பெரியார் ஒரு சகாப்தம்!
பேரறிஞர் அண்ணா
இவர்தான் பெரியார்!
கல்லூரி காணாத கிழவர்! காளைப் பருவ முதல் கட்டுக்கடங்காத
முரடர் ! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத
கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப்
பேசுவரே, வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!
யார் யாரைத் தூக்கிவிடுகிறாரோ; அவர்களாலேயே தாக்கப்படுவர்! அவர் யாரைக் காணவேண்டுமோ,
அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர் தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்
! ஆரிய மதம்; கடவுள் எனும் மூடு மந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும்
போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர்.
பேரறிஞர் அண்ணா, 'விடுதலை
வரலாறு'
அமெரிக்காவிலிருந்து
அண்ணன் எழுதிய அஞ்சல்
பேரன்புடைய பெரியார் அவர்கட்கு. வணக்கம்.
என் உடல்நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. வலியும்
அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும்,
இளைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இத்திங்கள் முழுவதும் இங்கு
இருந்துவிட்டு, நவம்பர் முதல் வாரம். புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி பரிமளம்,
செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக்கொள்கிறார்கள்.
சென்னை மருத்துவ மனையிலும் விமானதளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த
தோற்றம் இப்போது என் முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவேதான் கவலைப்பட வேண்டியநிலை முற்றிலும்
நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு என் நன்றி.
தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில் 'மனச்சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ
என்னவோ' என்று எழுதியிருந்ததைக்கண்டு மிகவும் கவலைகொண்டேன். தங்கள்-பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச்
சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான்
அறிந்தவரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை.
அதுவும் நமது நாட்டில். ஆகவே, சலிப்போ. கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.
என் வணக்கத்தினை திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.
நியூயார்க், தங்கள்
அன்புள்ள,
10—10—68. அண்ணாதுரை
பகுத்தறிவு ஊட்டிய
பெரியாரே என் தலைவர்
"...... நமது தமிழ் நாட்டில் மட்டும், வயதானவர்கள்
வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில்
ஒருவர் டாக்டராகவும். ஒருவர் எஞ்சினீயராகவும், ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில்
நடைபெறும் விழா நிகழ்ச்சியின் போது, அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டி
"அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான்; இவன் அவனுக்கு அடுத்தவன்,
எஞ்சினீயராக இருக்கிறான் ; அவன் சிறியவன், வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும்
எனது பிள்ளைகள்” என்று கூறி, பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார். அதுபோன்று பெரியாரவர்கள்,
தம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும் 'அவன் என்னிடமிருந்தவன்
; இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை இந்தியாவிலேயே ஏன்
? உலகிலேயே பெரியார் அவர்களுக்குத்தான் உண்டு. அவர் காங்கிரசிலிருப்பவர்களைப் பார்த்து—தி.
மு. க.வில் இருப்பவர்களைப் பார்த்து—கம்யூனிஸ்டுக் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து—சோஷ்யலிஸ்டுகளைப்
பார்த்து இவர்கள் என்னிடமிருந்தவர்கள்; இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன்; இன்று
இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள்' என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை அவர்கள் ஒருவரையே
சாரும்.
பெரியார் அவர்கள் தமிழ்போல் என்றும் இளமை குன்றாது
வாழவேண்டும்; எந்தக் குழந்தையும் தப்பிப்போகாமல் பாதுகாக்க வேண்டும். அவர் என்னுடைய
தலைவர்! நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன்; வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை ; அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டது
போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகின்றேன்.
கருத்து வேற்றுமை இருப்பினும்
குறிக்கோள் ஒன்றே
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர்
கருத்து வேறுபாடு இருக்கலாம். குடும்பத்தில், அப்பன்—மகன்—அண்ணன்—தம்பி அவரவர்களுக்கு
ஒரு கொள்கை ! அவரவர் கொள்கை அவரவருக்குப் பெரிது.
'கடவுள் கதைகளிலிருந்து மனித சமுதாயத்தைத் திருத்தலாம்;
மனித சமுதாயத்தை முன்னேற்றலாம்' என்று குன்றக்குடி அடிகளார் கருதுகின்றார்; அத்துறையின்
மூலம் தொண்டாற்றிவருகின்றார். கடவுள் கதைகள் மனித சமுதாயத்தைக் கெடுக்கிறது என்பதை
எடுத்துக்காட்டும்போது அவமானம் புழுங்குவதில்லை. மதத்துறையில் நின்று மனித சமுதாயத்தை
முன்னேற்றலாம் என அவர் கருதுகின்றார். நாம் பகுத்தறிவுத் துறையால்தான் மனித சமுதாயம்
முன்னேற முடியும், என்று கருதித் தொண்டாற்றி வருகிறோம். நாமும் முழு அளவு வெற்றி பெற்றோமா
என்றால் இல்லை; அவரும் முழு அளவு வெற்றி பெற்றார் என்றால் இல்லை. நமது வெற்றியைப்பற்றி
நாமும் சந்தேகப்படுகிறோம்; அவரும் அவரது வெற்றி குறித்து சந்தேகப்படுகிறார். அவரவர்கள்
நேர்மையாக நடந்து, தங்கள் துறையில் தொண்டாற்ற வேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பு
சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கமல்ல.மனித
சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டுமென்பதற்குப் பாடுபடும்
இயக்கமாகும். முதல் முதல் உள்ளத்தில் சுயமரியாதை இயக்கம், அடுத்துப் பகுத்தறிவு இயக்கம்.
பிறகு தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக்கொண்டது.
நாம் மனித இயற்கையின்பாற்பட்டு
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறோம். நான் பெரியாருடன் இருந்தபோது பல
ஆண்டுகளுக்கு முன் அரித்துவாரத்திற்குப் பெரியாருடன் நானும் சென்றேன். கங்கைநதி தீர்த்தில்
அவர் கம்பீரமாக நடந்து செல்கையில் வீசிய தென்றல் பெரியாரின் வெண்தாடியைத் தழுவி அசைத்து,
அவர்மேல் போட்டிருந்த மஞ்சள் சால்வையையும் அசைத்துச் சென்றது. எனக்கு அவர் கம்பளிக்கோட்டு
வாங்கிக்கொடுக்காத காரணத்தால், நான் குளிரால் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் பின் சென்றேன்.
அது குருவுக்குப்பின் சீடன் மிகுந்த பய பக்தியுடன் செல்வது போல் இருந்தது. பெரியாரைக்
கண்டதும் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் பெரியசாமி யார் என்று அவரையும், அவருக்குப்பின்
கைகட்டிச் சென்ற என்னை அந்தச்சாமியாரின் (பெரியாரின்) சீடன் என்றும் கருதி, வழி நெடுக
எங்கள் காலில் விழுந்தனர். பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து, 'நம் நாட்டு மக்கள்
யாரையெல்லாம் சாமியாராக்குகிறார்கள் பார்' என்று சொன்னார்கள்.
பகுத்தறிவால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும்.
பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால் தான்
மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவரமுடியும் என்றும், அதற்கு எதிராக இருக்கிற
மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத் திலிருந்து அகற்றப்படவேண்டுமென்பதற்காகவும்
பாடுபட்டுக்கொண்டுவருகிறோம். மதவாதிகள் மதத்தில்தான் நியாயம் இருக்கிறது; மதம்தான்
மனித சமுதாயத்திற்கு வழிகாட்டி என்று கருதிக்கொண்டிருக்கின்றனர்.
சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிகள்
சுயமரியாதை இயக்கம் வளர்ந்து வளர்ந்து பெண்ணுரிமை
பெற்றிருக்கிறது; ஆலயங்களில் நுழையும் உரிமை பெற்றிருக்கிறது; இன்னும் பல உரிமைகளைத்
தமிழர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளது. தமிழர்களின் குடும்பங்களில்
பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தியிருக்கிறது, அவர்கள் நமது வணக்கத்திற்குரியவர்களாவார்கள்.
சட்டப்படி செல்லாது என்று தெரிந்ததனால் ஏற்படும் தொல்லைகளையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காகத்தான்
சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நமது வணக்கத்திற்குரியவர்கள்
ஆவார்கள்.
எங்களது ஆட்சியில் விரைவில், சுயமரியாதைத் திருமணத்தைச்
சட்டப்படி செல்லத்தக்கதாக சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்திவைக்கப்பட்ட
திருமணங்களும் சட்டப்படி செல்லத்தக்கதாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியார்
அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிரூந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக்
கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன்,
தன் தந்தைக்கு மிகப்பிடித்தமான பொருளைக் கொண்டுவந்து கொடுப்பதைப் போல, நாங்கள் பெரியார்
அவர்களிடம் இக்கனியை (சட்டத்தை) சமர்ப்பிக்கிறோம். இதை எனக்கு முன் இருந்தவர்கள், கூட
செய்திருக்க முடியும். நான் போய் நடத்தவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
நான் திருமணம் ஆனபின் இயக்கத்திற்கு வந்ததால், எனக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காமல்
போய்விட்டது!"
(திருச்சி நகரிலுள்ள "பெரியார் மாளிகை"
யில் 7-6-67 அன்று தந்தை பெரியார் அவர்களால் நடத்திவைக்கப்பெற்ற மறைந்த ப. ஜீவாநந்தம்
மகள் திருமண விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
அந்த 'வசந்தம்'
“எனக்கென்று ஒரு 'வசந்தகாலம்' இருந்தது. நீண்ட நாட்களுக்குப்
பிறகு, ஆண்டு பலவற்றுக்குப் பிறகு—அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு, இன்றைய கவலை
மிக்க நாட்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக்கொள்கிறேன். பெரியாருக்கு அந்த
'வசந்த காலமும்' தெரியும்; இன்று பொறுப் பேற்றுக்கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும்
நன்கு புரியும்.
'வசந்தகாலம்' என்றேனே அந்த நாட்களில் நான் கல்லூரியிலிருந்து
வெளியேறி, அவருடன் 'காடு மேடு' பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடுமேடுகளில் நான் அவருடன்
தொண்டாற்றிய போது வண்ண வண்ணப்பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும்
பரவிடக் கண்டேன்.
அப்போது 'கலவரம் எழாமல்' ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக
நடத்தி முடித்திட முடிந்தால் போதும்—பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படுமுன்னர்,
தலைபோகும் —தாடிபோகும்—தடிபோகும்—உயிர் போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட
வேண்டிய நிலை.
பெரியாரால் திருந்திய தமிழரோ பலப்பலர்
அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை
வீசுவார்— ஆமாமய்யா! என்று பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்கமாட்டார்—வருவேன்
என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம், பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும்.
வந்தவர்களில் 'உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர். இருந்திருப்பின், அடுத்த கூட்டத்திற்கு
அவர் அய்யாவிற்காக 'மாலை' வாங்கிக்கொண்டுதான் வருவார்! அத்தகைய
தெளிவும், வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப்பெற்று, தமிழரில்
பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப் பம்
ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்...
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து
பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச்
செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு இங்கின்றி வேறெங்கும் இருந்ததில்லை.
அந்த 'வரலாறு' துவக்கப்பட்டபோது நான் சிறுவன்.
அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட
நாட்களிலே ஒரு பகுதியில், நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாட்களைத்தான்
என் வசந்தம்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர் பற்பலர்.
அவருடன் மற்றப் பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான்.
அந்த நாட்கள் எனக்கு மிகவும் இனிமையான நாட்கள்; இன்றும் நினைவிலே கொண்டுவரும்போது இனிமை
பெறுகின்றேன்.
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்
எத்தனை எத்தனையோ கருத்துக்களை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார்.
'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதனை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத்தொண்டாற்றுவதில்
ஓர் ஆர்வமும் அக மகிழ்வும், மன நிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக்கண்டிருக்கிறேன்;
கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன்; 'உன்னை எனக்குத் தெரியும் போ!' என்று உரத்த குரலில்
கூறியதைக் கேட்டிருக்கிறேன்; ஒரு நாள் கூட அவர் என்னிடம் அவ்விதம்
நடந்துகொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத்
தனது குடும்பத்தில் பிறவாப் 'பிள்ளை' எனக் கொண்டிருந்தார்.
தமிழன் வரலாற்றில் முக்கிய கட்டம்
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார்—நான் அவருடன்
இணைந்தபோது; முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த 'ஆண்டுகள்' தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான
ஆண்டுகள். 'திடுக்கி வைக்கிறாரே | திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே! ஏதேதோ
சொல்கிறாரே!' என்று கூறியும், 'விட்டுவைக்கக்கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும் !
நானே தீர்த்துக்கட்டுகிறேன்!' என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்;
பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக்
கேட்ட வண்ணம் இருந்தனர் மூலையில் நின்றாகிலும்; மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு
அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள்,
ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக்கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்;
மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; அவருடைய பேச்சோ! அது
தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக்கொண்டு, கற்களை
உருட்டிக்கொண்டு, காடுகளைக் கழனிவளம் பெறச் செய்துகொண்டு ஓசை நயத்துடன், ஒய்யார நடையுடன்!
அங்கே பேசுகிறார். இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார்,
இது குறித்துப் பேசுகிறார்—என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறிவருகிறது.
பெரியார் வாழ்வு முழுதும் உரிமைப் போரே
மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன்-எது நேரிடினும்—என்ற
உரிமைப் போர் அவருடைய வாழ்வு. முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த
வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்
அந்த வெற்றியின் விளைவுகளை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியென்று
பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப்
புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பாளர் பெரியார்! இந்த
வெற்றி கிடைத்திட, அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.
பெரியார் கண்ட தமிழகம்
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை
இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது
வியர்த்துப் போகின்றனர். அப்படியா!— முடிகிறதா!—நடக்கிறதா!—விட்டுவைத்திருக்கிறார்களா!—என்று
கேட்கிறார்கள்!— சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி,
லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகர்களில் என்னையும் உடன் அழைத்துக்கொண்டு
பெரியார். சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வொரு ஊரிலும் இது போலத்தான் கேட்டனர். யார்?
அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவு வாதிகள்!
அந்த இடத்துப் பகுத்தறிவு வாதிகள் படிப்பார்கள்-
பெரியபெரிய ஏடுகளை! எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை! கூடிப்பேசுவார்கள்
சிறிய மண்டபங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக்கொண்டு! இங்கு?
பழமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது
இங்கா! இவர் பேசாத நாள் உண்டா ? குரல் கேட்காத ஊர்
உண்டா? அவரிடம் சிக்கித்திணறாத 'பழமை' உண்டா ? எதைக் கண்டு அவர் திகைத்தார். எதற்கு
அவர் பணிந்தார். எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது! 'ஏ! அப்பா ! ஒரே ஒருவர்,
அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே' என்று, இந்நாட்டை என்றென்றும்
விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த 'பழமை' அலறலாயிற்று! புதுப்புதுபொருள்
கொடுத்தும், பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதனை
அறியாதார் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி
மனிதனின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம்—ஒரு கால கட்டம்—ஒரு திருப்பம் என்று கூறுவது
வாடிக்கை.
அக்கிரமம் தென்படும் போது, மிகப்பலருக்கு அது தன்னைத்
தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக்கொள்வோம் என்ற பாதுகாப்பு
உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.
நேர்மைக்காக பெரியார்.......
பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும்,
எந்த வடிவிலே காணப்படினும், எத்துணை பக்க பலத்துடன் வந்திடினும் அதனை எதிர்த்துப் போரிடத்தயங்குவதில்லை.
அவர் கண்டகளம் பல; பெற்ற வெற்றிகள் பலப் பல! அவர்
தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது!
அவர் வயது 89; ஆனால், போர்க்களத்திலேதான்
நிற்கின்றார்!
அந்தப் போரிலே ஒரு கட்டடத்தில் அவருடன் இருந்திடும்
வாய்ப்பினைப் பெற்ற நாட்களைத்தான் 'வசந்தம்' என்றே குறிப்பிட்டேன்.
வாழ்க பெரியார்!
மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன், நமக்காக வாழ்ந்திருக்கவேண்டும்,
தமிழர் வாழ்வு நல்வாழ்வாக அமைவதற்கு, பன்னெடுங்காலமாக இருந்துவரும் கேடுகள் களையப்படுவதற்கு
அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் என்பதில் அய்யமில்லை.
வாழ்க
பெரியார் !”
[தந்தை
பெரியார் 89-ம் ஆண்டு பிறந்தநாள்
"விடுதலை" மலருக்கு எழுதிய கட்டுரை]
பெரியாரும் காந்தியும்
காந்தியார் பெரியாரின் மாளிகையிலே தங்கியிருந்திருக்கிறார்.
காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு 'காந்தி' என்றே பெயர் வைத்திருக்கிறார்.
காந்தியார் படத்தைக் கொளுத்துவேன்—அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார்
சொன்னாரென்றால் அவர் சொல்லும் காரணம் என்ன என்பதை காங்கிரஸ்காரர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.
(11-11-57ல்
தமிழக சட்ட மன்றத்தில்)
அறிவுப்புரட்சி கண்ட
எம் தலைவா வாழி!
"...நம்முடைய தனிப்பெருந்தலைவர் பெரியாரவர்களுடைய
89—வது பிறந்த நாள் விழாவில், நான் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது பற்றி உள்ளபடியே
மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாவது ஒரு பெரிய மகிழ்ச்சி
ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்து கொள்வது தான் அந்த பெரிய மகிழ்ச்சியாகும்.
ஆனால், உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்த வரையில் இடையில்
சில நாள் இல்லாமலிருந்த பழைய நிகழ்ச்சித்தானே தவிர, இது புதிதல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,
பெரியார் அவர்களுடைய 89—வது பிறந்தநாள் விழாவானது இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப்
பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டுவருவது இயற்கையானது.
கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக எல்லாக்கட்சியிலுள்ள
பண்பாளர்களும் வரவேற்கத்தக்கதாக, தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் போற்றத்
தக்க நிகழ்ச்சியாக இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கே வந்திருக்கிற பல்லாயிரக்கணக்கான
மக்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும்
இந்த மாபெரும் கூட்டத்தில் அமைதியாக இருந்தால் தான் இவ்விழாவிந்கு தனிச்சிறப்புத் தேடிக்கொடுத்தவர்களாவீர்கள்.
பெரியாருக்கு நன்றி செலுத்துவோம்
பெரியார் அவர்கள் இன்று 89-வது வயதில் அடி எடுத்து
வைக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில், அவர் நமக்கு இதுவரையில் ஆற்றியிருக்கிற
தொண்டுக்கு—அவர்களால் தமிழகம் பெற்றிருக்கிற நல்ல வளர்ச்சிக்கு—பெயருக்கு அவர்களுக்கு
நாம் நம்முடைய மரியாதையை—அன்பை—இதயத்தைக் காணிக்கையாக்குவதற்கே இங்கே கூடியிருக்கிறோம்.
பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் நேரத்தில் இங்கே நடந்த ஊர்வலமும், அதன் சிறப்பும்
பெரியார் அவர்களுக்கு நம்முடைய வணக்கத்தைத் தெரிவிப்பதற்காகத்தான் என்று எண்ணுவது நமது
கடமையாகும்.
புதிய வரலாறு படைத்தவர் பெரியார்
தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும்,
இன்னும் உலகத்திற்கே கூட என்றும் சொல்லலாம்; அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள்,
ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சிகர உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற
அறிவுப்புனல் தமிழகம் என்றுமே கண்டதில்லை . இதற்குப் பிறகும் இப்படிப்பட்ட மாபெரும்
புரட்சி வேகத்தை நாம் காணப்போவதில்லை---வரலாற்றில் பொறிக்கத்தக்க புதிய வரலாறு என்று
கருதும் நிலைமையை அவர்கள் தன்னுடைய பொதுத் தொண்டின் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள்.
சு.ம. ஆரம்ப காலத்தை நோக்கி என் நினைவுகள்
பிறந்தநாள் கொண்டாடுகிற நேரத்தில் என்னுடைய நினைவுகள்,
திராவிடர் கழகமாகவும், அதற்கு முன்னால் தமிழர் இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும்
இருந்த நேரங்களில். அவர்களோடு இருந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் ஓட விட்டுக்கொண்டிருக்கின்றன.
எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள், எத்தனை காடுமேடுகள் எத்தனை சிற்றாறுகள், எத்தனை பேராறுகள்,
எத்தனை மாநாடுகள் என்று எண்ணிப்பார்க்கிற நேரத்தில், ஒரு போர் வீரன் களத்தில் புகுந்து,
'இந்தப் படையை முறியடித்தேன், அந்தப் படையை வென்றேன்' என்று காட்டி மேலும் மேலும் செல்வதைப்
போல அவர்கள் வாழ்நாள் முழுவதும் களத்தில் நிற்கிற ஒரு மாபெரும்
போராட்டமே நம்முன் காட்சியளிக்கிறது.
சுகபோகங்களைத் துறந்த நம் தந்தை
முதல் போராட்டம் அவர் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும்......!செல்வக்
குடியில் பிறந்தவர் அவர்! தன்னுடைய செல்வத்தை— செல்வாக்கைக் கொண்டு ஊரை அடக்கிப் போகபோக்கியத்தில்
மிதந்து மகிழ்ந்திருக்கலாம், அப்போதிருந்த பலருங்கூட அப்படிப்பட்ட வாழ்க்கையில்தான்
இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தன்னைத் தனியாக்கிக் கொண்டு, தன்னைப்
பிரித்துக்கொண்டு, 'என்னுடைய செல்வம் எனக்கில்லை; என்னுடைய செல்வத்தைக்கொண்டு போகபோக்கியத்தில்
திளைக்கப் போவதில்லை; பொது வாழ்க்கையில் ஈடுபடப்போகிறேன்' என்று எண்ணிய நேரத்தில் அவர்களுக்கிருந்த
செல்வமும், அவருடைய குடும்பத்திலிருக்கின்ற செல்வாக்கும் அதனால் அடையக்கூடிய சுகபோகங்களும்,
அவர்களுடைய மனத்தில் ஒரு கணம் நிழலாடியிருக்கவேண்டும். அப்போது உள்ளத்தில் நிச்சயமாக
ஒரு போராட்டம் எழுந்து இருக்கவேண்டும். 'செல்வத்தில் புரளலாமா? அல்லது வறுமையில், அறியாமையில்
மூழ்கிக் கிடக்கும் தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு என்னை நான் ஒப்படைப்பதா?'
என்ற போரட்டத்தில், தொண்டு உள்ளத்தில் வெற்றியடைந்தார். 'செல்வத்திற்காக அல்ல நான்;
சுகபோகத்திற்காக அல்ல நான், என்னிடத்தில் உள்ள அறிவு, உழைப்புத்திறன், என்னிடத்தில்
அமைந்திருக்கிற பகுத்தறிவு அனைத்தும் தமிழக மக்களுக்குத்தேவை; தமிழகத்திற்குமட்டுமல்ல—முடிந்தால்
இந்தியா முழுவதற்கும் தேவை; வசதிப்பட்டால் உலகத்திற்கே தேவை; வீட்டை மறப்பேன், செல்வததை
மறப்பேன், செல்வம் தரும் சுகபோகங்களை மறப்பேன்' என்று துணிந்து நின்று அந்தப் போராட்டத்தில்
முதன்முதலில் வெற்றி பெற்றார்.
இதில் பிரமாதம் என்ன இருக்கிறது என்று. எண்ணக்கூடும்
செல்வம் இல்லாதவர்கள். செல்வம் உள்ள வர்கள் அவற்றை விட்டு விட்டு
வெளியே வருவது ஒருபுறம் இருந்தாலும் ஒருவர் கையில் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து ஒரு
மணி நேரம் அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால், வைத்திருப்பவர் வாயில்
நீர் ஊரும்; நேரம் செல்லச் செல்ல பலாச்சுளையில் மொய்த்துக்கொண்டிருக்கிற ஈயோடு சேர்த்துச்
சாப்பிடுவார்களே தவிர, பார்த்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்.
பெரியார் குடும்பத்தின் சிறப்பு
பெரியார் குடும்பத்தின் நிலை எப்படிப்பட்டது? எந்தப்
பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு; எப்பக்கம் திரும்பினாலும் வாணிபத்தில்
ஆதாயம்;நிலபுலன்கள், வீடுவாசல்கள், இவைகள் எல்லாவற்றையும் பார்த்து, 'இவைகள் எனக்குத்
தேவை இல்லை' என்றார். 'என் நாட்டு மக்களுக்கு, அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் நாட்டு
மக்களுக்கு, நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்றுப்போயிருக்கும் மக்களுக்கு
வேறு ஒரு செல்வத்தைத் தருவேன்; அறிவுச் செல்வத்தைத்தரப் போகின்றேன்; சிந்தனைச் செல்வத்தைத்
தரப் போகிறேன்; பகுத்தறிவுச் செல்வத்தைத்தரப் போகிறேன்; அவற்றை ஏற்று நடக்கத்தக்க துணிவைத்
தரப்போகிறேன்; அதைத் தடுப்பார் எவரேனும் குறுக்கிடுவார்களானால், அவர்களுடைய ஆற்றல்களையும்
முறியடிப்பேன்;—இதுதான் என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள்' என்று அவர்கள் கிளம்பினார்கள்,
அதுதான் வாழ்க்கையின் முதல் போராட்டத்தில் அவர் பெற்ற வெற்றி!
பெரியாரின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி
அதற்குப் பிறகு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும்
வெற்றிதான் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றிகள் எல்லாம் நாம் எடுத்துக்கொண்டிருக்கிற
காரியங்களுக்குப் போதுமானதாக அமையவில்லையென்று செட்டிநாட்டரசர் அவர்கள் சொன்னார்கள்.
ஒப்புக்கொள்கிறேன்; —அந்தப் போராட்டத்துக்கான இன்றையதினச் சூழ்நிலை
என்ன? எந்த நிலையில் மொழிப்பிரச்சனை வந்திருக்கிறது? என்று பார்க்க வேண்டும்.
1934,35,36-ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்பு மொழி என்றல்ல;
தேசிய மொழி, என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு; அதுதான் இந்தி;
இந்தத்தேசத்திற்கு இருக்கத் தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935-ல் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்
என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே
மூலபலம் இருக்கிறது என்று கண்டு பிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவதுதான் அவருடைய
போர் முறையாகும்.
'தேசிய'த்தை எதிர்த்து பெரியார் போர்க்கொடி
ஆகையினால், இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என்று
சொன்னவுடன், 'தேசியம் என்பது மகாப்புரட்டு! இந்தியா என்கிறீர்களே, இந்தியா என்பது மிகப்பெரிய
கற்பனை' என்றுகூறி, அவை இரண்டையும் உடைத்து எறிவதுதான் என்னுடைய வேலை' என்று கிளம்பினார்கள்.
அப்படி இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக்கொள்ளக் கருதி தேசியத்தையும்,
இந்தியாவையும் உடைத்துவிடக்கூடாது என்று தேசியம்' என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு,
“இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி ; ஆனால்,
இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டு' மென்று
சொன்னார்கள். அப்போது பெரியார், 'ஆட்சிமொழி என்பது பின்னால் இருக்கட்டும்; உங்களுடைய
ஆட்சியின் லட்சணம் என்ன? யார் யாரை ஆளவேண்டும்?. எதற்காக ஆளவேண்டும்?' என்று ஆட்சி
முறையைப்பற்றி அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள் ஆட்சிமொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும்
என்று நேசம் கொண்டாடுகிறார்கள்; பாசம் காட்டுகிறார்கள்: சொந்தம் கொண்டாடுகிறார்கள்;
'நாம் இணைந்திருக்கவேண்டாமா? அதற்கு இணைப்பு மொழிதேவையில்லையா?' என்று வலியவலிய கேட்கிறார்கள்.
தேசியத்திலிருந்து நழுவி, இன்று இணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப்
பெரிய காரணம் பெரியார் அவர்கள் கடத்திய அறப்போராட்டம் தான்.
மொழிப்பிரச்சனை, அவர்களைப் பொறுத்தவரையில் மிகச்சாதாரணமான
பிரச்சனை . அவர்கள் முக்கியமாகக் கருதுவது தமிழ்நாட்டு மக்களிடையே மனிதத்தன்மை வர வேண்டும்;
அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற காட்டுமிறாண்டித்தனமான கொள்கைகள், நாட்டை கடக்கத்தக்க
கொள்கைகள், மனிதனை மிருகமயமாக்கத்தக்க கொள்ளைகள், வெளிஉலகத்தாராலே இரண்டு மூன்று நூற்றாண்டுகளுகு
முன்பே உதறித் தள்ளப்பட்ட, உருப்படியற்ற கொள்கைகள் மறைய வேண்டும்; இவைகள் நீக்கப்பட்டுத்
தமிழக மக்கள் துல்லியமான மனத்துடன், தூய்மையான எண்ணத்தில் —செயல் —திறனில் பகுத்தறிவாளர்களாக,
பண்பாளர்கத் திகழவேண்டும்; அதற்கு ஒரு அறிவுப்புரட்சி தேவை என்பதிலே அவர்கள் நாட்டம்
அமைந்திருக்கிறது; அந்த நாட்டத்தின் உருவம்தான் பெரியார் அவர்கள் என்றால் அதுமிகையாகாது.
இருநூற்றாண்டுப்பணியை
20 ஆண்டுகளில் செய்துகாட்டினார்
எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய
காரியங்களை இருபதே ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள், அய்ரோப்பா கண்டத்தை
எடுத்துக்கொண்டால் நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள் அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு
50 ஆண்டுகள் என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்பதற்காக
ஒரு வால்டேர், ரூஸோ இப்படித் தொடர்ச்சியாகப் பலர் வந்து வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள்
பாடுபட்டுத்தான் பகுத்தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தது. இப்படி இரண்டு
நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களைப் பெரியார் அவர்கள் இருபதே ஆண்டுகளில் செய்துமுடிக்க
வேண்டுமெனக் கிளம்பினார்கள்; திட்டமிட்டார்கள்; அந்த திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிக்கொண்டுவருகிறார்கள்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள். "Puttiing centurico into
capsules” என்று. சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளிலே
தருவது போல, பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து, அவர்கள் தம்முடைய வாழ்காளிலேயே
சாதித்துத் தீரவேண்டுமென்று, வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று; அறிவோடும், உணர்ச்சியோடும்,
நெஞ்சு ஊக்கத்தோடும் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைக்கூட இரண்டாந்தரமாக
வைத்துக்கொண்டு, எந்த அளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும்
போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார்கள்.
பெரியார் போராட்டப்பாதையில் நான்
அந்தப் போராட்டக்களத்தில் அவர்கள் நின்றிருந்த நேரத்தில்,
சில பகுதிகளில் நான் உடனிருந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக, மகிழ்ச்சியடைகிறேன்.
நான் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் முதலில் அவர்களிடத்தில்தான்.. சிக்கிக்கொண்டேன்.
நான் சிக்கிக்கொண்டது வாலிபப் பருவத்தில்...! எங்கெங்கோ போய்ச்சிக்கிக்கொண்டிருக்க
வேண்டியவன். அவர்களிடத்தில்தான் முதன்முதலில் சிக்கிக்கொண்டேன், நான் காஞ்சிபுரத்தில்
கல்லூரியில் படித்த படிப்பையும், அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ, அவற்றையெல்லாம்
உதறித் தள்ளிவிட்டு, ஈரோட்டில் போய்க் குடியேறினேன். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
இதுபற்றி என்னுடைய பாட்டியார் அப்போது அவரை ஒத்த மூதாட்டிகளோடு
பேசும் போது அடிக்கடி சொல்லுவார்கள். ஆறுமாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
காஞ்சிக்குச் செல்கிற நேரங்களில், அவர்கள் என்னைப்பற்றி, மற்றவர்களிடம் சொல்லும்போது
யாரோ ஈரோட்டிலிருந்து வந்த ஒருவன் என்னுடைய பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டான்
என்று பேசுவார்கள். அவர்களே ஒரு தடவை காஞ்சிபுரத்தில் ஆடிசன்பேட்டையிலே நடைபெற்ற ஒரு
பொதுக்கூட்டத்தில், பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு சொன்னார்கள், என்னைப்பார்த்து;
'நீ ஈரோட்டிலேயே இரு' என்று. இத்தனைக்கும் அவர்களுக்கு அதிகமாக படிப்பு அறிவு இல்லை
. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், துவக்கத்தில் அவர்களிடத்தில் இருந்த காலத்தில்
ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பலப்பல இருக்கின்றன; என்னுடைய வாழ்நாள் முழுதும் எண்ணி எண்ணி
மகிழத்தக்கவை அவை. இப்போது எனக்குக் கிடைத்திருப்பது, இனி எனக்குக் கிடைக்கக்கூடியது
என்று எந்தப் பட்டியலைக்காட்டினாலும் நான் ஏற்கனவே பெற்றிருந்ததைவிட இவையெதுவும் மகிழ்ச்சியிலோ,
பெருமையிலோ நிச்சயமாக அது அதிகமானதாக இருக்க முடியாது.
நீதிக்கட்சியின் தலைமையும்
சு. ம. இயக்கத்தின் வெற்றியும்
அவரிடத்திலே அப்போது, ஓடாது என்ற காரணத்தால் தரப்பட்ட
ஒரு ஃபோர்டு மோட்டார் இருந்தது. அதிலேதான் நானும், அவரும் ஏறிக்கொண்டுசெல்வோம். ஏறிக்கொண்டு
செல்வோம் என்று சொல்வதற்குக் காரணம் அது பலநேரத்தில் ஓடாது; பிடித்துத் தள்ள வேண்டும்.
அந்த மோட்டாரில் கிளம்பிய நேரம் தமிழகத்தில் நீதிக்கட்சி அடியோடு தரைமட்டமாக்கப்பட்ட
நேரம். இனி, காங்கிரசுக்கு எதிராக வேறு மாற்றுக் கட்சி உண்டாகவே முடியாது என்ற நிலைமை
ஏற்பட்ட பொழுது; நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டே வருடத்தில்
அந்த நீதிக்கட்சி என்ற அரசியல் இயந்திரத்தை சுயமரியாதை இயக்கம் என்ற எஞ்சினோடு பூட்டி, வெகு வேகமாக அதை இயக்க ஆரம்பித்தார். இதே திருச்சியில்
புத்தூர் மைதானத்தில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடைபெற்ற நேரத்தில்—நாளை காலை மாநாடு;
இன்றிரவு மிகப்பெரிய மழை; அதனால், கொட்டகை முழுவதும் முழங்கால் அளவுக்குத் தண்ணீர்
தேங்கியிருந்தது. பெரியார் பார்த்து, அவருடைய தொண்டர்களை அழைத்து, இப்படி இருக்கிறதே,
நாளைகாலை மாநாடு நடக்குமா ?' என்று கேட்டார்கள், அதற்கு அத்தொண்டர்கள் நடக்கும் என்றார்கள்;
அப்படியே காலையில் நடந்தது. தண்ணீரிலா என்றால் இல்லை; தொண்டர்களின் உழைப்பினால் தண்ணீர்
இறைக்கப்பட்டு, மணல் தூவப்பட்டு, . காலையில் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதை நான்
சொல்வதற்குக் காரணம் முழங்கால் அளவுக்குச் சேறு இருந்த இடம் பக்குவப்படுத்தப்பட்ட மாதிரி
தமிழகமக்களின் மனத்தில் ஊறிப்போயிருந்த சேற்றை அவர்கள் துடைத்தெறிந்தார்கள்; தனது வாழ்நாளிலேயே
அதை முடித்தார்கள்.
வடநாட்டினரை வியப்புறச்செய்த பெரியார்
20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களோடு நான் வடநாட்டிற்குச்
சென்றிருந்த நேரத்தில், வடநாட்டில் உள்ள பல தலைவர்கள், இந்தியப் பேரரசில் பெரிய உத்தியோகத்தில்
இருந்தவர்களெல்லாம்—பெரியாரைப் பார்த்து, "பெரியார் அவர்களே! உங்களை இன்னுமா விட்டுவைத்திருக்கிறார்கள்"
என்று கேட்டார்கள். அதற்குப் பெரியார் அவர்கள், “நான் என்ன தவறு செய்தேன் ? எதனால்
எனக்கு ஆபத்து வரப்போகிறது?" என்று சொல்லிய நேரத்தில், "நீங்கள் பேசுவதில்
பத்தாயிரத்தில் ஒரு பகுதியை, நீங்கள் செய்வதில் ஆயிரத்தில் ஒரு பகுதியை நாங்கள் சொன்னாலும்,
செய்தாலும் எங்களை அடியோடு அழித்திருப்பார்கள். நீங்கள் எப்படித் தப்பிப் பிழைக்கிறீர்கள்
?" என்று சொன்னார்கள். அப்படிக் கூறும் அளவுக்கு வீரமிக்க காரியங்களை, வேறுயாரும்
எண்ணிப்பார்க்க முடியாத காரியங்களை, நடத்திக் காட்ட முடியாத காரியங்களை நடத்திக் காட்டி, அதில் பெற்ற வெற்றிகளை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
அவர் சாதித்த காரியங்கள் மிகப்பெரியவை. என்றாலும் அவர் துணையோடு நாம் சாதிக்கவேண்டிய
காரியங்கள் நிரம்ப இருக்கின்றன். ஒரு பெரிய மலை பிளக்கப்பட்டிருக்கின்றது. கற்பாறைகள்
எல்லாம் கீழே உருண்டு வந்துகொண்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் பக்குவப்படுத்தி, அவைகளை
எந்தெந்த வடிவத்திலே நாம் செதுக்க வேண்டுமோ, அதில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
பெரியார் அழைக்கிற அழைப்பைக் கேட்காத தமிழ்மக்கள் என்றுமே இருந்ததில்லை. அவர்கள் கூப்பிடும்
குரலுக்கு ஓடிவரத் துடிக்காத இளைஞர்கள் இருந்ததில்லை. அப்படிப்பட்ட மாபெரும் தலைவருடைய
89வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமையடைகின்றேன்.
என்னுடைய நண்பர்கள் என்னை இவ்விழாவுக்குத் தலைமையேற்க வேண்டுமென்று கேட்ட நேரத்தில்,
திராவிடர் கழகம் நடத்துகின்ற இந்த விழாவில் தலைமை வகிக்கவேண்டுமென்று கேட்டார்கள் அவர்களுக்குத்
திராவிடர் கழகத்தின் வரலாறு தெரியாத காரணத்தால் ! "திராவிடர் கழகம் என்று பெயர்
வைத்தவனும் நான் தான். அதைக்கொண்டு நாட்டிலே பெரிய புரட்சியை உண்டாக்க முடியும் என்ற
நம்பிக்கையையும் நிரம்பப் பெற்றவன் நான் ! ஆகையினால் நான் இங்கே தலைமை வகிப்பது இயற்கைக்கு
மாறானதல்ல.
பெரியார் இருநூறாண்டு
வாழவேண்டும்
செட்டிநாட்டரசர் (எம்.ஏ. முத்தையா செட்டியார்) அவர்கள்
நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நம்மோடு இருந்திருக்கிறார்கள்.
தமிழ் காப்பாற்றப்படவேண்டும் என்ற காலத்திலேயும், நீதிக்கட்சி காலத்திலேயும், மற்ற
எல்லாக் கட்டங்களிலும் அவர்கள் நம்மோடு இருந்து நமக்குத் துணைபுரிந்திருக்கிறார்கள்.
ஆங்கில மொழியின் அவசியத்தை, அவர்கள் இன்று நேற்றல்ல, 30 ஆண்டுகளாக, இங்கு மட்டுமல்ல,
சட்ட மன்றங்களில் கூட வெகு தெளிவாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
அப்படிப்பட்டவர் இன்று பெரியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியது. என்னைப் பொறுத்தவரையில்
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என்பதனை நான் சொல்லிக்கொள்ளவா வேண்டும்? ஒரு சமயம்
அந்தப் பொன்னாடைக்கும் பெரியாருடைய மேனிக்கும் வித்தியாசமில்லாததால், அது பொன்னாடை
என்று அறிந்துகொள்ள முடியாமலிருந்திருக்கலாம். ஆனால், அதைப் போர்த்திய நேரத்திலே செட்டிநாட்டரசர்
அவர்களிடத்தில் காணப்பட்ட கனிவு. அதைக் கண்டவுடன் பெரியாருக்கு ஏற்பட்ட உருக்கம், அதைக்
கண்டு நமக்கெல்லாம் ஏற்பட்ட மகிழ்ச்சி இவை வாழ்க்கையில் என்றோ ஒரு நாள் கிடைக்கக்கூடியவை
அதனால்தான், அந்த மகிழ்ச்சியை இனியும் நாம் பெற வேண்டும் எனபதால்தான் பெரியார் அவர்கள்
நூறு ஆண்டுகள், இரு நூறு ஆண்டுகள் வாழவேண்டுமென்று நாம் நம்முடைய நல்லெண்ணத்தை அவருக்குத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரியார் வாழ்வே தமிழினத்தின் பெருவாழ்வு
ஏன் அவ்வளவு காலம் வாழவேண்டுமென்று சொல்கிறோமென்றால்,
அவர்களை மறக்கிற நேரத்தில், நம்மையறியாமல் ஒரு பலவீனம் நமக்கு வருகிறது; அவர்களை எண்ணிக்கொள்கிற
நேரங்களில் நமக்குத் தைரியம் வருகிறது. அவர் இருக்கிறார் என்ற நினைவு வரும் போது, அவர்
இருக்கிறார் என்றவுடன், பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியமும் நமக்கு வருகிறது.
அந்த நினைவு அரசியல் துறையில் உள்ள என்போன்றோர்க்கு மட்டுமல்ல; வணிகத் துறையில் தமிழர்கள்
சங்கடப்படும் போது பெரியாரைத்தான் எண்ணிக்கொள்கிறார்கள். பெரியார் சொல்கிறபடி நடந்தால்
நாம், பிழைக்க முடியும் என்று தமிழ்ப்புலவர்கள் கருதுகிறார்கள். பெரியார் சொல்கிறபடி
'இந்தி’ விரட்டப்பட்டால்தான் நமக்கு மதிப்புக் கிடைக்குமென்று எண்னும் அரசியல் வாதிகளைப்பற்றி
நான் சொல்லத்தேவையில்லை. இன்றைய தினம் பெரியாருடைய குடும்பத்தில்,
ஒரு பெரிய குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு திக்கிற்குச்சென்று,
'நான் இந்தத் திக்கில் போய் இதைக் கொண்டு வந்தேன்; அண்ணன் அந்தத் திக்கிலே போய் அதைக்கொண்டுவந்தான்.'
என்று சொல்வதைப் போல் அவருடைய பிள்ளைகள், எல்லாக்கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக்
கட்சியில் அவர்கள் இல்லை? எந்தப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் சோடை போனவர்கள் அல்லர்.
அவர்கள் எதையெதைப் பெறவேண்டுமென்று கருதுகிறார்களோ, அதைப்பெற்றுக் குடும்பத்தில் நடக்கிற
விழாவில் அவர்கள் பெற்றவற்றைப் பெரியார் அவர்களிடம் காட்டி, 'இதோ பாருங்கள் நான்பெற்றது'
என்று ஒவ்வொருவரும் காட்டும்போது உரிய புன்னகையோடு அவற்றைப் பார்த்து, 'நான் கேட்டது
இதுவல்லவே' என்கிறார்கள்; அவர்கள் கேட்டதைப் பெற்றுத் தரத்தக்க ஆற்றல் யாரிடத்திலும்
இல்லை. ஆனால், அதைப் பெற்றுத்தரும் பொறுப்பு அவர்களிடத்தில்தான்! அப்படிப் பெற்றுத்தந்தால்
அதைப் போற்றிப் பாதுகாத்துக்கொள்ள என்னாலே முடியும்; அது கிடைத்தால் யாருக்கு என்ன
பங்கு என்று கேட்கச் சிலர் இருக்கலாம்.
பெரியாரின் அறிவுப்புரட்சி வெற்றி பெற்றே தீரும்
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப்புரட்சி சுலபத்தில் நிற்கப்போவதில்லை. அது
போகவேண்டிய தூரத்திற்குப் போய், அடையவேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும்.
எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடையவேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம்
நிற்குமோ அதைப்போல், அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலட்சியத்தை அடையவேண்டுமோ
அதையடைந்தே தீரும்; அதில் அய்யம் யாருக்கும் இல்லை; அதில் கால அட்டவணையைக்கூட நாம்
கருதத் தேவையில்லை. அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
30 ஆண்டுகளுக்கு
முன்பும் இன்றும்.........
30 ஆண்டுகளுக்கு
முன்னாலே தமிழகத்தில் பேசுவதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களை இன்று நமது
எட்டு வயதுச் சிறுவன் வெகு தாராளமாகப் பேசுகிறான். 20 ஆண்டுகளுக்கு முன்னாலே நம்முடைய
மனத்தில் பயந்துகொண்டிருந்த தத்துவங்கள், இன்றைய தினம் கேலிக்குரியதாகுமென்று நாடே
சொல்கிறது. இரண்டு நூற்றாண்டுகள் பாடுபட்டு உண்டாக்க வேண்டிய அறிவுப்புரட்சியை இருபது
ஆண்டுகளில் அவர்கள் சாதித்துக் கொடுத்ததால் நமக்கெல்லாம் எளிதாக இருக்கிறது; எல்லாம்
சுலபமாக இருக்கிறது.
ஆனால், இது எளிதாகும். அளவுக்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள்
எத்தனையோ, நன்றாக நினைவுக்கு வருகிறது. நானும் அவரும் ஒருமுறை சிவகங்கை மாநாட்டுக்குப்
போன நேரத்தில், அந்த ஊர் முழுதும் பழைய செருப்புக்களை அங்கே தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டார்கள்.
இன்று நடந்த ஊர்வலத்தில் மாலை போட்டார்கள்; கம்பீரமாகச் செல்கிறோம்; ஆங்காங்கே கொடிகளும்
அசைந்து வாழ்க! வாழ்க! வென்று வாழ்த்துகின்றன. ஆனால், அப்போது சிவகங்கையிலே தொங்கியது
தோரணங்கள் அல்ல; அறுந்துபோன பழைய செருப்புக்கள். அப்படி அறுந்துபோன செருப்புக்களை எடுத்துத்
தோரணமாகக்கட்டியவர்களின் பிள்ளைகளிலே சிலர் இந்த மண்டபத்திற்கு வந்திருக்கலாம் என்று
கருதுகிறேன்; அப்படிப்பட்ட மாறுதல் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அவரை முதலிலே புரிந்துகொள்ள
மறுத்தார்கள்; புரிந்துகொள்ள மறுத்தவர்கள் பிறகு புரிந்து ஏற்றுக்கொண்டனர்; ஏற்றுக்கொண்டவர்களும்
விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் அப்போதிருந்தார்கள். இப்போது அவர் பேசுவது எல்லோருக்கும்
புரிந்துவிட்டது; பெரும்பாலோருக்கு அது பிடித்துவிட்டது; அதில் மிகப்பெரும்பாலோர்.
அவற்றைத் தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ச் சமுதாயத்தின் உயிர்ச்சக்தி
பெரியார்
இப்படி ஒரு சமூகத்தை, நாட்டுமக்களை ஆளாக்கி விட்ட
பெருமை உலகத்தில் பல தலைவர்களுக்குக் கிடைத்ததில்லை; நம்முடைய தமிழகத்தில் பெரியார்
அவர்களுக்குத்தான் அந்தத் தனிப்பெருமை சேர்ந்திருக்கிறது; அந்தப் பெருமைக்குரியவர்களாக
நாம் நம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர் அளித்துள்ள செல்வம்—அவர் நமக்குக் காட்டியுள்ள
லட்சியப்பாதையில் நடந்து செல்லுதற்கேற்ப ஆற்றல் நமக்கு வரவேண்டுமென்று, அவர் இன்றைய
தினம் நமக்கெல்லாம் வாழ்த்துச்சொல்ல வேண்டும். அந்த வாழ்த்துநமக்குப் புதிய வல்லமையை,
புதிய உற்சாகத்தைத்தரும் என்பதில் அய்யமில்லை.
அய்யாவே! தமிழினத்தை வாழ்த்துங்கள்
"என்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டவர்களே!
என்னுடைய வழியைப் பின்பற்றியவர்களே ! நாம் செல்லுகின்ற பயணம் மிக நீண்ட பயணம்; அதிலே
நடந்து செல்வதற்கான வல்லமை, வலிவு தாங்கும் சக்தி உங்களுக்கெல்லாம் வேண்டும்; அவைகள்
எல்லாம் உங்களுக்கு வரவேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்" என்று அவர் நமக்கு
வாழ்த்துக்கூற வேண்டும்.
பெரியார் கட்டளையை ஏற்போம்
அப்படிப்பட்ட வாழ்த்தை நமக்குக் கொடுத்து வழிகாட்டி,
அழைத்துச் செல்ல அவர்களைப் பார்த்துக்கேட்கும்போது, அவரே பார்த்து, யார் யாரை எங்தெந்த
வேலைக்கு அனுப்ப வேண்டுமென்று கருதுகின்றாரோ, அந்தந்த வேலைக்கு அனுப்பி தமிழகத்திற்கு
மொத்தத்தில் நன்மை கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை, அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்து இன்னும்
பன்னெடுங்காலம் நம்மோடு வாழ்ந்திருந்து, நம்முடைய தமிழகம் யாருக்கும் தாழ்ந்துவிடாமல்,
யாரையும் தாக்காமல், எவராலும் சுரண்டப்படாமல், எந்தப் புரட்டுக்கும் ஆளாகா மல், எந்தப்
புரட்டையும் மூட்டிவிடாமல் தன்னிகரற்ற காலத்தை உருவாக்கித் தந்துவிட்டு,
அதை அவர் கண்டு களிக்கவேண்டும் அதிலேதான் அவர் கவலை—லட்சியத்தில் வெளிப்படையாகத் தெரிகிற
பொன் ஓவியத்தை அவர் காண இயலும் அதைக் காணுவதற்கான அறிவாற்றலோடு, திறமையோடு, தகுதியோடு
தமிழ்மக்கள் இன்றைய தினம் அவரை இலட்சக்கணக்கான பேர் பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள்.
அவர்களிலே ஒருவனாக இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய உளம் கனிந்த நன்றியை நான் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்—அவர்களுடைய
அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்ற முறையில் என்றைய தினமும் அவர்கள் கடுமொழியைக்
கேட்காதவன் என்ற முறையிலே, அவர்களுக்கு என்னிடமிருக்கின்ற தனிப்பட்ட பாசத்திற்கு என்னுடைய
இதயம் கலந்த, கனிவு நிறைந்த, நட்பு மிகுந்த, தூய்மை நிறைந்த வணக்கத்தையும், மரியாதையையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
[திருச்சியில் 17-9-67-ல் நடைபெற்ற தந்தை பெரியார்
அவர்களின் 89-வது பிறந்தநாள் விழாவிற்குத்
தலைமையேற்று ஆற்றிய உரை]
இராமாயணத்தை எரிப்பது எதற்காக?
இராமாயணம், பெரியபுராணம் ஆகியவை புளுகுகள். அவை மக்களின்
மனத்தைப் பாழ் செய்கின்றன; ஒரு இனத்தை ஒரு இனம் ஆதிக்கம் செய்ய வேலை செய்கின்றன. ஆகவே,
அவை களை மக்கள் வெறுக்க வேண்டும்—கண்டிக்க வேண்டும் என்பதைக் காட்டவே நாங்கள் அவைகளைக்
கொளுத்தவேண்டுமென்று கூறுகிறோமே யன்றி, அவைகளைக் கொளுத்திவிடுவதாலேயே மூடப்பழக்க வழக்கம்
போய்விடும் என்று நாங்கள் சொன்னதில்லை.
[11-2-44ல் ஈரோட்டில் தமிழ் மாநில
நாடகக் கலை அபிவிருத்தி மாநாட்டில்]
பகுத்தறிவே இளஞர்களை ஆளவேண்டும்
"பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப்
பாடுபடுவதோடு, சமூகத்திற்கான பணிகளையும் செய்யவேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை
எங்கும் வீசச்செய்பவர்களாக நீங்கள் திகழவேண்டும்.
பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை
மறுப்பதாகாது; எதையும் காரணங்கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்களை,
செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.
அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று
ஒரு முறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம்.
ஆயினும் அந்த முறைகளை இளமை குன்றாது தீவிரத் தன்மையோ டு கூடியதாக வைத்திருக்க நாம்
தவறிவிட்டோம். நம் வாழ்க்கை முறை நிலைக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக்கொள்ளத்தக்க,
புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக
விளங்கவேண்டும்.
பெரியாரைப் பின்பற்றுவோம்
நெடுங்காலமாக பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி,
அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக் கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.
இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம்
உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம்
பல புதிய முடிவுகளை எய்தியதுடன் உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில்
திருப்திகொள்கிறோம் நம்மையறியாமல் இவற்றைப்பாதுகாக்கக்கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம்.
இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துக்களைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறை
கூறத்துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை. பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில்
ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துக்களை
ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறை கூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய
உள்ளங்களையும் தங்குதடையின்றி ஆளவேண்டும். சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும்
போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும் நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப்
பெருக்க வேண்டும்.
சாதி முறையை எதிர்த்துப்
போர் தொடுங்கள்
பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினை சீரமைக்கும் பணியில்
ஈடுபடவேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெற்று வெளியேறுவோர் 'இப்பணிக்குத் தூதுவர்களாக
விளங்கவேண்டும். சாதிமுறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.
விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழமுடியாத மூடப்பழக்கங்களுக்கு எதிராக போர் தொடுக்கும்படியும்
உங்களை வேண்டுகிறேன்.
[அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு
விழாவில் 18-11-67 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி]
சுயமரியாதைத் திருமணத்தின்
சிறப்புக் காணீர்
".........சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டால்,
நல்வாழ்வு அமையாது என்று முதலில் சொன்னார்கள். அதன்பின், சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டால்
குழந்தை பிறக்குமா? என்று சந்தேகப்பட்டார்கள். குழந்தை மட்டுமல்ல பேரன்-பேத்திகளையும்,
சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பல்லாயிரக்கணக்கானவர் பெற்று, அவரவர்களுக்கும் சுயமரியாதைத்
திருமணமே செய்துவைத்திருக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்களால் தமிழர் சமுதாயத்தில் புரட்சிகரமாகத்
தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள், பெரியார் அவர்கள் தலைமையிலும், மற்ற தோழர்கள்
தலைமையிலும் செய்து கொண்ட பல்லாயிரவரில் சிலர் வசதி படைத்தவர்கள்; சிலர் உத்தியோகங்களில்
உள்ளவர்கள் என்றாலும் பலர் ஏழைகள்—அன்றாடம் வேலை செய்து சாப்பிடக்கூடியவர்கள்—சமுதாயத்தில்
ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அவர்கள் இது சட்டத்திற்கு உட்பட்டதா, உட்படாததா என்பதையெல்லாம்
எண்ணிப் பார்க்காமலே இத்திருமணத்தைச் செய்துகொண்டு வந்துள்ளனர்; சட்டத்தைப்பற்றி கவலைப்படவே
இல்லை. சட்டம் இல்லையே என்று இது போன்ற திருமணங்கள் நடைபெறாமலுமில்லை. நியாயப்படி இம்முறையானது
துவங்கியபோதே சட்டம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு நாட்டில் ஒரு முறையை பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால்,
அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
நமக்கு ஒவ்வாததும், எவ்வகையிலும் பொறுத்தமற்றதும்,
நம்மோடு ஒன்றியிருக்க முடியாததுமான சம்பிரதாயங்கள் எப்படியோ நமது சமுதாயத்தில் புகுத்தப்பட்டுவிட்டன.
நமக்குத் தேவையற்ற காரியங்களை நீக்கவேண்டுமென்று கருதி, முதலில் திருமண மூறையில் இருந்த
தேவையற்ற, பொருளற்ற சடங்குகளை நீக்கிப் புதுமுறையான திருமண முறையைகையாள வேண்டியதாயிற்று.
இதனை நம் மக்கள் பெருமளவு கையாள ஆரம்பித்துவிட்டனர். இன்று நாட்டில் பெருமளவிற்கு இம்முறை
பரவிவிட்டது. இதை ஆரம்பித்தபோது ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் ஆயிரமாயிரம்.
இன்றைய தினம் தார்போட்ட ரோட்டில் காரோட்டி காரை விரைவாக ஓட்டுவதுபோல், எல்லோரும் இம்முறையினைப்
பின்பற்றத் துவங்கிவிட்டனர். இம்மிறையில் செய்யப்படுவதை எல்லோருமே பெருமையாகக் கருத
ஆரம்பித்துவிட்டனர். இத்திருமண முறை சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று இருந்தபோதும்,
லட்சக்கணக்கான திருமணங்களில் வழக்கு மன்றம் போனது என்பது 2,3 தான் இருக்கலாம். அதுபோன்று
வைதீகத் திருமணங்களில்கூட பல வழக்குமன்றங்களுக்கு வந்திருக்கின்றன.
சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டமாக்கினோம்
இதனை நாங்கள் சட்டபூர்வமாக்கிய போது, சட்டமன்றத்தில்
முன்பு ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு. கேலி பேசிய காங்கிரஸ் நண்பர்களும் இப்போது இதை
மிகத்தீவிரமாக ஆதரித்துப் பேசினார்கள்; மிக அவசியம் செய்யவேண்டியது என வலியுறுத்தினார்கள்.
அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்."
[தமிழகச் சட்ட
மன்றத்தில் சுயமரியாதைத்
திருமணச் செல்லுபடிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட
பிறகு, முதன் முதலாக விருதுநகரில் 6—12—67
அன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்
திருமணத்தை நடத்திவைத்து ஆற்றிய உரை]
பொதுத் தொண்டினை
ஓர் கலையாகவே
மாற்றிவிட்டார் பெரியார்
"......பெரியார் அவர்கள் சொன்னார்கள் - நான்
சொன்னதை யெல்லாம் அப்படியே நம்பாதீர்கள்: உங்கள் அறிவைக்கொண்டு சிந்தித்து, உங்களுக்குச்
சரியென்று பட்டதை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்கள், ஏன் அப்படிச் சொன்னாரென்றால்,
சிந்திக்க ஆரம்பித்தால் அதில் எதுவும் சிறு தவறு கூட இருக்காது. அவர் சொன்னவையெல்லாம்
உண்மை என்பது நன்றாகவே தெரியும். அதைக் கண்டுபிடிப்பதில் சிந்திப்பவனுக்குத் தைரியம்
தானாகவே வந்துவிடும். அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிவருகிற பெரியார்
அவர்கள் பல ஆண்டுகாலமாக எடுத்துச்சொல்லியும், இன்னமும் மக்கள் திருத்தாமலிருக்கிறார்களே
என்ற கவலையால் கடுமையாக நம் இழிநிலையைச் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் அவர்கள் காலத்தில்
அவரது கண்களுக்குத் தெரியுமாறு நாட்டில் இன்று பல சீர்திருத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.
பெரியார் அவர்கள் தனது தொண்டின்மூலம் பொதுத்தொண்டினை
ஒரு கலையாகவே மாற்றியுள்ளார்கள் ரயில் புறப்படுகிற நேரத்தில் ரயிலில்
போகவேண்டியவன் காப்பியை அருந்திக்கொண்டு மிக் சாவகாசமாக
இருந்தால் பெரியவர்கள், நாலுவார்த்தை திட்டி, காப்பி பிறகு குடிக்கலாம்; வண்டி போய்விடும்;
வண்டியிலேறு என்பதுபோல, "உலகம் இவ்வளவு முன்னேறியிருக்கிறது; நீ இன்னும் இப்படி
இருக்கிறாயே?" என்ற கவலையால், கடினமாகவும், வேகமாகவும் வலியுறுத்தி நமக்குப் பகுத்தறிவைப்புகட்டுகின்றார்.
பெரியாரின் முதல்கவலை நம் சமுதாயத்தைப்
பற்றியதே
எனக்கு நன்றாகத் தெரியும் : அவருக்குள்ளகவலை; 'இத்தனை
ஆண்டுகள் பாடுபட்டும் இந்தச்சமுதாயம் இன்னும் இப்படியே இருக்கிறதே; இதை எப்படி முன்னுக்குக்
கொண்டுவருவது? உலகமக்களோடு சமமாக்குவது?'என்கின்ற கவலை அவருக்கு நிறைய இருக்கிறது.
பெரியார் அவர்கள் நினைப்பது போலில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்று மாறுதல் ஏற்பட்டுத்தான்
இருக்கிறது.
வேகமான மாற்றம் தேவை
இன்றைக்குச் சமூகம் நெருமளவுக்குத் திருந்தி இருப்பதை
உணருவார்கள். 30,35 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மன்றங்களில், தாங்கள் சைவர்கள், தாங்கள்
வைணவர்கள் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக தங்களின் நெற்றியிலே பூச்சும் நாமமுமாகத் தான்
எல்லோரும் வந்திருப்பார்கள். இன்றைக்கு 100க்கு 5 பேர் நெற்றியில்கூட குறிகள் காண்பது
அரிது. அதுவும் வியர்வையினால் பாதி மறைந்தும் மறையாமலும் இருக்கிறது. இப்படிச் சமுதாயமானது
வைதீகக்கட்டுக் குலைந்துகொண்டிருக்கிறது. பெரியாருக்கிருக்கிற கவலை இன்னும் வேகமாக
மாற வேண்டும்; ஒரேயடியாக மாறவேண்டுமென்பதே! இந்தச் சமுதாயம் இன்னும் வேகமாக நடக்கவேண்டும்;
முன்னேற்றமடையவேண்டும் என்பதேயாகும்.
முதன்முதல் பெரியார் பேச்சைக் கேட்ட நான்...
பெரியார் அவர்களின் கருத்துக்களை நான் முதன் முதல்
40 வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தபோது, 'என்ன இவர், இப்படிப் பச்சையாகப் பேசுகிறாரே'
என்று நினைத்தேன். பின் அவரது கருத்துக்களை சிந்தித்து, அவரோடு தொண்டாற்றத் தொடங்கிய
பிறகு அவர் பேசும்போது அதை விட்டுவிட்டாரே இதை விட்டுவிட்டாரே
என்ற உணர்வு ஏற்பட்டது. அப்படித்தான் எல்லோருக்கும் முதலில் கசப்பாகத் தோன்றும்; சிந்தித்தால்
நான் உண்மையை உணர முடியும். நான் பொறுப்பேற்றுள்ள தமிழ் நாட்டரசு மக்களிடையே பரவியிருக்கும்
மூடப்பழக்க வழக்கங்களை நீக்கப்
பாடுபடும். நாம் மட்டுமல்லாமல், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள்,
ஒன்றிப்புக்கள் பகுத்தறிவு வளர்வதற்குப் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அவைகள் கண்காட்சிகள் கடத்த வேண்டும். கண்காட்சியில் கடைத்தெருக் கடைகளை ஒரு பந்தலில்
கொண்டு வந்து வைப்பதாக இருக்கக்கூடாது. உலகின் முன்னேற்றத்தையொட்டி கல்வி போக்குவரத்து—ஒழுக்கத்துறை—முன்
நம்பிய கடவுள், இங்போது எப்படி அக்கடவுள்களை மக்கள் விட்டார்கள் என்பனவற்றை விளக்கக்கூடியதாக
அமைய வேண்டும். பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொண்டு நகராட்சியினர்
தங்களால் இயன்ற அளவு தொண்டு வேண்டுகின்றேன்.'
[திருப்பத்தூர்
நகராட்சி மன்றத்தின் 80-வது
ஆண்டு நிறைவு விழாவில் 13 12-67 அன்று
கலந்துகொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி]
எதிர்காலம்தான் முக்கியம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும்
என்ற சிந்தனையும், கண்ணும்கொள்ள எனக்கு விருப்பமேயொழிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப்
பற்றிய அக்கறை கிடையாது.
(11-2-44ல் ஈரோடு
மாநாட்டில் பேசியது)
தமிழர் வாழ்வினை உயர்த்திய
பேராசிரியர் பெரியார்!
......பெரியார் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள
கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும்; அதுவும் பகுத்தறிவு
கல்வியாக இருக்கவேண்டும்; அதற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பகுத்தறிவு கருத்துக்களை
எடுத்துச் சொல்லவேண்டும். இதை அரை நூற்றாண்டாக எடுத்துச் சொல்லிவருபவர் பெரியாரவர்கள்
ஆவார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், என் திராவிடநாடு பத்திரிகையில்
ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக் கவிஞர்கள் பல நாட்டுப் பேராசிரியர்களைப்
பற்றிக் குறிப்பிடும்போது, நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார்' என்று எழுதியிருக்கின்றேன்.
அவர் சமுதாயத்தில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துக்களை, கொள்கைகளை நாட்டு
மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான்
பயிர் வளர முடியும்: அதுபோல், மனவளம் பெற்றவர்களால்தான் பெரியாரின் கருத்துக்களை ஏற்க
முடியும். ஆனால், அவரது தொண்டு வீண் போகவில்லை. பெரியார் அவர்களின் 30, 40 ஆண்டு தொண்டுகளுக்குப்
பிறகு, புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை ? பள்ளிகள் எத்தனை? என்ற கணக்கில் பார்த்தால்;
தமிழகத்தில் அறிவுப் புரட்சி நடைபெற்றிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும்.
பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரசாரத்தின் வலிமை எவ்வளவு என்பதும் தெரியும். அவர்
பிரசாரத்தைத் துவங்கிய காலத்தில் பல வகுப்பார் படிப்பதற்கே அருகதையில்லாதவர்களென்று
ஏட்டிலே எழுதிவைக்கப்பட்டதுமட்டுமல்ல, நாட்டிலே சொல்லப்பட்டும்
வந்தது. அந்த வகுப்பாரே கூட நம்பினார்கள் நமக்குப் படிப்பு வராது என்று ! நாம் எதற்காகப்
படிக்க வேண்டுமென்று அவர்கள் தெரியாமல் தடுமாறினார்கள். நான் கல்லூரியில் பொருளாதார
'ஆனர்சு' வகுப்பை எடுக்கச் சென்றபோது, அங்கு ஆசிரியராக இருந்த ஒரு பார்ப்பனர் இந்தப்
பொருளாதாரப் பாடம் உனக்கு வருமா? உனக்கேன் இது ? வேறு ஏதாவது எடுத்துக்கொள்!' என்று
கூறி, என் ஆர்வத்தைக் குறைக்கப் பார்த்தார். நான் பொருளாதாரத்தையே எடுத்துச் சிறந்த
முறையில் தேர்வும் பெற்றேன்.
நான் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசின் பொறுப்பை
ஏற்றுக்கொண்ட பிறகு, அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்.
நமது இன மாணவர்கள்
திறமைக்கோர் எடுத்துக்காட்டு
நம் மாணவர்கள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் அல்லர்.
அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், வாய்ப்யும். கொடுத்தால், முற்போக்குச் சமுதாயத்தோடு
போட்டி போடக்கூடிய அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள். எனக்கு நன்றாக நினைவு
இருக்கிறது. நான் ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசியுள்ளன், அதற்குமுன் தமிழகத்தில் தலைசிறந்த
வக்கீல்கள் யார் என்றால், ஒரு அல்லாடி கிருஷ்ணசாமி; தலைசிறந்த டாக்டர் யார் என்றால்,
ஒரு ரங்காச்சாரி; சிறந்த நீதிபதி யார் என்றால், முத்துச்சாமி அய்யர்; சிறந்த நிர்வாகி
யார் என்றால், கோபால்சாமி அய்யங்கார். இப்படித்தான் சொல்லக்கூடிய நிலையில் தமிழகம்
இருக்கிறது என்று சொல்லி வந்தேன். இன்றைய தினம் எந்தத் துறையில் எடுத்துக்கொண்டாலும்
இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இருந்தவர்கள் முதல் தரமான வக்கீல், தலைசிறந்த
மருத்துவர் என்று இப்படித்தான் இருக்கிறார்கள். சர் .ஏ.ராமசாமி முதலியார் அரசியலில்
இருந்து விரட்டப்பட்டார் என்றாலும் அய்தராபாத் சம்மந்தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தினைத் தீர்ப்பதற்கு அய். நா. வில் பேச, அவரை நேரு விரும்பி வேண்டிக்கொண்டார்
என்றால், அவர் திறமையைக் கருதியே அல்லவா? சர்.ஏ.ராமசாமி அய். நா, சென்று வந்ததுமட்டுமல்ல;
வென்றும் வந்தார். இப்படி நம்மிலே பல அறிஞர்கள், படித்தவர்கள் இருக்கிறார்கள். பிற்பட்ட
இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி, அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர் பதவிகளில்,
உத்யோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர். இந்த அளவு அதிகப்பட வேண்டும். ஆகவே,
இத்தகைய வளர்ச்சி பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு இடைவிடாத் தொண்டினால் ஏற்பட்டது
என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
சமுதாய புரட்சியே
பெரியாரின் முக்கிய பணி
பெரியார் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற பணி சமுதாயத்தை
மாற்றியமைக்கும் புரட்சிகரப் பணியாகும். அரசாங்கத்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு
மாற்றியமைத்துவிட முடியாது. அரசாங்கத்திற்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு அரசு அளிக்கப்பட்டிருக்கிறது
என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே
தவிர, தன்னிச்சையாக காரியமாற்ற முடியாது. இதனைப் பெரியாரவர்கள் நன்கு அறிவார்கள். உலகத்திலே
எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதித்ததைவிட, தனிப்பட்டசீர்திருத்தவாதிகளாலேயே சமூகம்
திருத்தப்பட்டிருக்கிறது.
பெரியார் அறிவுரைதான்
சமூகத்தை முன்னேற்றுகிறது
பெரியார் அவர்கள் தரும் பெரும். பேருரைகளால், அவருடைய
சலியாத உழைப்பினால், அவர் தந்துள்ள பகுத்தறிவு: கருத்துக்களினால்தான் இன்னறய தினம்
நம் சமூகம் மிக நல்ல அளவிலே முன்னேறிக்கொண்டு வருகிறது. அவருக்குத்
திருப்தி ஏற்படுகிற வகையிலே இல்லாமலிருந்தாலும், என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்குக்கூட
மாறுவார்களா என்று எண்ணிப்பார்க்காத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதியோரின் மூடச்செயல்
ஒருமுறை பெரியாரும் நானும் ஈரோட்டுக்குப் பக்கத்தில்
ஈங்கூர் என்னும் கிராமத்தில் சுய மரியாதைப் பிரசாரத்திற்காகச் சென்றோம். அந்த ஊரில்
இருந்த பெரிய மனிதர் ஒருவர், நாங்கள் பேசிய இடத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு,
அந்த ஊரில் உள்ள மற்றவர்களைவிட்டு, நாங்கள் பேசிக்கொண்டிருக்கிற இடத்தில் காற்றடிக்கும்
பக்கம் பார்த்துச் சாம்பலைத் தூவிக்கொண்டே யிருக்கச் சொன்னார்; பெரியாரும் பேசிக்கொண்டேயிருந்தார்.
நான் பேசும்போது குறிப்பிட்டேன், 'சாம்பலைத் தூவிக்கொண்டேயிருக்கிறீர்கள்; அது பெரியாரை
என்ன செய்யும்? தாடியிலே படலாம், அது ஏற்கனவே வெள்ளை அதனால் எந்தக் கெடுதலும் வராது'
என்று பேசினேன்.
இப்போது பெரியார் பேசும் பேச்சுக்களைக் கேட்டால்
ஒருகணம் மயக்கம் வருகிறது. அடுத்து ஒருவரை யொருவர் சந்தித்துப் பேசும்போது நியாயம்தான்,
தேவைதான் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, அதைக் கேட்ட உடனே பதறிய காலம்; பகைத்து எழுந்த
காலம்; 'இவர்களைப் படுகொலை செய்துவிடலாம்' என்று பேசிக்கொண்டிருந்த காலம்; இந்தக்காலங்கள்
எல்லாம் அந்தக் காலங்களாகிவிட்டன. இப்போதிருக்கும் காலம் மிகப் பக்குவம் நிறைந்தகாலம்.
பெரியார் அவர்களின் கருத்துக்களைச் சட்ட மூலம் செயல்படுத்த, இந்த சர்க்காரின் அதிகார
எல்லைக்குட்பட்டு என்னென்ன செய்ய முடியுமோ அவைகளைச் செய்ய, எப்போதும் தயாராக இருக்கிறேன்.
பெரியாரவர்கள் கருத்துக்களைச்
செயலாக்க நான் தயார்
பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகிற கருத்துக்களையும்
கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே
இருந்துகொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா ? அல்லது விட்டுவிட்டு உங்களிடம் வந்து,
தமிழகத்திலே இதே பேச்சை, பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா ? என்பதை முடிவு செய்யும்
பொறுப்பை பெரியாரவர்களுக்கே விட்டுவிடுகின்றேன். அவர்—என்னோடு வந்து, 'பணியாற்று' என்றால்
—அதற்குத் தயாராக இருக்கின்றேன்.
சமுதாயப்பணிக்குப் பெரியாரைத் தவிர
வேறு ஆளே இல்லை
கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன்
அது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கறைத்து அறைத்துக் காய்ச்சிய
பின்தான் மின்னும் தங்கத்தை எடுக்கின்றனர். அவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கிறது. அதுபோன்றுதான்
சமுதாயச் சீர்திருத்தப்பணியாகும். பெரியார் அவர்களுக்கு நாம் தந்துள்ள சமுதாய சீர்திருத்த
வேலை, அவர் இறுதி மூச்சுள்ளவரை செய்துதீரவேண்டிய வேலை. ஏனென்றால், அந்தப் பணியைச் செய்வதற்கு
அவரைத் தவிர வேறு ஆள் இல்லை: நேற்று இருந்ததில்லை ; நாளைக்கு வருவார்களா என்பதும் அய்யப்பாட்டிற்குரியது.
பெரியார் அவர்கள் செய்யும் வேலையில் மனநிம்மதியோடு இருக்கலாம். தமிழகம் இன்று எந்தப்
புதுக்கருத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், தாங்கிக்கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. அது
செயல்வடிவத்திலே வருவதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவரது கருத்துக்களும், கொள்கைகளும்
இன்னும் முற்றும் செயல்படவில்லை; அது செயல்வடிவத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால், அது செயல்பட்டே தீரும். பெரியாரவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும்
பணி மிகச் சிறந்த பணி: நம் நாட்டிற்கு மிகத் தேவையான பணி! அதனை நிறைவேற்றக்கூடிய ஆற்றல்
பெரியாரவர்களுக்கே உண்டு. ஆனாலும் அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது வேலையை நாம் மேற்கொள்ள
வேண்டும்.
பகுத்தறிவை வளர்க்கும்
படிப்பே தேவை
பள்ளிக்கூட ஆசிரியர்கள் பகுத்தறிவோடு சொல்லிக்கொடுப்பார்களேயானால்,
இன்னும் பத்து ஆண்டுகாலத்தில், நமது மாணவர்கள் மற்ற உலக மாணவர்களோடு போட்டிபோடக் கூடிய
அறிவில் முன்நிற்கக்கூடிய அளவில் செய்துவிடமுடியும். நமது பள்ளிகளில், கல்லூரிகளில்
சொல்லிக்கொடுக்கப்படுகிற கல்வி,அவன் கல்லூரியைவிட்டு வெளியேறும்போது வெறும் எழுத்தறிவுக்குப்
பயன்படுகிறதே.தவிர, பகுத்தறிவுத் துறைக்குப் பயன்படக்கூடியதாக இல்லை. இப்போது நாட்டிலிருக்கின்ற
கல்வித்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். அதுபற்றி கல்வி நிபுணர்களோடு கலந்து
ஆலோசித்துப் புதுக்கல்வித்திட்டம் வகுக்க வேண்டும்.
பெரியாரால் கிடைத்த முதல் வரவேற்பு
இன்று பெரியாரவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்தினார்கள்.
உண்மையாகவே இது எனக்குப்பெருமைதான். இதைவிட நான் பெருமையாகக் கருதுவது, பெரியார்வர்களுக்கு
ஞாபகம் இருக்கிறதோ என்னவோ; எனக்கு ஈரோட்டில், முதன்முதலில் நகராட்சியில் வரவேற்புக்
கொடுக்கச் செய்து சால்வை போர்த்தினார்கள்; அதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. எனக்கு
முதன்முதல் வரவேற்பு என்பதே ஈரோட்டில் நகராட்சியால் கொடுக்கப்பட்டதுதான். அதன்பின்,
இப்போது நிறைய வரவேற்புக் கொடுக்கிறார்கள் என்றால், அவை எனக்காக
அல்ல, பதவிக்காகக் கொடுக்கப்படுவதேயாகும். பெரியாரவர்கள் இடையிலே சில ஆண்டுகள் எனக்குக்
கொடுக்கவேண்டிய பரிசுகளையெல்லாம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.
பெரியாரின் கட்டளைப்படியே
நான் நடப்பேன்
இன்றுமுதல் பெரியார் இருக்கிற இடத்தில் நானிருப்பேன்;
நானிருக்கிற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். எனவே, இனிமேலும், பெரியாரும் அண்ணாதுரையும்
ஒன்றுசேர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது அரசியல் உலகத்தில் யாரோ சிலருக்கு ஒரு வித
சந்தேகத்தை உண்டாக்கி, அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து விட்டார்களாமே என்கிற கலவரத்தையும்
உண்டாக்கக் கூடுமாதலால், இனி அப்படிக் கூற வேண்டாமென நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெரியாரை நாம் கஷ்டப்படுத்திவிட்டோம்
நாம், பெரியாரை வெகுவாகக் கஷ்டப்படுத்தி விட்டிருக்கிறோம்.
அவர் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டு கட்டளையிடவேண்டிய வயது. அவரது தொண்டினை நாம் மேற்கொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்படவில்லை. ஆனதனாலே நாம் அவருக்குக் காட்டவேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக்கொள்வதில் நான்
முதல்வனாக இருப்பேன் என்பதையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
[19-12-67. அன்று நாகரசம்பட்டியில்,
புதிதாகக் கட்டப்பெற்ற 'பெரியார் ராமசாமி
கல்விநிலைய' த்தினைத் திறந்துவைத்து ஆற்றிய உரையின் ஒருபகுதி]
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பு
"நான் பெரியாரவர்களர்களுடன் வடநாடு சுற்றுப்பயணம்
சென்றிருந்தேன், அங்குள்ளவர்கள் நம்மக்களைவிட மூடநம்பிக்கையுள்ளவர்கள். பெரியாரவர்களின்
தோற்றத்கை கண்டு, அவர் தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான்
அவரது சிஷ்யன் என்றும் கருதிவிட்டார்கள். அப்படி நினைத்துத்தான், ஆரியதர்மத்தை வளர்ப்பதற்காக
வென்றே செயல்பட்டவரான சிரத்தானந்தா கல்லூரியின் தலைவர்,பெரியார் அவர்களைப் பார்த்துத்
தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தாங்கள் வந்து அறிவுரை கூறவேண்டுமென்று
கேட்டார். அவரும் ஒத்துக்கொண்டார். தான் எதைச் சொல்லுகிறாரே அதை மற்றவர்கள் உடனடியாகக்
கடைப்பிடிக்க வேண்டும்; அதன்படி நடக்கவேண்டும் என்று கருதுபவர் அல்ல பெரியார். பிறர்
கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் சென்று, அவர்கள் மனம் புண்ப்டாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான்
அவர் பண்பு.
வடநாட்டு மாணவர்களைக் கவர்ந்த
பெரியார்
சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்லவேண்டுமென்றதுமே
எனக்குச் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அங்குப்போய் நமது கருத்தைச் சொன்னால், அவர்கள்.
எப்படி நடந்துகொள்வார்களோ என்று பயந்தேன்; என்றாலும் துணிந்து பெரியாரவர்கள் பின்சென்றேன்.
கல்லூரிக்குள் நுழையும்போதே அங்கிருந்த மாணவர்கள் தங்கள் வழக்கப்படி என் முகத்திலும்,
அவர் முகத்திலும் சந்தனத்தை அள்ளிப் பூசினார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்
நிலையினைக்கண்ட பெரியார் நான் எங்குத் தவறாக நடந்து கொண்டுவிடுவேனோ
என்று தொடையைக் கிள்ளி ஜாடை காட்டினார். அதன்பின் நானும் சற்று அமைதியடைந்து பொறுமையாக
இருந்தேன். பின் பெரியார் அவர்கள் பேச ஆரம்பித்து, ஒவ்வொரு சங்கதியாக எடுத்து விளக்க
ஆரம்பித்ததும் அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற கருத்தை அவர்கள் அதுவரை
கேட்டதே இல்லை.. அப்போதுதான் அவர்கள் புதுமையாகக் கேட்கின்றனர். இராமாயணத்தைப் பற்றி
அவர் விளக்கியதைக் கேட்கக் கேட்க, சற்றுத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் முடிந்ததும்
அம்மாணவர்கள் 'ராவணாக்கி ஜே!' என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர். அதுபோன்று இருக்கின்ற
உண்மையினை எடுத்துக்கூறினால், மக்கள் ஒத்துக்கொள்ளாமல் போகமாட்டார்கள். அவர்களை விட
நம் மக்கள் தெளிவு பெற்றவர்களாவார்கள்.
பெரியார் பணியை
எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்
நம் நாட்டில் உத்தியோகத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற
பெரும் புலவர்கள், படித்துப் பட்டம் பெற்றவர்கள், மேதாவிகள் என்பவர்கள் முன்வந்து தங்களுக்கு
உண்மையென்று தோன்றியதைத் தாங்கள் பதவியிலிருக்கும்போது சொல்லப்பயந்ததைத் துணிந்து எடுத்துச்
சொல்லவேண்டும். பெரியாரவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பணியினை மேற்கொண்டு தொண்டாற்ற
முன்வரவேண்டும். நமது பெரியவர்கள் எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தை விட்டுப்
பொதுத்தொண்டு செய்ய முன் வரவேண்டும்.
கல்வி முறையை மாற்றியாக வேண்டும்.
நமது பள்ளிக்கூடங்களில் கங்கை. எங்கே உற்பத்தியாகிறது
என்பதை பூகோள வகுப்பில் சொல்லிக்கொடுக்கும்போது, 'அது ஹரித்துவாரிலே உள்ள மலையில் உற்பத்தியாகி
வருகிறது' என்று பூகோள ஆசிரியர் சொல்லிக்கொடுக்கிறார். தமிழ் வகுப்பில்
சொல்லிக்கொடுக்கும்போது தமிழாசிரியர்கள், 'கங்கை சிவபெருமானின் ஜடாமுடியில் உற்பத்தியாகிறது'
என்று சொல்லிக்கொடுக்கின்றனர். பரீட்சையில் மாணவன் தமிழ் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைப்
பூகோள பரீட்சையிலும், பூகோள வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைத் தமிழ்ப் பரீட்சையிலும்
எழுதினால், அவனுக்கு என்ன கிடைக்கும் ? அவன்மேல் தவறு இல்லை என்றாலும் அவனுக்கு மார்க்குக்
கிடைப்பதில்லை. இதுபோன்ற மாறுபாடான கல்வி முறையானது மாற்றியமைக்கப்பட வேண்டும். உண்மையான
அறிவை மாணவர்கள் பெற வழி வகுக்கப்படவேண்டும். அத்தகையதான அறிவுப் புரட்சியினைச் செய்ய,
நாம் தயாராக இருந்தாலும் மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதற்குப் பெரியாரவர்கள்
தொண்டும் பிரசாரமும் மிகவும் தேவையாகும்."
[மத்தூர்,'அரசினர்
உயர்நிலைப் பள்ளி'
கட்டிடத் திறப்பு விழாவில் 19-12-67
அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி]
சமூக அபிவிருத்திக் கேடு
முஸ்லீமோ, கிறிஸ்துவரோ புராண நாடகங்களைக் கண்டால்,
அவ்வளவு கேடுஇல்லை. நம்மவர்கள் நிலை அப்படியல்ல; புராணங்களிலே வரும் கடவுள்கள் எல்லாம்
தங்கள் கடவுள்கள் என்றல்லவா கருதிக்” கொண்டு, அந்த நாடகங்களைப் பார்க்கின்றனர். இதனால்
அவர்கள் மனம்தானே பாழாகிறது. ஆகவேதான், புராண நாடகம் சமூக அபிவிருத்திக்குக் கேடுசெய்கிறது
என்று கூறுகிறோம்.
சமூக நீதியின் இருப்பிடம்
பெரியார்!
"சமூக நீதியற்ற தன்மைகளுக்கும் கொடுமைகளுக்கும்
உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழ்நாட்டில் போராட்டத்தை நடத்தியவர் பெரியார் (ராமசாமி)
அவர்களே. அதேபோன்று தெனாலியில் முதலில் குரலெழுப்பியவர் ராமசாமி சவுதரி என்பவராவார்.
இந்த இரு பெரும் சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுக்கும் ஒரே பெயர் பொருந்தியிருப்பது
வியப்புக்குரியதாகவிருக்கிறது. கடவுளின் அவதாரமென்று கூறப்படுகிற ராமசாமியையும் அதையொட்டிய
கருத்துக்களையும் நிறுவனங்களையும் எதிர்த்து—ராமசாமி என்ற அதே பெயருள்ள இரு பெரியார்களும்
கண்டன மாரிகளைப் பொழியும் பிரசாரங்களைச் செய்யும் தகுதி பெற்றவர்களாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாங்கள் இந்தப் பிடிவாதமான மக்களை
எங்களுடைடய கருத்துக்களுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு வருவதற்கு இருபதாண்டு காலமாக விவாதித்து
வந்திருக்கிறோம்; இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். பூமியிலுள்ள தீமையை ஒழிக்கக் கடவுள்
10 அவதாரங்களுக்குக் குறையாமல் எடுத்ததாகக் கூறப்படுகிறகிறது. ஆனாலும் தீமைகள் முழுவதும்
ஒழிந்தபாடில்லையே. மனிதர்களாகிய நமக்குத் தான் தீமைகள். எதிராகப் போரிட்டு, அதை வேரோடு
ஒழித்துக்கட்டும் மிக உயர்ந்த கடமை ஏற்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக்காரர்களாகிய
எங்களில் சிலர் சுயமரியாதைத் திருமணம் என்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்த, போலீஸ்
உதவியை நாடவேண்டியதாயிருந்தது. அந்தத் திருமணங்கள், குருக்கள்
இல்லாமலும். மந்திரங்கள் சொல்லப்படாமலும், ஓமத்தீ இல்லாமலும் நடத்தப்படும் திருமணங்களாகும்.
சுயமரியாதைத் திருமணத்தின்
நெடுங்கதை பாரீர்
ஒரு கிராமத்தில் பெரியார் (ராமசாமி) அவர்களும், நானும்
ஒரு சுயரியாதைத் திருமணத்தை வைக்கச் சென்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களைப் போலீஸ்
ஸ்டேஷனுக்கு வரும்படி சொல்லி அனுப்பினார், நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றபோது,
எங்களைக் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ அழைக்கவில்லையென்றும், சனாதனிகளால் தொல்லை
நேராது எங்களைப் பாதுகாக்கவே அழைத்ததாகவும் அந்தப் போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால்,
இன்றோ தமிழ்நாடெங்கும் அத்தகைய சுயமரியாதைத் திருணங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. அவைகள்
அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாக மசோதாவொன்று நான் கொண்வந்து நிறைவேற்றிவிட்டேன்."
[ஆந்திராவிலுள்ள
தெனாலியில் கவிராசு ராமசாமி சவுதரி—ஆவுல கோபாலகிருஷ்ண
மூர்த்தி "பவ விகாச கேந்திர"த்தை 29-1-68
அன்று திறந்துவைத்து
ஆற்றிய உரையின் ஒரு பகுதி]
0 Comments: