனுச்சட்டமே அரசமைப்புச் சட்டமாக இருந்து கோலோச்சுகிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்துவிட்டது என்றாலும், அரசியல் தவிர்த்து சமூகம், கலாச்சாரம் உள்ளிட்ட தளங்கள் அனைத்திலும் நூறு சதவீதம் மனுச்சட்டமே அரசமைப்புச் சட்டமாக நடைமுறையிலிருக்கிறது. அரசியல் தளத்திலும்கூட நாடாளுமன்ற சனநாயக நடைமுறைகளில் மட்டுமே சற்று நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் இன்றைய அரசமைப்புச் சட்டத்திற்கு இடம்கொடுக்கிறது. மற்றபடி அரசியல் தளத்திலும்கூட பெருமளவில் மனுஸ்மிருதியின் தாக்கமே மேலோங்கியுள்ளது.
மனுஸ்மிருதி என்பது வைதீக மதம் என்னும் வேத மதத்தைப் பின்பற்றியோ ருக்கென மனு என்பவரால் தொகுக்கப்பட்டதாகும். இதனை அவ்வேத மதத்தின் கொள்கை அறிக்கை மற்றும் அரசமைப்புச் சட்டம் எனலாம்.
வேத மதம் என்பது ஆரியர் என்னும் மரபினத்தைச் சார்ந்தவர்களுக்குரிய கலாச்சார நிறுவனமாகும். அதனைப் பின்பற்றும் ஆரியர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் சமூக அமைப்பு முறைகளை வரையறுத்துள்ள ஒரு கோட்பாட்டு ஆவணம் தான் மனுஸ்மிருதி ஆகும்.
வர்ணாஸ்ரமம் என்பதுதான் மனுஸ்மிருதியின் அடிப்படையான கோட்பாடாகும். அக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்துச் சமூக அமைப்பு முறையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அச்சமூகம் சவர்ணாஸ் மற்றும் அவர்ணாஸ் எனும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டதென அது வகைப்படுத்துகிறது. அவற்றில், சவர்ணா பிரிவு நான்கு வர்ண அடுக்குகளைக் கொண்டதாகும். அவர்ணா பிரிவு அதற்குட்படாத எதிர்க் கருத்தியலைக் கொண்டதாகும்.
சவர்ணா எனப்படும் நான்கு வர்ண சமூக அமைப்புக்கான வாழ்வியல் நெறிமுறைகளை வரையறுத்திருப்பதே மனுஸ்மிருதி ஆகும். அத்தகைய மனுஸ்மிருதியின் கோட்பாடாக விளங்கும் வர்ணாஸ்ரமத்தின் மையக் கருப்பொருள். "பிறப்பினடிப்படையில் உயர்வு தாழ்வு" என்னும் கருத்தியலே ஆகும்.
மனுஸ்மிருதியின் கருப்பொருள் வர்ணாஸ்ரமம்; வர்ணாஸ்ரமத்தின் கருப்பொருள் பிறப்பினடிப்படையிலான உயர்வு தாழ்வு; உயர்வு- தாழ்வின் கருப்பொருள் பாகுபாடு; பாகுபாட்டின் கருப்பொருள் ஆதிக்கம்; ஆதிக்கத்தின் கருப்பொருள் உழைப்புச் சுரண்டல். எனவே, உழைப்புச் சுரண்டலுக்கான மூலக் கோட்பாட்டு ஆவணம் தான் மனுஸ்மிருதி.
உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் உள்ளது. வலியோர் எளியோர் என்னும் முரண்பாட்டின் விளைவாக இது நிகழ்கிறது. ஆனால், இந்திய மண்ணில் மனுஸ்மிருதி வரையறுத்துள்ள வர்ணாஸ்ரமக் கோட்பாட்டின் அடிப்படையில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு என்னும் பாகுபாடுகளின் வழியாகவே உழைப்புச் சுரண்டல் நிகழ்கிறது. அத்துடன். உடலுழைப்பு செய்வோர் மிகவும் கீழானவர்கள். இழிவானவர்கள் என்னும் தாழ்வு மனநிலையைக் கட்டமைத்து அவர்கள் மீண்டெழ இயலாதவகையில் முடக்கி சுரண்டலைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, எதிர்ப்போ, கிளர்ச்சியோ, புரட்சியோ வெடிக்காத வகையில் மக்களைப் பிளவுபடுத்தியும் உயர்வு தாழ்வு என்னும் உளவியலால், வர்ணத்தால், சாதியால், பாலினத்தால் உயர்ந்தோர் எனப்படுவோர் எளியோரின் உழைப்பை சுரண்டும் கொடுமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஏதுவாக மனுஸ்மிருதி வழிவகை செய்கிறது.
0 Comments: