மதமும் மூடநம்பிக்கையும்
இரா. நெடுஞ்செழியன்
மதம் 1
அந்தக் கடவுள்தானா ?
பிறப்பும் இறப்பும்
அற்ற முழுமுதற் கடவுள் எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தார்! அவரே எல்லாவற்றையும்
ஆண்டு வருகிறார்! உயிரினம் அவருக்கு அடங்கி நடக்கவும் வேண்டும், நன்றியறிதல் காட்டவும்
வேண்டும்! ஆண்டவன் மனிதனிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கிறார்! எவன் அவருடைய விருப்பங்களை
நிறைவேற்றி வைக்கிறானோ, அவன் மத பக்தனாகிறான் ! இந்தவிதமான மதம் உலகெங்கணும் பெருவழக்காய்
இருந்துவருகிறது.
இந்தக் கடவுள் பலிகளைக்
கேட்டார் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குருதியைச் சொரிந்த போது, அவர்
மிகவும் மகிழ்ச்சியுற்றார் என்றும் பல நூற்றாண்டுகளாகப் பல கோடிக்கணக்கான மக்கள் நம்பி
வந்தனர். பிற்பாடு எருது, வெள்ளாடு, வாத்து இவைகளின் குருதியை மட்டும் பெற்றுக்கொண்டே
ஆண்டவன் பெருமகிழ்ச்சியுற்றார் என்று கொள்ளப்பட்டது. இந்தப் பலிகள் கொடுத்ததன் காரணமாக
அல்லது இவற்றிற்குப் பதிலாகக், கடவுள், மழை, ஞாயிற்றின் வெளிச்சம், அறுவடை முதலியவைகளை
வழங்கியதாகவும் கொள்ளப் பட்டது. இப்படிப்பட்ட பலிகளிடாமற் போனால், கடவுள், பஞ்சம்,
கொள்ளை, நோய், வெள்ளம், நில அதிர்ச்சி ஆகியவைகளை அனுப்பிவிடுவார் என்றும் நம்பப்பட்டது.
கிறித்துவ
மதக் கொள்கைப்படி பலி கொள்வதில் கடைசி நிகழ்ச்சியாக நம்பப்பட்டது ஆண்டவன் அவருடைய மகனின்
குருதியைப் பெற்றுக்கொண்டதாகும். அவருடைய மகன் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஆண்டவனாகிய
அவர் முழு மனமகிழ்ச்சியடைந்தார், அதற்குப் பிறகு குருதி வேட்கையை அவர் கொள்ளவில்லை
என்றும் நம்பப் பட்டது.
ஆண்டவன் வேண்டுதலையைக்
கேட்டார்; அதற்குப் பதிலிறுத்தார்; அவர் பாபங்களை மன்னித்தார்; உண்மையான நம்பிக்கையாளர்களின்
ஆன்மாக்களைக் காப்பாற்றினார் என்று இந்தப் பழங் காலங்களிலெல்லாம், இந்தப் பழங்கால மக்கள்
எல்லோராலும் நம்பப்பட்டு வந்தது. பொதுவாகச் சொல்லப்போனால், இதுதான் மதம் பற்றிய விளக்கமாகும்.
இப்பொழுது, நம்முன் நிற்கும்
கேள்விகள்: எந்தத் தெரிந்த உண்மையின் மீதாவது மதம் கட்டப்பட்டதா? கடவுள் என்று சொல்லப்படும்
ஒருவர் இருக்கிறாரா? உங்களையும் என்னையும் படைத்தவர் அவர்தானா ? எந்த வேண்டுதலையாவது
எப்பொழுதாவது பதிலிறுக்கப் பட்டதா? குழந்தையோ அல்லது எருதோ பலியிடப்பட்டதன் காரணமாக
மனமொழி மெய்களால் காணப்பட முடியாத கடவுளால், எந்த ஒரு நன்மையாவது வந்து சேர்ந்ததா?
முதலில் - மக்களாகிய
குழந்தைகளை எல்லையற்ற ஒரு பெருங் கடவுள் தான் தோற்றுவித்தாரா?
அறிவில் குறைபாடுடையவர்களை
ஏன் இவர் தோற்றுவித்தார்?
உடற்குறையுடையவர்களையும்,
உதவியற்றவர்களையும் ஏன் இவர் தோற்றுவிக்கவேண்டும் ?
குற்றவாளியையும்,
மடயனையும், பைத்தியக்காரனையும் இவர் தோற்றுவிக்கக் காரணம் என்ன?
எல்லையற்ற பேரறிவும்
- பேராற்றலும் கொண்ட இவர், குறைபாடுகளைத் தோற்றுவித்ததற்கு எந்தச் சமாதானமாவது கூறமுடிகிறதா?
இந்தக் குறைபாடுகளெல்லாம்,
இவற்றைப் படைத்த ஆண்டவனுக்கு விருப்பமளிக்கவா வந்திருக்கின்றன?
இரண்டாவதாக – எல்லையற்ற
ஒரு பெருங் கடவுள் இவ்வுலகத்தை ஆளுகிறாரா?
படைத்தலைவர்களும் பாராளும்
மன்னர்களும், பேரரசர்களும் பேரரசிகளும் வாழ்வதற்கு இவர்தான் பொறுப்பாளியா?
தொடுக்கப்படும் எல்லாவித
போர்களுக்கும், கொட்டப்படும் எல்லாவகைக் குற்றமற்றவர்களின் குருதிக்கும் இவர் தான்
பொறுப்பாளியா?
பன்னெடும் நூற்றாண்டுகளாக
இருந்துவரும் அடிமை வாழ்விற்கும். சாட்டையடியால் தழும்புகள் ஏறிநிற்கும் முதுகுகளுக்கும்,
தாய்களின் அணைப்பிலிருந்து பிடுங்கப் பட்டு விற்கப்படும் குழந்தைகளுக்கும், பிரிக்கப்பட்டுச்
சீரழிக்கப்படும் குடும்பங்களுக்கும் இவர்தான் பொறுப்பாளியா?
மதக் குற்றச்சாட்டுக்கும்,
மத விசாரணைக் குழுவுக்கும், விரல்களை நெரித்துக் கசக்கிடும் விரலாணிக்கும். உடல் முழுதும்
புண்ணாக்கிடும் இருப்பு முட்பலகைக்கும் இந்தக் கடவுள் தான் பொறுப்பாளியா?
உறுதியாளரையும் உயர்வாளரையும்
அழிக்க, கொடுமையையும் கீழ்மையையும் இந்தக் கடவுள்தான் அனுமதித்தாரா?
நாட்டுப்
பற்றுடையோரின் குருதியைக் கொட்ட வைக்கும்படி, கொடுமையாளர்களை இந்தக் கடவுள் தான் அனுமதித்தாரா?
தம்முடைய நண்பர்களைச்
சித்ரவதை செய்யவும், கொளுத்தவும், தம் பகைவர்களுக்கு இவர்தான் அனுமதி அளித்தாரா?
இப்படிப்பட்ட கடவுள்
எந்த அளவுக்கு மதிக்கத்தக்கவர்?
தடுக்கக்கூடிய ஆற்றல்
படைத்த எந்த நல்லறிவுடைய மனிதனாவது, தன்னுடைய பகைவர்களால், தன்னுடைய நண்பர்கள் சித்ரவதைச்
செய்யப்படுவதையும், கொளுத்தப் படுவதையும் அனுமதித்துக்கொண்டிருப்பானா?
ஆண்டவனுக்குப் பகைவர்களாக
உள்ளவர்களைத் தன் நண்பர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்களை ஆதரித்து வருகிறது ஒரு பூதம் என்று,
நாம் அறுதியிட்டுக் கொள்ளலாகுமா?
எல்லையற்ற பேராற்றலும்,
நல்ல பண்பும் கொண்ட கடவுள்தான் இவ்வுலகை ஆளுகிறார் என்றால், புயற் காற்றுகள், நில அதிர்ச்சிகள்,
கொள்ளை நோய்கள். கொடும் பஞ்சம் ஆகியவை நிலவுவதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?
மனிதர்களைக் கொன்று தின்னும்
காட்டு விலங்குகள், கடித்தால் சாகவேண்டிவரும் நச்சுப் பற்களைக் கொண்ட நாகங்கள் ஆகியவை
வாழ்வதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?
ஒரு உயிர் மற்றொரு உயிரைக்
கொன்று தின்றே வாழ வேண்டும் என்ற உலகம் இருந்து வருவதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?
எல்லையற்ற
பேரருளாளர்தான் கூரிய அலகையும் — நகத்தையும், நச்சுப் பல்லையும் — கொடுக்கையும் கண்டு
பிடித்து, அவற்றை உற்பத்திச் செய்தாரா?
எல்லையற்ற நற்பண்பாளர்தான்,
இரையைக் கொத்தித் தூக்கிச் செல்வதற்கு ஏற்றவண்ணம் கழுகுகளின் இறக்கைகளைப் பக்குவப்படுத்தி
வைத்தாரா?
எல்லையற்ற நற்பண்பாளர்தான்,
வலிவற்றனவும், உதவியற்றனவுமான விலங்கு குகளைக், கொன்று உண்ண வேண்டும் என்று, கொடிய
விலங்குகளைப் படைத்தாரா?
எல்லையற்ற நற்பண்பாளர்தான்,
கணக்கற்ற சாதாரண உயிர்க் கிருமிகள், அவைகளைக் காட்டிலும் உயர்ந்த உயிரினங்களின் சதையைத்
தின்று, அதிலேயே வாழ்ந்து. அதிலேயே வளரவேண்டும் என்று அவைகளைப் படைத்தாரா?
எல்லையற்ற பேரறிவாளர்தான்,
கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகள். கண்களிலுள்ள நரம்புகளைத் தின்று வாழவேண்டும்
என்று, அவைகளை உற்பத்திச் செய்தாரா?
ஒரு நுண்ணிய கிருமியின்
வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு ஒரு மனிதனைக் குருடனாக்கும் தன்மையை ஓர்ந்து பார்மின்
!
உயிர் உயிரைத்தின்று
வாழ்வதைச் சிந்தித்துப் பார்மின்! இரையாகும் எண்ணற்ற இரைகளைச் சிந்தித்துப் பார்மின்
! கொடுமையின் பீடத்தில் நையகாரா நீர்வீழ்ச்சி போன்று சொரியப்பட்ட குருதி வெள்ளத்தைச்
சிந்தித்துப் பார்மின் !
இப்படிப்பட்ட
உண்மைகளையெல்லாம் நேர்நிறுத்திப் பார்க்கும்போது, மதம் என்பதுதான் என்னவாகத் தோன்றுகிறது?
மதம் என்பது அச்சம்!
அச்சம்! கடவுள் பீடத்தைக்
காட்டியதும், பலியைக் கொடுத்ததும் அதுதான் !
அச்சம் ! கோயிலை எழுப்பியதும்,
வழிபாட்டில் மனிதனின் தலையைக் குனியவைத்ததும் அதுதான்!
அச்சம்! முழங்கால்களை
மண்டியிடச் செய்ததும், வேண்டுதலையை மொழியச் செய்ததும் அதுதான் !
மதம், அடிமைப் பண்புகளான,
பணிந்து நடத்தல், அடங்கியொடுங்கியிருத்தல், தன்னை வெறுத்தல், மன்னித்து விடுதல், எதிர்த்துப்
போராடாமை முதலியவற்றைக் கற்பிக்கிறது!
மதப்பக்தியும், அச்சத்
தன்மையும் கொண்ட உதடு கள், "அவன் என்னை வெட்டி வீழ்த்துகிறதானாலும், நான் அவனிடம்
நம்பிக்கை வைக்கத்தான் செய்வேன்" சொற்றொடரை ஓயாமல் திரும்பத் திரும்பக் கூறிக்
கொண்டே யிருக்கின்றன. இதுதான் மனித வீழ்ச்சிக்குக் காரணமாகும் தாழ்வுப் படுகுழியாகும்.
மதம், தன்னம்பிக்கை
— விடுதலை வேட்கை — மனிதத் தன்மை — உறுதி - தற்காத்தல் போன்ற பண்புகளை ஒருபோதும் மனிதனுக்குக்
கற்றுக்கொடுப்பதில்லை.
மதம், கடவுளை ஆண்டையாகவும்,
மனிதனை அவருக்கு அடிமையாகவும் ஆக்குகிறது. அடிமை வாழ்வை இனிமையாக ஆக்குவதால், ஆண்டை
பெருந்தகையாளராக ஆகிவிடமாட்டார்! இந்தக் கடவுள் இருக்கிறார் என்றால்,
அவர் நல்லவர் என்பதை நாம் எப்படி அறிவது? அவர் அருள் பரிபாவிப்பவர் என்பதை நாம் எப்படி
நிருபிப்பது? அவர் மக்க ளாகிய குழந்தைகளைப்பற்றி எவ்வகையில் கவலைப்படுகிறார். என்பதை
நாம் எப்படித் தெளிவது? இந்தக் கடவுள இருக்கிறார் என்றால், அவருடைய கோடானுகோடி ஏழைக்
குழந்தைகள், நிலத்தை உழுவதையும், விதை விதைப்பதையும், நாத்து நடுவதையும் அவர் பல தடவை
பார்த்திருக்கிறார்; அப்படிப் பார்த்தபோதெல்லாம், அவர்கள் தம் வாழ்க்கையை ஈடேற்ற, விளையப்போகும்
கதிர் மணிகளை நம்பியிருந்தனர் என்பதை நன்கு அறிவார்; அப்படியிருந்தும் இந்த நல்லவர்
— அருளாளர் — கடவுள் மழையைப் பெய்விக்காமலேயே நிறுத்திவிட்டிருக்கிறார். மனிதன் நட்ட
செடிகளெல்லாம் காய்ந்து அழிந்து போனதை அவர் பார்த்தார்; ஆனால் அவர் மழையை அனுப்பவில்லை.
வறண்ட நிலத்தை வாடிய கண்களால், மக்கள் நோக்கிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்; அப்படியிருந்தும்
அவர் மழையை அனுப்பவில்லை தங்களிடத்திலுள்ள சிறிது உணவைக் கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள்
தின்று கொண்டு வந்ததைப் பார்த்தார் ; பிறகு அவர்கள் பட்டினியால் வாடும் நாட்களையும்
பார்த்தார்: அவர்கள் மெதுவாக அழிந்து வருவதையும் பார்த்தார்; அவர்கள் பட்டினியைப் பார்த்தார்
; அவர்களது குழிவிழுந்த கண்களைப் பார்த்தார்: அவர்களுடைய வேண்டுதலைகளைக் கேட்டார்;
அவர்கள் தாம் வைத்திருந்த விலங்குகளையே அடித்துத் தின்றதையும் பார்த்தார்; தாய்மார்களும்,
தந்தைமார்களும் பசியால் பைத்தியம் பிடித்ததையும், தங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொன்று
தின்றதையும் பார்த்தார்; மேலேயுள்ள வானம் வெண்கலத்தகடு போலவும், கீழேயுள்ள தரை இருப்புத்தகடு
போலவும் அவர்களுக்குக் காணப்பட்டதையும் அவர் பார்த்தார்; அப்படியிருந்தும் அவர் மழையை
அனுப்பவில்லை. இரக்கம் என்னும் பூ இந்தக் கடவுளின் இதயத்தில் மலர்ந்தது என்று நாம்
சொல்ல முடியுமா? மக்களாகிய குழந்தைகளைப்பற்றி அவர் கவலைப்பட்டார்
என்று நாம் கூற முடியுமா? அவருடைய அருளுள்ளம் என்றும் நிலைத்து நிற்கும் தன்மையது என்று
நாம் இயம்ப முடியுமா?
இந்தக் கடவுள் 'மிகவும்
நல்லவர்' ஏனென்றால், அவர் பெரும் புயற்காற்றை அனுப்பி, ஊர்களையெல்லாம் பாழ் படுத்தி
வயல்களிலெல்லாம் தந்தைமார்கள்—தாய்மார்கள் குழந்தைகள் ஆகியோரின் உருவழிந்த பிணங்களால்
நிரப்பினார் என்று நாம் நிரூபிப்பதா? அவர் நிலத்தைப் பிளக்கச் செய்து, ஆயிரக்கணக்கான
ஆதரவற்ற குழந்தைகளை அதனால் விழுங்கச் செய்தார் என்றோ, அல்லது அவர் எரிமலைகளைக் கொண்டு,
நெருப்பு ஆறுகளை அவற்றினின்றும் பீறிட்டுக் கிளம்பச்செய்து, மக்களை மூழ்கடித்தார் என்றோ
எடுத்துக்காட்டி, அவரது. 'நல்ல தன்மையை' நாம் நிரூபிப்பதா? நாம் அறிந்த இந்த உண்மைகளி
லிருந்து, கடவுளின் 'நல்ல தன்மையை' நாம் ஊகித்துக் கொள்ளலாகுமா?
இந்தத் துக்கங்கள் நடைபெறாமலிருந்திருக்குமேயானால்,
ஆண்டவன், உலகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று, நாம் ஐயப்பாடு கொண்டிருப்போமா? பஞ்சமும்
கொள்ளை நோயும், புயற்காற்றும் நில அதிர்ச்சியும் இல் லாமலிருந்திருக்குமேயானால் ஆண்டவன்
நல்லவரல்லர் என்று, நாம் நினைத்திருப்போமா?
மதவாதிகளின் கருத்துப்படி,
கடவுள் எல்லா மக்களையும். ஒரேமாதிரியாகப் படைக்கவில்லை என்று கொள்ள வேண்டும். அறிவில்,
நிலையில், நிறத்தில் வேறுபாடு கொண்ட பல இனங்களை அவர் உண்டாக்கினார் என்றால், இதில்
நல்ல தன்மை இருந்ததா, நல்ல அறிவுடைமை இருந்ததா?
உயர்ந்த இனங்கள், தங்களைத் தாழ்ந்த இனங்களாகப் படைக்காததற்காகக், கடவுளுக்கு
நன்றியறிதல் தெரிவிக்க வேண்டாமா? ஆம்; தெரிவிக்க வேண்டும் என்று நாம் கூறினால், பிறகு
நான் மற்றொரு கேள்வி கேட்கிறேன் தாழ்ந்த இனங்கள், தாங்கள் உயர்ந்த இனங்களாக ஆக வில்லை
என்பதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டுமா? அல்லது அவர்கள், தங்களை விலங்குகளாகப்
படைக்கவில்லையே என்பதற்காகக், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டாமா?
கடவுள், இந்தப் பல்வேறு
வகைப்பட்ட இளங்களைப் படைத்தபொழுதே உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தை அடிமைப்படுத்தும் என்பதை
அறிவார்; தாழ்ந்த இனத்தினர் கைப்பற்றப்படுவர், இறுதியில் அழிக்கப்படுவர் என் பதையும்
அறிவார்!
கடவுள் இதைச் செய்தார்
என்றால், சிந்தப்படப் போகும் குருதி வெள்ளத்தை அவர் அறிந்தார் என்றால், தாங்கப்போகும்
வேதனைகளை அவர் அறிந்தார் என்றால், வெட்டப்பட்ட பிணக் குவியல்கள் கணக்கற்ற வயல்களில்
நிரம்பிக்கிடந்ததை அவர் பார்த்தார் என்றால், அடிமை களின் குருதி ஒழுகும் முதுகுகளை
அவர் கண்டார் என்றால், குழந்தைகளை யிழந்த தாய்மார்களின் உடைந்த இதயங்களை அவர் நோக்கினார்
என்றால், இவையெல்லாவற்றையும் அவர் பார்த்தார்.
பார்த்தார் அறிந்தார்
என்றால், அவரைவிட வேறு கொடூரமான 'பூதத்தை' நாம் கருதிப்பார்க்க முடியுமா?
பின் ஏன் நாம் சொல்லவேண்டும்,
கடவுள் நல்லவர் என்று?
அழுத்தமான சுவர்களுக்கிடையிலே, உறுதியும் உள்ளன்பும் கொண்ட மாவீரர்கள், தங்கள்
இறுதி மூச்சை விடும்படி செய்யப்பட்ட இருட்டறைகள்; சிறந்தவர்களின் குருதிக்கறை படிந்து,
அதனால் புகழடைந்த தூக்குமரங்கள்; தழும்புகள் ஏறியும், குருதியைக் கசியவிட்டுக்கொண்டும்
காணப்பட்ட முதுகுகளையுடைய அடிமைகள்; தீச்சுடரையே ஆடையாக உடுத்திக்கொண்டு, உண்மைக்காக
உயிர் நீத்த உத்தமர்கள் ; முள்ளாணிப் பலகையில் சித்ரவதைச் செய்யப்பட்ட மேலோர்கள்; மூட்டுகள்
கழற்றப்பட்டுத் தசைகள் கிழிக்கப்பட்டவர்கள்: கிழிக்கப்பட்டவர்கள்: நீதிமான்களின் வெட்டப்பட்ட
தலைகள், குருதி ஒழுகிய உடலங்கள்; உண்மைக்குப் பரிந்து பேசியோரின் பிடுங்கப்பட்ட கண்கள்;
போராடிப் போராடி எந்தப் பலனும் பெறாமல் மாண்டொழிந்த எண்ணற்ற நாட்டுப் பற்றுடையோர்
: தொல்லைகள் கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கண்ணீர் வடித்து வடித்துக் காலந் தள்ளிய
மனைவிமார்கள்; ஒதுக்கித் தள்ளப்பட்ட குழைந்தைகளின் நடுங்கும் முகங்கள்; இறந்த காலங்களில்
கொன்று குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள்; கொடுங்காற்றுக்கும் பேரலைக்கும் அகப்பட்டுச்செத்தொழிந்தோர்;
வெள்ளப்புனலுக்கும் வெந்தழலுக்கும் இரையானோர்; கொடிய விலங்குகளுக்கு உணவானோர்; பேரிடியால்
தாக்கப்பட்டோர்; எரிமலையின் நெருப்புக் குழம்பில் பட்டெறிந்தோர்; பஞ்சத்தில் அடிபட்டோர்
; பிளேக் நோயால் பாதிக்கப்பட்டோர்; தொத்து நோயால் தொல்லைப்பட்டோர் ; குருதியைக் குடித்துக்
கொப்பளித்த வாய்கள்; நஞ்சை ஏந்தியிருந்த நச்சுப்பற்கள்; பல உயர்ந்தவர்களின் உடலில்
காயங்கள் உண்டுபண்ணித், தசைகளைக் கிழித்தெறிந்த அலகுகள்; கோழைத்தன்மையின் வெற்றிகள்
; குற்றத்தின் கோலோச்சும் வெறித்தன்மை; கொடுமை அணிந்துகொண்டிருந்த
முடிகள்; குருதிக்கறை படிந்த கைகளோடு இறுகத் தழுவும் அங்கிப் பட்டை அணிந்த ஆணவக்காரர்கள்;
உரிமை வேட்கை உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டதற்காகக் கடவுளுக்கு - கற்பனை பூதத்துக்கு-
நன்றிசெலுத்திய குருமார்கள்; பயங்கர இறந்த காலத்தின் இந்த நினைவுக் குறிப்புகள், இப்பொழுதும்
இருந்துவரும் இந்தக் கொடுந்துன்பங்கள், அச்சமூட்டும் இந்த உண்மைகள், மனித சமுதாயத்தைக்
காக்கவும் வாழ்த்தவுமான விருப்பமும் ஆற்றலும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை
மறுக்கின்றனவே!
மதம் 2
நன்மை செய்யும் ஆற்றல் எது ?
இயற்கையை மீறிய பேராற்றல்
ஒன்றின்மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள், ஒரு கடவுளை விட்டால்,
மற்றொரு கடவுளை உடனே கற்பனை செய்துகொள்ளுகிறார்கள். ஜெஹோவா என்ற கடவுளைக் கைவிட்ட பிறகு,
மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டுவரும் பேராற்றல் ஒன்றினைப்பற்றிப் பேசுகிறார்கள்.
இந்தப் பேராற்றல் என்பதுதான்
என்ன ?
மனிதன் முன்னேறுகிறான்;
அவன், அனுபவத்தின் வாயிலாக உள்ளபடியே முன்னேற வேண்டியவனாக இருக்கிறான். ஒரு குறிப்பிட்ட
இடத்திற்குச் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன், இரண்டு சாலைகள் பிரியும் ஒரு இடத்திற்கு
வந்து சேருகிறான். எந்த வழியாகப் போகலாம் என்று சிந்திக்கிறான். இடதுகைப் பக்கமாகச்
செல்லும் சாலையே சரியானதாகும் என்று நம்பிக்கொண்டு, அவ்வழியே நெடுந்தொலைவு செல்லுகிறான்.
இறுதியில் அந்த வழி சரியானது அல்ல என்று கண்டுகொள்ளுகிறான். அவன் மீண்டும் திரும்பிவந்து,
வலது கைப்பக்கமாகச் செல்லும் சாலைவழியே செல்லுகிறான். அவன் விரும்பிய இடத்தைச் சென்றடைகிறான். மறுபடியும் ஒருமுறை அவன் அந்த இடத்துக்குப்
போகிறான். இம்முறை அவன் இடதுகைப்பக்கச் சாலைவழியே செல்ல முயலுவதில்லை. னெனில் அவன்
ஏற்கெனவே அவ்வழியே சென்று பார்த்திருக்கிறான்; அது தவறான வழி என்பதையும் அறிந்திருக்கிறான்.
அவன் இம்முறை சரியான வழியை எளிதில் பின் பற்றிச் செல்லுகிறான். இப்படி நடைமுறை நடவடிக்கை
யிருந்தும், மதவாதிகள் கூறுகிறார்கள், "மக்களின் நன்மைக்காகப் பேராற்றல் ஒன்று
இருந்துகொண்டு வேலை செய்து வருகிறது" என்று!
குழந்தையொன்று சுடர்விட்டு
எரியும் நெருப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறது; உடனே தன் இளந்தளிர்க் கையால் அதனைப்
பிடிக்கிறது. கை நெருப்பில் பட்டவுடன் பொசுங்கிவிடுகிறது; அதற்குப் பிறகு, அந்தக் குழந்தை
தன் கையை நெருப்பிற்குத் தொலைவாகவே வைத்துக்கொள்கிறது. நன்மை பெறுவதற்கான வழியில் உள்ளுக்குள்
வேலை செய்யும் உணர்வாற்றல், அந்தக் குழந்தைக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது.
உலகில், பட்டுப்பட்டு
ஒருசேரக் குவிந்த அனுபவம், ஒரு ஆற்றலாகவும் முயற்சியாகவும் இருந்து, நன்மையை உண்டாக்குவதற்கான
முறையில் வேலை செய்துவருகிறது. இந்த ஆற்றல் மனச்சான்று அல்ல; அறிவுடைமையும் ஆகாது.
அதற்கு ஒரு விருப்பங் கிடையாது; அதற்கு ஒரு தேவையும் கிடையாது. அது ஒரு முடிவு ஆகும்.
நாம் கொண்டிருக்கும்
ஒழுக்க உணர்வை, அதாவது மனச்சான்றை, வைத்துக்கொண்டு, கடவுள் இருக்கும் தன்மையை நிலைநாட்ட,
ஆயிரக்கணக்கானவர்கள் முயன்று பார்க்கிறார்கள்.
ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு.
பரிவு முதலியவைகள் இறக்குமதி செய்யப்படும் பண்புகள் என்றும், மனச் சான்று
என்பது வெளியிலிருந்து ஆண்டவனால் கொடுக்கப் படுவது என்றும் இந்த மதவாதிகளும், தத்துவாசிரியர்கள்
என்று சொல்லப்படுபவர்களும் கூறிவருகிறார்கள். இந்தப் பண்புகளுக்கான அடிப்படை இங்கே
உண்டாக்கப்படுவதில்லை என்றும், அது மனிதனாலேயேகூட உண்டாக்கப் படுவதில்லை என்றும், கூறி,
கடவுள் ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, அவரிடமிருந்தே அது வந்தது என்றும் சொல்லி வருகிறார்கள்.
மனிதன், சமுதாயமாக வாழும்
உயிரினத்தைச் சேர்ந்த நாம் குடும்பங்களாக, இனங்களாக, நாடுகளாக கூடிக்கூடி வாழ்கிறோம்.
குடும்பம், இனம், நாடு
ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களில், யார்யார், முறையே குடும்பம் — இனம் நாடு ஆகியவற்றின்
மகிழ்ச்சியைப் பெருக்கக் காரணமாக இருக்கிறார்களோ. அவர்கள் பொதுவாக நல்லவர்கள் என்று
கருதப்படுகிறார்கள்; அவர்கள் புகழப்படுகிறார்கள்: போற்றப்படுகிறார்கள்; மரியாதை செலுத்தப்படுகிறார்கள்.
அவர்கள் நல்லவர்கள் என்று மதிக்கப்படுவதோடு, ஒழுக்கத்திற் சிறந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
குடும்பம், இனம், நாடு
ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களில், யார் யார், அவற்றிற்குத் துன்பத்தை இழைக் கிறார்களோ,
அவர்கள், தீயராகக் கருதப்படுகின்றனர்; அவர்கள் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்; ஒதுக்கப்படுகிறார்கள்;
தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாகப் பொதுவாக மதிக்கப்படுகிறார்கள்.
குடும்பமும்,இனமும்,
நாடும் ஒரு அளவான நடவடிக்கையையும் — ஒழுக்கத்தையும், உண்டாக்கிக் கொள்கின்றன. இதில் இயற்கைக்கு மீறிய 'பேராற்றல்' எதுவும் இல்லை!
மனித சமுதாயத்தில் மிகச்
சிறத்தவர் கூறுகிறார், "மனச்சான்று அன்பிலிருந்து பிறக்கிறது" என்று.
நல்லது செய்யவேண்டும்
என்ற பரிவுணர்ச்சி- கடமையுணர்ச்சி, ஆகியவை, இயல்பாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.
காட்டுமிராண்டி மக்களிடையில்,
செயல்களின் உடனடியான விளைவுகளே, ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மக்கள் முன்னேற
முன்னேற, காலத்தால்- இடத்தால் மிகத் தொலைவிலுள்ள விளைவுகளும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
நடவடிக்கையின் தரம் உயர்வடைகிறது. சிந்தித்துப் பார்க்கும் தன்மை வளர்க்கப்படுகிறது.
மனிதன், மற்றொருவர் நிலையில் நின்று சிந்தித்துப் பார்க்கத் தெரிந்துகொள்கிறான். கடமையுணர்ச்சி
நாளுக்குநாள் வலிவடைகிறது; உறுதியும் பெறுகிறது. மனிதன் தன்னைத் தானே விசாரித்தறிகிறான்.
அவன் அன்பு காட்டுகிறான்;
அந்த அன்பு உயர்ந்த நற்பண்புகளுக்கு ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் அமைகிறது. அவன்,
அன்பு செலுத்துகின்ற ஒன்றுக்குத் தீங்கிழைக்கின்றான்; அது குறித்துப் பிறகு அவனுக்குத்
துயர், மனத்தொல்லை, வருத்தம், மனச்சான்று எல்லாம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்
எல்லாவற்றி லும் இயற்கைக்கு மீறிய 'பேராற்றல்' எதுவும் இல்லை! மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.
இயற்கையே ஒரு கண்ணாடிபோல்
விளங்குகிறது. மனிதன், அதில், தன்னுடைய உருவத்தைக் கண்டுகொள்கிறான்.
இயற்கைக்கு மீறிய தன்மையை யுடையதாகக் கருதப்படும் மதங்களெல்லாம், கண்ணாடிக்குப் பின்புறம்
உள்ள உருவத்தையும் கண்டுகொள்வதாகப் பாசாங்கு செய்கின்றன !
ஆத்மீக நெறியில் நின்று.
தத்துவக் கருத்துக்களைக் கூறும் தத்துவ ஆசிரியர்களெல்லாம், பிளாட்டோவிலிருந்து ஸ்வீடன்
போர்க் வரையில். எல்லோரும் உண்மைகளை உற்பத்தி செய்தே கொடுக்கின்றனர்; மதங்களைக் கண்டுபிடித்தவர்களும்
அதே செயலைத்தான் செய்திருக்கிறார்கள்!
எல்லையற்ற கடவுள் ஒருவர்
இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அவருக்காக நாம் என்ன செய்யவேண்டும்? அவர் எல்லையற்ற
தன்மை கொண்டவராதலால், அவர் கட்டுப்பாடற்றவராகிறார்; அவர் கட்டுப்பாடற்றவராகிறபடியினால்,
அவர் நன்மைபெறச் செய்யவோ, தீமை பெறச் செய்யவோ முடியாது. அவருக்குத் தேவை எதுவும் இல்லை.
அவர் எல்லாவற்றையும் கொண்டிருக்கிறார்!
எல்லையற்ற பரம்பொருள்,
தன்னுடைய புகழ்ச்சியை விரும்புகிறது என்று ஒரு மனிதன் நம்பியிருப்பது, எவ்வளவு தற்பெருமைத்தனமாகும்
என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் !
நம்முடைய மதம் சாதித்தது
என்ன? மற்றைய மதங்கள் எல்லாம் தவறுடையன, நாம் நம்முடைய மதத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டால்
போதும் என்று கிருத்தவர்கள் கூறுகிறார்கள்: கிருத்தவ மதத்தைப்பற்றி மட்டுமே ஆராய்வதை
ஒப்புக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கே நாமும் ஆராய்ந்து பார்ப்போம் !
கிருத்தவ மதம் ஏதாவது நன்மை புரிந்ததா? மனிதர்களைப் பெருந்தகையாளராகவும், அருள்
நெஞ்சுடையவர்களாகவும் அது ஆக்கிற்றா ? மாதா கோயில்கள் ஆதிக்கம் பெற்றிருந்தபோது, மக்கள்
மிக்க ஏற்றம் பெற்றவர்களாகவும், மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கப் பட்டார்களா?
கிருத்தவ மதம் இத்தாலி,
ஸ்பெயின், போர்ச்சுக்கல், அயர்லாந்து ஆகியவிடங்களில் என்னென்ன நன்மைகளைப் புரிந்தது?
ஹங்கேரிக்கோ, ஆஸ்டிரியாவுக்கோ
மதம் சாதித்த நன்மை என்ன? சுவிட்ஜர்லாந்து, ஹாலந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா ஆகிய
இடங்களில் கிருத்தவம் என்ன முன்னேற்ற நிலைமையை உண்டாக்கிற்று? நாம் நாணயமான முறையில்
சிந்தித்துப் பார்ப்போம். மதம் இல்லாமல் இருந்தால் இந்த நாடுகளெல்லாம் வீணாகிப் போயிருந்திருக்குமா?
கிருத்துவத்தைத் தவிர, வேறு மதத்தை, இந்த நாடுகளெல்லாம் கொண்டிருந்தால், இவை பாழடைந்து
போயிருந்திருக்குமா?
ஜோராஸ்டரைப் பின்பற்றுபவராக
மாறி யிருந்தால், டார்க்குவேமாடா கெட்டுப்போயிருந்திருப்பாரா? தென் கடல் தீவுகளில்
வழங்கும் மதத்தைப் பின்பற்றியிருந்தால் கால்வின் இன்னமும் மிகவாகக் குருதிவேட்கை கொண்டவராக
மாறியிருந்திருப்பாரா? தந்தை, தனயன், புனித தேவதை ஆகியோரை மறுத்திருந்தால், டச்சு நாட்டு
மக்கள் இன்னமும் மிகவாக முட்டாள்களாக மாறியிருந்திருப்பார்களா? கிருத்துவைப் பின்பற்ற
மறுத்துக் கன்பூஷியஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், ஜான் நாக்ஸ் மிகக் கேடானவராக
மாறியிருந்திருப்பாரா?
அருள் உள்ளங்கொண்ட பரிசுத்த
மதப் பாதிரிமார்களை எடுத்துக்கொள்ளுங்கள் ! அவர்களுக்குக் கிருத்தவ மதம்
எதைக் கற்றுக் கொடுத்தது? அவர்கள் மகிழ்ச்சியை வெறுத்தார்கள்! அவர்கள் வாழ்க்கை வாயிலிலேயே
சாவுத் துணியைக் கட்டித் தொங்கவிட்டார்கள்! அவர்கள் தொட்டிலையே பிணப் பெட்டியாக மாற்றினார்கள்!
அவர்கள் பன்னிரண்டு மாதங்களையும் 'டிசம்பர்' மாதங்களாகவே கொண்டார்கள் ! அவர்கள் குழந்தைப்
பருவத்தை வெறுத்தார்கள்; இளமையை வெறுத்தார்கள்; குழந்தைகளின் மழலை மொழிகளை வெறுத்தார்கள்;
காலை மகிழ்ச்சிப் பாடலை வெறுத்தார்கள்!
பரிசுத்த மதம் முழுக்க
முழுக்க 'சாபக்கேடாக' விளங்கிற்று ! பரிசுத்த மதத்தைச் சார்ந்தவன், பைபிளை ஆண்டவன்
வாக்கு என்றே நம்பினான்; இந்த நம்பிக்கை கொண்டவர்கள்தான கொடுமையாளராகவும், கீழ்மையாளராகவும்
காணப்பட்டார்கள் ! இப்படிப்பட்ட புனித மதத்தைச் சார்ந்தோர், வட அமெரிக்க இந்தியர்களின்
மதத்தைப் பின்பற்றியிருந்தால், மிகக் கேடுகெட்டவர்களாகவா போயிருந்திருப்பார்கள் ?
பைபிளில் கொண்டிருந்த
நம்பிக்கை, மனித சமுதாயத்தின் மீது எப்படிப்பட்ட ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது என்பதற்கு
ஓரு உண்மையை உங்கள் நினைவிற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அரசி எலிஸபெத்தின் முடிசூட்டு
விழாவின்போது, ஒரு தொண்டு கிழவர், ஒரு ஜெனிவா பைபிளை, அரசியினிடத்தில் பரிசாக நல்கினாராம்.
கிழவர். காலத்தின் பழமைபோல் நின்றாராம்; அரசி, உண்மையின் தோற்றம் போல் குழந்தை வடிவில்
நின்றாளாம்; அரசி அந்தப் பைபிளைப் பணிவன்போடு வாங்கிப், பக்தியுடன் முத்தமிட்டு, அதில்
கூறப்பட்டிருப்பவைகளை அப்படியே கடைப்பிடிப்பதாக உறுதிமொழி கூறினாளாம். அந்தப் பைபிளைப்
பெற்றதன் அறிகுறியாகத்தான், அரசி பயபக்தியோடு கத்தோலிக்க மதக்
குருமார்களை வாளுக்கிரை யாக்கினாள் போலும்.
பைபிளை நம்பிய பிராட்டெஸ்டண்டுகளின்
உணர்ச்சி எப்படிப்பட்டது என்பதை, இந்த நிகழ்ச்சியி லிருந்து நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
வேறு சொற்களால் கூறவேண்டுமானால். கத்தோலிக்க உணர்ச்சி எவ்வளவு கொடுமையான தாகவும், கொடூரமான
தாகவும் காணப்பட்டதோ அதே அளவு இதுவும் காணப்பட்டது என்னலாம்.
பைபிள், ஜியார்ஜியாவிலுள்ள
மக்களை அன்புடையவர்களாகவும், அருளுடையவர்களாகவும் செய்திருக்கிறதா? கிருத்தவ மதக் கொலைகாரர்கள்,
மரக்கடவுள்களையும், கற்கடவுள்களையும் வணங்கியிருந்தால், இன்னமும் மிகவாகவா மூர்க்கத்தனமாய்
இருந்திருப்பார்கள் ?
மதம் 3
இயற்கைக்கு மீறிய ஒன்றா?
மதம், எல்லா நாடுகளிலும்,
எல்லாக் காலங்களிலும் பரப்பப்பட்டது; ஆனால் எது எங்கும், எப்பொழுதும் தோல்வியே அடைந்தது!
மதம், மனிதனை ஒருபொழுதும்
அருள் நெஞ்சினனாகச் செய்யவில்லை.
மத விசாரணைக் குழுவின்
கொடுமைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் !
அடிமை வாழ்வை ஒழிப்பதில்,
மதம், எந்த அளவுக்குச் சாதனை புரிந்தது?
மதம், லிப்பி - சால்ஸ்பர்ரி
- ஆண்டர்சன் வில்லி ஆகியோரின் கொடுமைகளைத் தவிர்க்க எந்த அளவுக்கு வேலை செய்தது?
மதம், அறிவியலுக்கு
- ஆராய்ச்சி அறிவுக்கு சிந்தனைக்கு எப்பொழுதும் எதிரியாகவே இருந்து வந்திருக்கிறது.
மதம், மனிதனை விடுதலையுடையவனாக
ஒருபொழுதும் செய்யவில்லை.
மதம், மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவோ,
பண்புள்ளவனாகவோ, உழைக்கும் திறம் படைத்தவனாகவோ, கொண்டவனாகவோ ஒருபொழுதும்
செய்ய வில்லை.
காட்டுமிராண்டிகளை விட,
கிருத்தவர்கள், மிக்கப் பண்புடையவர்களாகவும், மிக்க நல்ல எண்ணமுடையவர்களாகவும், மிக்க
நாணயமுடையவர்களாகவுமா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்?
காட்டுமிராண்டிகளிடையில்
கெட்ட பழக்கங்களும், கொடுமைகளும் நிரம்பி இருப்பதற்கு அவர்களுடைய அறியாமையும், மூட
நம்பிக்கையுமே காரணங்களாகும் என்பதை நாம் அறியமாட்டோமா?
இயற்கையின் ஆற்றலையும்,
அமைப்பையும், ஒருமைப் பாட்டையும் உணர்ந்தவர்களுக்கு, மதம் பொருளற்ற ஒன்றாகவே படும்.
இயற்கையையோ அல்லது இயற்கைப்
பொருள்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம்,
அலைகளை விரிவுபடுத்தவோ அல்லது அடக்கிவைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின்
திசையை மாற்றிவிட நம்மால் இயலுமா ? மண்டியிடுதல் நமக்குச் சொத்துக்களைச் சேர்த்துத்
தருமா ? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கிக்கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன்
மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன்மூலம் நன்மையையோ அல்லது
மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா?
புற உலகில் காணப்படும்
உண்மைகள் எவ்வளவு அழுத்தமானதாகவும், அவசியத்தை ஒட்டி உற்பத்தி ஆக்கப்படுவதாகவும் இருக்கின்றனவோ,
அதேபோல், அக உலகில் காணப்படும் உண்மைகளும் இருக்கின்றன அல்லவா?
நாம் உடலை எப்படி இயற்கையான தாகக் கருதுகிறோமோ அதே அளவு உள்ளத்தையும் இயற்கையானதாகக்
கருதுகிறோம் அல்லவா?
இயற்கை ஓரு ஆண்டையைக்
கொண்டிருக்கிறது; இந்த ஆண்டை வழிபாட்டுரையைக் கேட்பார்; இந்த ஆண்டை தண்டிப்பார், வரங்கொடுப்பார்;
அவர் புகழ்ச்சியையும், துதிபாடுதலையும் விரும்புவார்; அவர் ஆண்மையாளரையும், விடுதலையாளரையும்
வெறுப்பார் என்ற கோட்பாட்டின் மீதுதான் மதம் கட்டப்பட்டிருக்கிறது. மனிதன் மேலுலகிலிருந்து
எந்த நன்மையாவது பெற்றிருக்கிறானா?
நாம் ஓரு கோட்பாட்டைக்
கொண்டிருக்கிறோம். என்றால், அதன் அடிப்படைக்கான உண்மைகளை நாம் சொண்டிருக்கவேண்டும்.
அதற்கான நான்கு எல்லைகளை நாம் கொண்டிருக்கவேண்டும். அதனை ஊகித்தல், உணர்ச்சி கொள்ளுதல்,
கற்பனைசெய்தல், மனதிற்படல் ஆகியவைகளைக் கொண்டு நாம் உருவாக்கக் கூடாது. முழுத்தோற்றமும்
நல்ல அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும். நாம் அதனைக் கட்ட முற்படுகிறோம் என்றால், நாம்
அதன் அடிப்படையிலிருந்தே துவங்கவேண்டும்.
நான் ஒரு கோட்பாட்டைக்
கொண்டிருக்கிறேன்; நான் அதற்கான நான்கு எல்லைக் கற்களையும் கொண்டிருக்கிறேன்.
முதல் எல்லைக்கல், பொருள்
அல்லது வஸ்து ஆகும்; அதனைச் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது.
இரண்டாவது எல்லைக்கல்,
ஆற்றல் ஆகும்; அதனையும் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது.
மூன்றாவது எல்லைக்கல், பொருளும் ஆற்றலும் பிரிந்து வாழ என்பதாகும்; ஆற்றலில்லாமல்
பொருளெதுவுமில்லை. பொருளில்லாமல் ஆற்றலெதுவுமில்லை.
நான்காவது எல்லைக்கல்,
எது அழிக்கப்பட முடியாதோ அது உண்டாக்கப்பட முடியாது என்பதாகும்; அதாவது அழிக்க முடியாததை
உண்டாக்க முடியாது.
இந்த எல்லைக் கற்கள்
உண்மையானவைகள் என்று ஆகுமேயானால், பொருளும் ஆற்றலும் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில்
எல்லையற்றவைகள் என்பது தானே பெறப்படும்; அவைகளை அதிகப்படுத்தவோ, குறைக்கச் செய்யவோ
முடியாது.
இதிலிருந்து பெறப்படுவது.
ஒன்றும் இதுவரை உண்டாக்கப்படவில்லை, உண்டாக்கப்பட முடியாது என்பதாகும். படைப்பாளர்
என்று ஒருவர் ஒருபொழுதும் இருக்கவில்லை, இருக்கவும் முடியாது என்பதாகும்.
இதிலிருந்து பெறப்படுவது
என்னவென்றால், பொருள் —ஆற்றல், இவைகளுக்குப் பின்னால் எந்த ஒரு அறிவோ அல்லது எந்த ஒரு
அமைப்போ இருக்கமுடியாது என்பதாகும்.
ஆற்றல் இல்லாமல் அறிவு
இருக்க வழியில்லை. பொருளில்லாமல் ஆற்றல் இருக்க வழியில்லை. எனவே, பொருளுக்குப் பின்னால்
எந்த ஒரு அறிவோ அல்லது எந்த ஒரு ஆற்றலோ, எவ்வகையிலும் இருக்க வழியில்லை என்பது தானே
பெறப்படுகின்றது.
இயற்கைக்கு மீறிய ஒன்று
வாழவில்லை, வாழமுடியாது என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த நான்கு எல்லைக் கற்களும்
உண்மைகள் தாம் என்றால், இயற்கைக்கு ஆண்டை என்று ஒருவர் இருக்க முடியாது. பொருளும் ஆற்றலும், தோற்றம்— இறுதியற்றனவாக எல்லையற்றனவாக இருக்கின்றன வென்றால்,
கடவுள் என்று ஒருவர் இருக்கவில்லை; கடவுள் அண்டத்தைப் படைக்கவோ, ஆட்சிபுரியவோ செய்யவில்லை;
வழிபாட்டுரைக்கும் பதிலுரைக்கும் கடவுள் இருக்கவில்லை; அவதிப்பட்டோர்க்கு உதவி புரியும்
கடவுள் இருக்கவில்லை; அறியாத மக்களின் துன்பங்களைக் கண்டு இரக்கப்படும் கடவுள் இகுக்கவில்லை;
உடலில் தழும்புகள் ஏற்ற அடிமைகள் பற்றியோ, குழந்தைகளிடத்திலிருந்து துண்டிக்கப்பட்ட
தாய்மார்களைப் பற்றியோ கவலையுறும் கடவுள் இருக்கவில்லை; சித்ரவதைச் செய்யப்படும் மக்களைக்
காப்பாற்றும் கடவுள் இருக்க வில்லை;நெருப்பிலே தள்ளப்படும் தன்னலமற்ற வீரர்களைக் காக்க
முன்வரும் கடவுள் இருக்கவில்லை என்பது. தானே பெறப்படும். வேறு சொற்களால் குறிப்பிடவேண்டுமானால்,
மேலுலகத்திலிருந்து மனிதன் எந்தவித உதவியையும் பெறவில்லை; இடப்பட்ட பலிகளெல்லாம் வெறும்
வீண்; வழி பாட்டுரைகளெல்லாம் பதிலுரைக்கப்படாமலேயே, வெறுங்காற்றில் மறைந்தொழிந்தன என்பதை
இது தெளிவாக்கிக் காட்டுகின்றது என்னலாம். நான் எல்லாம் அறிந்திருப்பதாகப் பாசாங்கு
செய்யவில்லை. நான் எதைச் சரி என்று சிந்திக்கிறேனோ அதையே சொல்கிறேன்.
பொருளும் ஆற்றலும் எல்லையற்ற
காலத்திலிருந்து நின்று நிலவி வருகின்றன என்றால், நடக்கக் கூடியன வெல்லாம் நடந்து வந்திருக்கின்றன:
நடக்கக் கூடியன வெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன; நடக்கக் கூடுவன வெல்லாம் இனி நடைபெறும்
என்பது, தானே பெறப்படும்.
அண்டத்தில், இயற்கை எதிர்பார்க்காத
வாய்ப்போ, காணாத திடீர் மாற்றமோ ஏற்பட வழியில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும்
அதனதன் பெற்றோர்களைக் கொண்டேயிருக்கின்றன.
நிகழாத ஒன்று இருக்க
முடியாது நிகழ்காலம், இறந்த காலத்தின் காரியமும், இறந்த காலத்தின் காரணமும் ஆகும்.
எல்லையற்ற பெருஞ் சங்கிலியில்
பிளவு ஏற்படவோ, கரணையொன்று காணாமற் போகவோ செய்யவில்லை; இனியும் செய்யாது. நட்சத்திரங்களின்
அளவும் அமைப்பும், உலகங்களின் தட்பவெப்ப நிலை, பல்லேறு வகைப்பட்ட மர வகைகள் - விலங்கு
இனங்கள், எல்லாவித உணர்ச்சி- அறிவு - மனச்சான்று, எல்லாவித விருப்புகள்-வெறுப்புகள்
எல்லாவித நன்மைகள்-தீமைகள் எல்லாவித எண்ணங்கள் - கனவுகள், எல்லாவித நம்பிக்கைகள் -அச்சங்கள்
இவையெல்லாம் அவசியத்தை யொட்டி எழுந்தனவாகும். இத்த எண்ணற்ற பொருள்களிலும் அவைபற்றிய
தொடர்புகளிலும், இயற்கை விதிகளுக்கு மாறுபட்ட ஒன்று, இந்த அண்டத்தில் இருக்க முடியாது.
பொருளும் - ஆற்றலும்
எல்லையற்ற காலந்தொட்டு இருந்து வருகின்றன வென்றால், மனிதன் அறிவுடைய படைப்பாளர் எவரையும்
கொண்டிருந்ததில்லை; மனிதன் தனிப்படைப்பைச் சேர்ந்தவனல்லன், என்று நாம் எளிதிற் கூறலாம்.
நாம் ஏதாவது அறிந்திருக்கிறோம்
என்றால், ஜெஹோவாவாகிய கடவுட் குயவனார், களிமண்ணைப் பிசைந்து, ஆண்- பெண் வடிவங்களைச்
செய்யவில்லை; பிறகு அவர்களின் உடல்களில் ஊதி உயிர்க்காற்றை எழுப்பி, அவர்களைப் பிறப்பிக்கச்
செய்யவில்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம்.
நமது முதல் பெற்றோர்கள்
வெளியிலிருந்து வரவில்லை என்பதை நாம் அறிவோம், அவர்கள் இவ்வுலகைச் சேர்ந்தவர்கள்
என்பதையும், இங்கேயே உற்பத்தி செய்யப் பட்டவர்கள் என்பதையும், எந்தக் கடவுளின் ஊதுதலிலிருந்தும்
அவர்களின் வாழ்வு பிறக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஏதாவது நாம் அறிந்திருக்கிறோமென்றால்,
இந்த அண்டம இயற்கையானது என்பதையும், ஆண்களும் - பெண்களும் இயற்கையாகவே உற்பத்தி யாக்கப்பட்டார்கள்
என்பதையும் நாம் இப்பொழுது நன்கு அறிவோம். நாம் நம் முன்னோர்களை அறிவோம்; அவரது வழிவழித்
தலைமுறையினரை அறிவோம்.
சங்கிலியின் எல்லாக்
கரணைகளையும், புல்வகையி லிருந்து மனித வகை வரையிலுள்ள இறுபத்தாறு கரணைகளையும் நாம்
அறிந்திருக்கிறோம்.
நாம் இந்தச் செய்திகளை
அறிந்தது, வேத நூல்களிலிருந்தல்ல. நாம், எலும்புக்கூடுகள் கூறும் உண்மைகளிலிருந்தும்,
வாழும் உயிரினங்களின் வடிவங்களிலிருந்தும் அவற்றை அறிகிறோம்
மிகச்சாதாரண உணர்ச்சியற்ற
அணுத்திரள்களிலிருந்து உயிரணுதோன்றி, அந்த உயிரணு நீர்க்கோத்தவொன்றாகி, அது இரண்டாகப்
பிரிந்து, பிரிந்தவொன்று புழுவாகிப், பின் நீண்ட- பருத்த புழுவாகிப் பின் முதுகு எலும்புடையனவாகிப்,
பின் நீர்வாழ்வனவாகிப், பின் ஊர்வனவாகிப் பின் பறப்பனவாகிப், பின் நடப்பனவாகிப், பின்
விலங்குகளாகிப், பின் குரங்காகிப், பின் வாலில்லாக் குரங்காகிப், பின் கொரில்லாவாகிப்.
பின் மந்தியாகிப், பின் மனிதனாகி வளர்ந்து வந்திருக்கும் வழி வழித் தலைமுறை வரலாற்றை
நாம் அறிந்திருக்கிறோம்.
வாழ்வு நடந்துவந்த வழியை
நாம் அறிகிறோம் முன்னேற்றத்தின் அடிச்சுவடுகளை நாம் அறிகிறோம். அவைகள் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் சங்கிலியின் கடைசிக் கரணையையும் நாம் அறிகிறோம்.
இவற்றிற்கெல்லாம், நாம் மற்றெல்லோரைக் காட்டிலும், மிகச்சிறந்த உயிர் நூல் வல்லுநராகிய
ஏனெஸ்ட்ஹெக்கேலுக்கு மிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே, இப்பொழுது, நாம்
அண்டம் இயற்கையானது என்பதை உணருகிறோம். இயற்கைக்கு மீறிய வொன்று இருப்பதை மறுக்கிறோம்.
மதம் 4
எப்படிச் சீர்திருத்துவது?
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
ஆடவரும் பெண்டிரும். உலகைச் சீர்திருத்தப் பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள்,
கடவுள்களையும், பூதங்களையும், மோட்சங்களையும், நரகங்களையும் உண்டாக்கிப் பார்த்தார்கள்;
அவர்கள் புனித வேதங்களை எழுதிப் பார்த்தார்கள்; அதிசயங்கள் காட்டிப் பார்த்தார்கள்;
கோயில்களையும் இருட்டறைகளையும் கட்டிப் பார்த்தார்கள்; அவர்கள், அரசர்களுக்கும் அரசிகளுக்கும்
முடி சூட்டியும் பார்த்தார்கள். முடி கழற்றியும் பார்த்தார்கள்; அவர்கள் மக்களைச் சித்ரவதை
செய்தும். சிறைபிடித்தும், தோலுரித்தும், நெருப்பிலிட்டும் பார்த்தார்கள்; அவர்கள்
மத போதனை செய்தும் பார்த்தார்கள்: வழிபாட்டுரை கூறியும் பார்த்தார்கள்; அவர்கள், உறுதிமொழிகளை
யளித்தும் பார்த்தார்கள்; அச்சுறுத்தல்களைச் செய்தும் பார்த்தார்கள்; அவர்கள், மகிழ்ச்சியூட்டிப்
பார்த்தார்கள்; நயந்து கூறிப் பார்த்தார்கள்; அவர்கள் கற்றுக்கொடுத்தும் பார்த்தார்கள்:
அதன்படி செய்யச் சொல்லியும் பார்த்தார்கள். அவர்கள், மக்கள் நாணயமாகவும், நேர்மையாகவும்,
கடும் உழைப்போடும், நல்ல நலத்தோடும் வாழ்வதற்கு எவ்வளவோ எண்ணற்ற வழிகளில் முயன்று பார்த்தார்கள்;
அவர்கள். வைத்தியச் சாலைகளையும் வைத்திய விடுதிகளையும், பல்கலைக் கழகங்களையும், பள்ளிக்கூடங்களையும்
கட்டிப் பார்த்தார்கள்; அவர்கள், மக்கள் நன்றாகவும் மகிழ்ச்சிகரமாகவும்
வாழ, அவர்களால் இயன்ற மட்டும் செய்து பார்த்தார்கள்; இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள்
வெற்றியடையவில்லை!
ஏன் சீர்திருத்தக்காரர்களெல்லாம்
தோல்வியுற்றனர்? ஏன் தோற்றனர்? என்பதை நான் கூறுகிறேன்.
அறியாமை, வறுமை, தீமை
ஆகியவைகள் உலகில் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. சாக்கடையே மருத்துவமனையாக விளங்குகிறது.
தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில், தங்கள் குச்சி வீடுகள் குடிசைகள்
குகைகள் ஆகியவற்றைக் குழந்தைளால் நிரப்புகின்றனர். அவர்கள், 'ஆண்டவனையும்' 'அதிர்ஷ்டத்தையும்'
'தருமத்தையும்' நம்பியிருக்கின்றனர். நிகழ்ச்சிகளுக்கான காரணங்களைப்பற்றிச் சிந்திப்பதற்கோ,
அல்லது பொறுப்புணர்ச்சியைப்பற்றி உணர்ந்து கொள்வதற்கோ, சிறிதும் அறிவு அற்றவர்களாக
இருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் குழந்தைகளை விரும்புவதில்லை; னென்றால், குழந்தை
ஒரு 'சாபக்கேடு'-அதற்கும் அவர்களுக்கும் 'சாபக்கேடு' என்று எண்ணுகின்றனர். குழந்தை
யாராலும் வரவேற்கப்படுவதில்லை; ஏனென்றால், அது ஒரு சுமையாகக் கருதப்படுகிறது. இப்படி
வேண்டப்படாத குழந்தைகள் தான், சிறைக்கூடங்களையும் காவற்கூடங்களையும், வைத்திய சாலைகளையும்,
பைத்திய சாலைகளையும், கொலைக்களங்களையும் தூக்குமரங்களையும் நிரப்புகின்றனர். ஒரு சிலர்தான்
எதிர்பாராத தன்மையாலோ அல்லது ஆதரவு கிடைத்த முறையாலோ இவற்றினின்றும் தப்பி வெளியேறுகின்றனர்;
ஆனால் பெரும்பான்மையோர் அவற்றினின்றும் மீளமுடியாமல், மாண்டொழிகின்றார்கள். அவர்கள்
எத்தி நடப்பதாலும், வலிவு காட்டுதலானும் பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள்.
அவர்கள், தாங்கள் கற்ற கெட்ட வொழுக்கங்களைத் தங்கள் குழந்தைகளுக்குகும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட தீமைகளுக்கு
எதிரில் சீர்திருத்தத் தொண்டுகள்—முயற்சிகள் வலிவற்றனவாகி விடுகின்றன. 'தருமம்' செய்தல்
என்பது. ஒருவிதத்தில், நம்மையறியாமலேயே, குற்றத்தை வளர்க்கும் கருவியாக ஆகிவிடுகிறது!
தோல்வி, இயற்கையின் அடையாளக்
குறிபோலும்! ஏன்? இயற்கை ஒரு வரையறுக்கப்பட்ட எடுத்துக் காட்டையோ, அறிவையோ கொண்டிருக்கவில்லை;
இயற்கை 'நோக்கம்' இல்லாமல் உற்பத்தி செய்கிறது; 'குறிக்கோள்' இல்லாமல் நிலைநிறுத்துகிறது;
'எண்ணம்' இல்லாமல் அழிக்கிறது! மனிதன் சிறிதளவு அறிவைப் பெற்றிருக்கிறான்; அதனை அவன்
பயன்படுத்த வேண்டும். மனித சமுதாயத்தை நெம்பிவிடுவதற்கான தூண்டுகோல், அறிவுடைமையேயாகும்!
நம் முன் நிற்கும் முக்கிய
கேள்வி, அறியாமையும், வறுமையும், தீமையும், தங்கள் குழந்தை குட்டிகளோடு உலகை நிரப்பிக்
கொண்டிருப்பதை, நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதுதான்.
அறியாமையும் தீமையும்
என்ற மிஸௌரி ஆறு, நாகரிகம் என்ற மிஸிஸிபி ஆற்றில் விழாதவாறு தடுத்து நிறுத்த நம்மால்
ஆகுமா?
இந்த உலகம், எப்பொழுதும்,
அறியாமை உணர்ச்சிக்கு இரையாகிக்கொண்டு தானிருக்க வேண்டாமா? நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள்,
எல்லா மக்களாலும் கண்டறிந்து கொள்ளும்படியான அளவுக்கு, இந்த உலகம் நாகரிகப்படுமா?
குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படாத-குழந்தைகளைப் பெருஞ் சுமைகளாகவும், 'சாபக்கேடு'களாவும்
கருதுகின் ஆடவரும் பெண்டிரும் ஏன் குழந்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கொண்டிருக்கவேண்டும்?
ஏனென்றால் அவர்கள், அறிவைவிட மிக்க உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார்கள்; மனச்சான்றைவிட
மிக்க உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள் ; பகுத்தறிவைவிட மிக்க உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள்!
எழுத்தின் மூலமாகவோ,
பேச்சின் வாயிலாகவோ, நீங்கள், அவர்களைச் சீர்திருத்த முடியாது! போதனை புரிவதன் மூலமோ
கொள்கையைச் சொல்லுவதன் வாயிலாகவோ நீங்கள். அவர்களைச் சீர்திருத்த முடியாது! உணர்ச்சி,
இப்பொழுதும் சரி, எப்பொழுதும் சரி செவிடாகவே இருந்து வந்திருக்கிறது. சீர்திருத்தத்திற்காகக்
கொள்ளப்பட்ட இந்தக் கருவிகளெல்லாம். எவ்வகையிலும் பயன்படாமல் போய்விட்டன. குற்றவாளிகள்,
நாடோடிகள், பிச்சைக்காரர்கள். தோல்வியுறுவோர் ஆகியோர் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே
போகின்றனர். சிறைக் கூடங்கள், காவற்கூடங்கள், ஏழை விடுதிகள், பைத்தியக்கார விடுதிகள்
ஆகியவை எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே போகின்றன. மதம் ஏதும் செய்ய முடியாமல் தவிக்கிறது!
சட்டம் மக்களைத் தண்டிக்கும்: ஆனால், அது குற்றவாளிகளைச் சீர்திருத்தவும் செய்யாது.
குற்றத்தைத் தடுக்கவும் செய்யாது. தீமையின் அலைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தீமை
ஆற்றல்களை எதிர்த்துத் தொடுத்திருக்கும் போர், இரவின் இருளை எதிர்த்துப் போரிடும் மின்மினிப்
பூச்சிகளின் சண்டையைப்போல, பயனற்றதாகவே இருந்து வருகிறது.
ஆனால், ஒரே ஒரு நம்பிக்கை
மட்டும் இருந்துவருகிறது!
அறியாமை, வறுமை, தீமை, ஆகியவைகள் பெருக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். ஒழுக்கப்
போதனையின் மூலம் இதனைச் செய்துவிடமுடியாது. பேச்சின் மூலமோ எடுத்துக் காட்டின் வாயிலாகவோ
இதனைச் செய்துவிட முடியாது. மதத்தினாலோ அல்லது சட்டத்தினாலோ, போதனை புரியவனாலோ அல்லது
தூக்கு போடுபவனாலோ இதனைச் செய்துவிட முடியாது. உடலை வற்புறுத்துவதனாலோ அல்லது உள்ளத்தை
வற்புறுத்துவதனாலோ இதனைச் செய்துவிட முடியாது. இதனைச் செய்யவேண்டுமானால், ஒரே ஒரு வழிதானிருக்கிறது!
அறிவியல், பெண்மகளை,
அவளுக்கு அவளே சொந்தக்காரி என்றும், அதிகாரி என்றும் சொல்லும் வகையில், அவளை ஆக்கவேண்டும்.
மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரே பாதுகாப்பாளனான அறிவியல், ஒரு பெண்.
தான் ஒரு குழந்தைக்குத் தாயாக ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளும் ஆற்றலை,
அவள் கையில் கொடுக்க உதவி புரியவேண்டும்.
முழுக்கேள்விக்கு இதுதான்
சிறந்த விடையாகிறது. இது பெண்களை விடுவிக்கிறது. இதனால் குழந்தைகள், வரவேற்கப்படும்
குழந்தைகளாகவே பெற்றெடுக்கப்படுவார்கள். அக்குழந்தைகள் அன்போடு வாரி அணைக்கப்படுவர்;
பரிவோடு பால் குடிக்க விடப்படுவர்; இல்லங்கள் தோறும் அவர்கள் ஒளியும் மகிழ்ச்சியும்
ஊட்டுவார்கள்; இல்லங்கள் பொலிவோடும் பூரிப்போடும் காணப்படும்.
மக்களுக்கு விடுதலை வழங்குவதைவிட,
அவர்களை அடிமை வாழ்வில் வைத்திருப்பதே உண்மையும் தூய்மையும் ஆகும் என்றும், அறிவு பெறுவதைவிட,
அச்சங் கொண்டிருப்பதே பாதுகாப்புக்கான வழி என்றும், மற்றவர்களின் கட்டளைகளுக்கு யார்
கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களே உண்மையில் நல்லவர்கள் என்றும், அறியாமை என்னும்
நிலத்தில்தான் நன்மை என்னும் நறுமலர் வளரும் என்றும் நம்பிக்கொண்டிருக்கும்
ஆட வரும் பெண்டிரும், அறிவியலின் இந்த ஆற்றல் கண்டு திகைப்படைந்த முகங்களைத், தங்களின்
முன்னேற்றத்' தடுப்புக் கைகளால், வெட்கப்பட்டு மூடிக்கொள்வார்கள் என்பது உறுதி!
ஒளி தீமையின் பகை என்றும்,
இருளில்தான் தூய்கை நிலவுகிறது என்றும் மக்கள் தங்களைப்பற்றி அறிந்து கொள்வது மிக அபாயகரமானது
என்றும், தங்களுடைய நலனுக்குப் பாதகமாக இருக்கின்ற இயற்கையின் உண்மைகளை ஆராய்வது மிகக்
கேடு பயக்கும் என்றும் நினைக்கும் ஆடவர்-பெண்டிர், அறிவு உணர்ச்சியை அடக்கியாளும்படி
செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தைக் கண்டு, உறுதியாக அச்சப்பட்டுப் போவார்கள்!
ஆனால், என்று ஆடவரும்
= பெண்டிரும். சுற்றுச் சூழ்நிலைகளுக்கான காரணங்களைத் தங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தும்,
தங்கள் ஒழுக்க அறிவினைக் கொண்டு ஆராய்ந்தும் பார்க்கிறார்களோ அந்த நாளையே நான் ஆவலோடு
எதிர்பார்க்கிறேன். என்று, அவ்வறிவுகளைத் துணைக்கொண்டு, நோயும் துயரும் நீடித்து நிலைத்திருப்பதை
மறுத்தொதுக்க முன்வருவார்களோ, தோல்விகள் நிரம்பியிருப்பதை மறுத்தொதுக்க முன்வருவார்களோ,
அந்த நாளைத்தான் நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ஒரு அந்தக்காலம் வரும்பொழுது,
சிறை கூடத்தின் சுவர்கள் கீழே விழும்; இருட்டறைகள் ஒளியால் விளங்கும். உலகை வெறுத்து
வரும் தூக்குமரத்தின் நிழல் மறையும்! அந்தக்காலம் வரும்பொழுது, வறுமையும் குற்றமும்
குழந்தையற்றவைகளாகும்! அந்தக்காலம் வரும்பொழுது தேவைக்காகத் துடித்திடும் கைகால்,
'நைவேத்தியம்' வாங்கக் கைகளை நீட்டா; அவைகள் புழுதியாகக் கருதப்படும்! அந்தக்காலம் வரும்போது. உலகம் முழுவதும் அறிவின் மயமாகும்; நன்மையின்
மயமாகும்; விடுதலை மயமாகும்!
மதம் ஒருபொழுதும் மனித
சமுதாயத்தைச் சீர்திருத்தாது; ஏனெனில், மதம் அடிமைத்தனம் கொண்டிருப்பது ஆகும் !
மதத் தொடர்பற்ற விடுதலை
வாழ்வு வாழ்வதும், அச்சத்தின் கட்டுக்களையும் கோட்டைகளையும் விட்டு விலகுவதும். நேராக
நிமிர்ந்து நின்று எதிர்காலத்தைப் புன்னகையோடு வரவேற்பதும் எவ்வளவோ மேன்மையானவையாகும்!
சில வேளைகளில் உல்லாச
வாழ்வுக்கு உங்களை ஓப்படைப்பதும், கடலலையிலே மூழ்கி எழுவதும், உலகின் கண்மூடித்தனமான
ஆற்றலில் நீங்கள் திளைத்திருப்பதும், சிந்திப்பதும், கனவு காணுவதும் வாழ்க்கையின் தொடர்ச்சியையும்
அதிலுள்ள கட்டு திட்டங்களையும் மறப்பதும், கவலை தரும் நோக்கத்தையும் குறிக்கோளையும்
மறப்பதும், மூளையின் கற்பனை ஓவியங்களிலே திளைத்து நிற்பதும், இறந்தகால அணைப்புகளையும்,
முத்தங்களையும் மீண்டும் ஓருமுறை நினைப்பதும், வாழ்க்கையின் ஆரம்ப நிலையை மீண்டும்
கொண்டுவருவதும். இறந்து போனவர்களுடைய உருவங்களையும். முகங்களையும் மீண்டும் ஒருமுறை
பார்ப்பதும், வருங்காலத்திற்காகும்படியான ஓவியப் படங்களை வரைவதும், எல்லாக் கடவுள்களையும்
மறப்பதும் அவர்களுடைய உறுதிமொழிகளையும் அச்சுறுத்தல்களையும் மறப்பதும் வாழ்க்கையின்
மகிழ்ச்சிக் கட்டங்களை நீங்களே உள்ளுக்குள் நினைந்து மகிழ்வதும், போர்ப்படையின் இசை
முழக்கத்தைக் கேட்பதும் அச்சமற்ற உங்களுடைய இதயத் துடிப்புகளை நீங்கள் கேட்பதும் எவ்வளவோ
மேன்மை யானவைகளாகும்!
மேலும், நல்ல பயனுள்ள செயல்களை நீங்கள் செய்யவும், உங்களுடைய மூளையிலுள்ள கொள்கைக்கு
ஏற்ப எண்ணத்தையும் செயலையும் நீங்கள் அடையவும், பொது பொருள்கள் என்னும் பூக்களில்,
கலைத் தேனைப் பருக, தேனீயைப்போல் பறந்து செல்லவும், உண்மைகளைப், பயிற்சி பெற்ற - நிலையான
கண்களால் பார்த்தறியவும், வெகு தொலைவில் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாதவைகளை இப்பொழுதுள்ளவைகளோடு,
முடிபோடும், மெல்லிய நைந்துபோன கயிறுகளைக் கண்டறியவும், அறிவினைப் பெருக்கிக் கொள்ளவும்,
வலிவற்றவர்களின் தாங்கமுடியாத சுமைகளை அகற்றவும், மூளையை வளப்படுத்தவும், நேர்மைக்குப்
பரிந்து பேசவும், உயிருணர்ச்சிக்கு ஒரு அரண்மனை அமைக்கவும், நீங்கள் வீறிட்டு எழுவது,
எவ்வளவோ மேன்மை பயப்பதாகும்!
இதுதான் உண்மையான 'மதம்';
இதுதான் உண்மையான 'வழிபாடு' !
மூடநம்பிக்கை 1
மூடநம்பிக்கை என்றால் என்ன?
மூடநம்பிக்கை என்றால்
என்ன ?
சான்று கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் ஒன்றை நம்புவது!
ஒரு அதிசயத்றிற்கு மற்றொரு
அதிசயத்தைக் காரணங் காட்டுவது!
உலகம் அதிர்ஷ்டத்தால்
அல்லது அந்தராத்மாவால் ஆளப்படுவதாக நம்புவது!
காரணத்திற்கும் காரியத்திற்கும்
உள்ள உண்மைத் தொடர்பை அலட்சியப்படுத்துவது!
எண்ணத்தை, நோக்கத்தைக்,
குறிக்கோளை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக வைப்பது!
மனமானது பொருளை உற்பத்தி
செய்கிறது, அதனை அடக்கி யாண்டுவருகிறது என்று நம்புவது!
பொருளை விட்டுவிட்டு
ஆற்றலை மட்டும் நம்புவது: அல்லது ஆற்றலை விட்டுவிட்டுப் பொருளை மட்டும் நம்புவது!
அதிசயச் செயல்கள், மந்திரங்கள், செபங்கள், கனவுகள், ஜோஸ்யங்கள், குறிகள் ஆகியவற்றை
நம்புவது!
இயற்கைக்கு மீறிய ஆற்றலை
நம்புவது!
மூடநம்பிக்கைக்கு உண்மையான
அடிப்படை, அறி நம்பிக்கையின்மீது அதன எழுப்பப்படுகிறது; வெறும் ஆவல் அதன் கும்பமாகும்.
மூட நம்பிக்கை - அறியாமையின் குழந்தையாகும்; துன்பத்தின் தாயாகும்
கிட்டத்தட்ட எல்லோருடைய
மூளையிலும் மூட நம்பிக்கை என்னும் புகைப்படலம் படர்ந்திருக்கவே செய்கிறது.
தட்டுகளைத் துடைத்துக்கொண்டிருக்கிற
ஒருத்தி, துடைக்கும் துணியைத் தவறிக் கீழே விட்டுவிட்டால், அவள் உடனே கூறுகிறாள்.
"இன்று விருந்தினரின் கூட்டம் வரும்" என்று.
துணி கீழே விழுவதற்கும்.
விருந்தினர்கள் வருவதற்கும் நேரடியான தொடர்பு எதுவும் இல்லை என்பதைப் பெரும்பாலான மக்கள்
ஒத்துக்கொள்ளவே செய்வர். கீழே துணி விழும் தன்மை, எங்கேயோ இருக்கின்றவர்கள் உள்ளத்தில்,
இங்கே வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தை எவ்வகையிலும் உண்டாக்க முடியாது என்பதைப்
பலரும் உணர்வர். துணியைக் கீழே போட்ட குறிப்பிட்ட ஒருத்தியைப் பார்க்க, வருகை தரவேண்டும்
என்ற விருப்பத்தை, மற்றவர்கள் உள்ளத்தில் எப்படி ஒரு துணி எழுப்பமுடியும் ? கீழே துணி
விழுவதற்கும், பின்னால் நிகழப்போகிற நிகழ்ச்சிகளுக்கும் நடைபெறக்கூடிய தொடர்பு, உறுதியாக,
ஒன்றும் இருக்க முடியாது.
ஒரு மனிதன், தற்செயலாகத்,
தன் இடது தோள் மேலாகத் திங்களைப் பார்க்கிறான் என்றால், அவன் உடனே கூறுகிறான்,
"இது எனக்குத் துர் அதிர்ஷ்டம்" என்று.
திங்களை இடது தோள் மேலாகப் பார்ப்பதோ அல்லது வலது தோள் மேலாகப் பார்ப்பதோ அல்லது
அதனைப் பார்க்காமல் இருப்பதோ திங்களை எந்தவிதத்திலும் பாதிப்பதுமில்லை; உலகிலுள்ள பொருளிடத்துத்
திங்களுக்குள்ள ஆக்கத்தையோ அல்லது ஆதிக்கத்தையோ எந்த விதத்திலும் மாற்றப்போவதுமில்லை
இடது தோளின் மேலாகப் பார்வையைச் செலுத்துவது, பொருள்களின் இயற்கைப் பண்புகளை, உறுதியாகப்
பாதிப்பதில்லை இடது தோளின் மேலாகத் திங்களைப் பார்ப்பவனின் வாழ்க்கையில், சாதாரணமாக
ஏற்படக்கூடிய கெட்ட நிலை மைகளுக்கும், இடது தோளின் மேலாகப் பார்ப்பதற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை என்பதை நாம் நன்கு அறிகிறோம்.
ஒரு பெண், ஒரு பூவிலுள்ள
இதழ்களை எண்ணுகிறாள்; எண்ணும்போது, "ஒன்று, அவன் வருகிறான; இரண்டு, அவன் பார்க்கிறான்;
மூன்று, அவன் காதல் புரிகிறான்: நான்கு, அவன் மணம் செய்கிறான்; ஐந்து, அவன் போய் விடுகிறான்"
என்று சொல்லுகிறாள்.
உறுதியாக அந்தப் பூ,
அந்தப் பெண்ணினுடைய காதலைப் பொறுத்தோ, அல்லது அவளது திருமணத்தைப் பொறுத்தோ, குறியாகக்
கொண்டு வளரவில்லை; அதிலுள்ள இதழ்களும் அவைகளைப் பொறுத்து அறுதியிடப்படவில்லை; அவள்
அந்தக் குறிப்பிட்ட பூவைப் பறிக்கும் போது, எந்த 'அறிவும்' அவள் முன்வந்துநின்று, அவள்
கைக்கு வழிகாட்டியாக அமைவதில்லை. அதுபோலவே, ஒருவரு டைய எதிர்காலம் இன்பகரமாக இருக்குமா,
துன்பகரமாக இருக்குமா என்பதை, ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளின் எண்ணிக்கை அறுதியிட்டுக்
கூறாது.
ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ஷ்ட—துர் அதிர்ஷ்ட நாட்கள், எண்கள் குறிகள், அடையாளங்கள்,
நதைகள் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமையைத்
துர் அதிர்ஷ்டமான நாள் என்று கருதுகிறார்கள். பயணம் புறப்பட, திருமணம் செய்துகொள்ள,
ஏதாவது தொழிலில் பங்குபோட அந்த நாள் மிகக் கெட்ட நாள் என்று கருதுகின்றனர். இதற்குச்
சொல்லப்படும் ஒரே காரணம் வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்டமான நாள் என்பதாகும்.
கடற்பயணம் புறப்படுதல்,
காற்றுகளை அல்லது அலைகளை அல்லது நீர் உயர்தல்களை மற்ற நாட்களில் எந்த அளவுக்குப் பாதிக்கிறதோ
அந்த அளவுக்குக் குறைவாகவோ அதிகமாகவோ வெள்ளிக்கிழமை என்பதற்காகப் பாதிப்பதில்லை. அப்படியிருந்தும்.
வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்டமான நாள் என்று கொள்ளப்படுவதற்கு இருக்கும் ஒரே காரணம்,
'அப்படிச் சொல்லப்படுகிறது' என்பதுதான்
அதுபோலவே, பதின்மூன்று
பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது மிக ஆபத்தானது என்று பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது.
அப்படிப் பதின்மூன்று என்பது ஆபத்தான எண் என்றால் இருபத்தாறு எண்பது அகைப்போல் இருமடங்கு
ஆபத்தானதாக ஆகவேண்டும். ஐம்பத்திரண்டு என்பது நான்கு மடங்கு ஆபத்தானதாக இருக்கவேண்டும்
பதின்மூன்று பேர்கள்
உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்களில் ஒருவர் ஓராண்டுக் காலத்திற்குள் இறந்து படுவார்
என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருடைய உணவு செரிக்கும் தன்மைக்கும், உட்காருவோரின்
எண்ணிக்கைக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இருக்க வில்லை; தனிப்பட்டவர்களின்
நோய்களுக்கும், எண்ணுக்கும் தொடர்பு இருக்கவில்லை என்பதை நாம் சாதாரணமாக இப்பொழுது
அறிகிறோம். பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்தால் ஒருவர் உறதியாக இறந்துபடுவர் என்ற கருத்தை
ஏற்றுக்கொண்டு எண்ணிக்கையை முக்கியமாக நாம் எடுத்துக்கொண்டோமென்றால் பதின்மூன்று பேர்களைவிடப்
பதின் நான்கு பேர்கள் என்பது இன்னமும் அதிகமான ஆபத்தைத் தருவதாகத்தானிருக்க வேண்டும்.
உப்பு வைந்திருக்கும்
தட்டைக் கவிழ்த்துவிடுவது என்பது மிகவும் துர் அதிர்ஷ்டமானது. திராட்சைக் குழம்பைச்
சிந்துவது என்பது அளவளவு துர் அதிர்ஷ்டமானது அல்ல என்று சொல்லப்படுகிறது
ஏன் உப்புமட்டும் எதிரிடையானதாக
மாறவேண்டும்; திராட்சைக் குழம்பு சாதமாக இருக்கவேண்டும்?
படக் கொட்டகையில் ஒன்றைக்
கண்ணன் முதலில் நுழைந்தால், மக்களின் எண்ணிக்கை குறையும், படம் ஓடுவது தோல்வியுறும்
என்று நம்பப்படுகின்றது.
முதலில் நுழையும் ஒரு
மனிதனுடைய கண்பார்வைக் கோளாறு ஒரு சமுதாயத்தின் நோக்கத்தை எப்படி மாற்றிவிடும்? அல்லது
சமுதாயத்தின் நோக்கம் எப்படி ஒரு ஒன்றைக் கண்ண னை முதலில் கொட்டசையில் நுழையும்படி
செய்யும்? இவைகளுக்குத் தெளிவான விளக்கங்கள் ஒருபொழுதும் கொடுக்கப்பட்டதில்லை. இவ்வாறு
சொல்லப்படும் காரணத்திற்கும்-காரியத்திற்கும் நாமறிந்தவரையில் எந்தவகை தொடர்பும் இருப்பதாகத்
தெரிய வில்லை!
வெள்ளைக்கல் அணிந்துகொள்வது
துர் அதிர்ஷ்டத்தைத்தரும்; சிவப்புக்கல் அணிந்து கொள்வது நலத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிர்காலத்தை இந்தக் கற்கள் எப்படிப் பாதிக்கும்? அவை எப்படிக்
காரணங்களை அழித்துக் காரியங்களைத் தோல்வியுறச் செய்யும்? இவற்றின் விளக்கத்தை யாரும்
அறிந்திருப்பதாகத் தெரியவில்லை!
இப்படியாகப் பல்லாயிரக்கணக்காக
அதிர்ஷ்ட-துர் அதிர்ஷ்டப்பொருள்கள், எச்சரிக்கைகள், சகுணங்கள், முன்னறிவுப்புகள் இருக்கின்றன;
ஆனால் தெளிவுணர்வும், அறிவுக்கூர்மையும், பகுத்தறிவும் கொண்ட மக்கள் அனைவரும், இவை
ஒவ்வொன்றும் அபத்தம் என்றும், முட்டாள் தனமான மூட நம்பிக்கை என்றும் அறிவார்கள்.
மூடநம்பிக்கை 2
மூடநம்பிக்கையின் அடிப்படை
ஞாயிறு-திங்கள் கிரகணங்கள்,
பின்னால் ஏற்படும் கொள்ளை நோய், கொடும் பஞ்சம் ஆகியவற்றை முன் கூட்டியே அறிவிப்பவைகள்
என்றும், வால் நட்சத்திரம் தோன்றுவது அரசர்களின் இறப்பையோ, நாடுகளின் அழிவையோ, போரின்
வருகையையோ அல்லது பிளேக்கின் தோற்றத்தையோ முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறி என்றும்
பன்னெடுங்காலமாக நம்பப்பட்டு வருகின்றன. வானத்தில் ஏற்படும் வியப்புக்குரிய மாறுதல்களான
வடக்கே பால்வெளியில் வெளிச்சம் தோன்றுவது, மதியைச் சுற்றி வட்டம் ஏற்படுவது, பரிதியில்
கறைகள் காணப்படுவது, விண்வீழ் கொள்ளி வீழ்வது போன்றவைகள் சிறிது அறிவு வந்த முன்னோர்களுக்கு
மிக்க அச்சத்தைக் கொடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட வானிலை நிகழ்ச்சிகளால் அச்சுறுத்தப்படும்
அழிவைத் தடுக்கவேண்டி, அவர்கள். முழங்கால் படியிட்டுக் கொண்டு, அவைகளை நோக்கி வழிபாட்டுரை
கூறியும், பலிகளிட்டும் வணக்கம் செலுத்தினர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு உதவிக்காக
வானை நோக்கிக் கதறிடும்போது அவர்களுடைய முகங்கள் அச்சத்தால் கவ்வப்பட்டிருந்தன. அந்தச் சமயங்களில், புரோகிதர்கள் தாங்கள் ஆண்டவனோடு நெருங்கிய பழக்கங்கொண்டவர்களாகவும்,
கிரகணங்கள், ஞாயிற்றின் கறைகள், வடக்கு வெளிச்சம் வால் தட்சத்திரம், விண்வீழ்கொள்ளி
ஆகியவற்றிற்கான பொருள்களை அறிந்தவர்களாகவும், ஆண்டவனின் பொறுமை அற்றுப் போய்விட்டதையும்,
அவன் பழி வாங்க வாளைத் தீட்டிக்கொண்டுருப்பதையும் அறிந்து கொண்டவர்களாகவும்; இப்பொழுது
உள்ள புரோகிதர்களைப் போலவே பாசாங்கு செய்தனர். அவர்கள் மக்கள் இவ்விதத் தொல்லைகளினின்றும்
தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால், புரோகிதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலமும்,
செபமணிகளை உருட்டுவதன்மூலமும் பக்திக் காணிக்கையை இரட்டிப்பாக்குவதன் மூலமும் செய்து
கொள்ளலாம் என்று சொல்லிவைத்தனர்.
நில அதிர்ச்சிகளும்,
பெரும் புயற்காற்றுகளும் மாதா கோயிலில் ஏராளமான மக்களைக் கொண்டுவந்து சேர்த் தன. பெருந்தொல்லைகளும்
துயரங்களும் ஏற்படும் போதும், கஞ்சத்தனம் கொண்டவன், தன் நடுக்கங் கொண்ட கைகளால், பணப்பையைத்
திறந்தான், கிரகணங்கள் ஏற்படும்போது, திருடர்களும், கொள்ளைக்காரர்களும் கடவுளோடு சேர்ந்து
கொள்ளையிடப்பட்ட பொருள்களைப் பிரித்துக்கொண்டார்கள். ஏழ்மையும், நாணயமும், அறியாமையும்
உடைய பெண்கள், தாங்கள் கடவுளுக்கு வழிபாட்டுரை கூறி மறந்துவிட்டோம் என்பதை நினைத்துக்கொண்டு,
தாங்கள் சேர்த்துவைத் திருந்த சிறிதளவு தொகையையும் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.
நாம் இப்பொழுது அறிவோம்,
வானத்தில் நிகழும் வியப்புக்குரிய நிகழ்ச்சி - தோன்றும் அடையாளங்கள் ஆகியவற்றிற்கும்,
அரசர்கள், நாடுகள் அல்லது தனிப்பட்டவர்கள் ஆகியோர்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை,
என்பதை அவைகளுக்கும், உலகில் வாழும் எறும்புகள், தேனீக்கூட்டங்கள்,
பூச்சிகளின் முட்டைகள் ஆகியவற்றிற்கும் எவ்வளவு இணக்கம் உண்டோ அதில் கூடியதோ அல்லது
குறைந்ததோ அல்ல. அவைகளுக்கும், மனிதர் களுக்கும் உள்ள இணக்கம் கிரகணங்கள் சில இடையீடுகளில்
வரும் என்பதை நாம் அறிவோம். அவற்றின் வருகைகூட நம்மால் ஆராய்ச்சியின் மூலம் முன்கூட்டியே
அறிவிக்கப்பட முடிகிறது.
சில உயிரற்ற பொருள்கள்கூட,
தொல்லைகளையும் துயரங்களையும் போக்கி, நன்மை பயக்கும் அருந்தன்மை கொண்டவைகளாகச் சில
காலத்திற்கு முன்புவரையிலும் மக்களால் நம்பப்பட்டுவந்தன. புனிதமான ஆண்-பெண் துறவிகளின்
எலும்புகள், பெரிய துறவி ஒருவரின் கிழிந்த துணி, தியாகம் செய்தோரின் மயிர், ஏசுவை அறைந்த
சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு, ஏசுவை அறைந்த துருப்பிடித்த ஆணிகள், பயபக்தியுடையோரின்
பற்கள்-விரல், நகங்கள் இன்னும் இது போன்ற பொருள்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றை
அரும் பொருளென நம்பிவந்தனர்.
ஒரு எலும்புத் துண்டையோ
அல்லது கிழிந்த துணியையோ அல்லது ஒரு மரத்துண்டையோ அல்லது புனிதத் தன்மை கொண்ட மயிர்களையோ
கொண்ட பெட்டியை முத்தமிட்டால் அதுவும் காணிக்கை செலுத்றிவிட்டு முத்தமிட்டால் நோயாளியின்
நோய் பறந்துவிடும் என்று நம்பப்பட்டது. இத்தகைய காணிக்கைகளால் மாதா கோவிலுக்கு ஏராளமான
சொத்து சேர்ந்தது.
அத்தகை எலும்பு அல்லது
கிழிந்ததுணி அல்லது மரத்துண்டு ஏதாவதொன்றிலிருந்து அதிசயிக்கத்தக்க நன்மைபுரியும் ஆவி,
பெட்டியை விட்டு வெளிக்கிளம்பி நோயாளிடம் சேர்ந்து, கடவுள் சார்பாக அவன் உடலில் நின்று. அவன் நோய்க்குக் காரணமான பிசாசுகளை விரட்டியடிக்கும் என்று
மூடத்தனமாக நம்பினர்.
நோய் தீர்க்கும் எலும்புத்
துண்டுகள் கிழிந்த துணிகள், புனித மயிர்கள் ஆகியவற்றில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதற்கு,
வேறோர் நம்பிக்கை மூலகாரணமாகும். அதுதான, நோய்களெலலாம் பிசாசுகளின் ஏவலின்பேரில் வருகின்றன
என்று கொண்டிருந்த நம்பிக்கையாகும். சித்தம் கலங்கியவர்கள், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களே
என்று நம்பினர். மயக்கமும், நரம்புத் துடிப்பும் சாத்தான் அனுப்பிய பிசாசுகளால் ஏற்படுபவை
என்று கருதினர். சுருங்கக் கூறவேண்டுமானால், மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு தொல்லையும்,
நரக தேவனின் கொடிய ஏவலாளர்களால் உண்டாக்கப்படுவதாகும் என்று எண்ணினர். இத்தகைய நம்பிக்கை
உலகெங்கும் இன்றைய நிலையில்கூட நிலவி வருகிறது. நமது காலத்திலேயேகூட கோடிக்கணக்கான
மக்கள் புனித எலும்புகளின் தன்மையில் நம்பிக்கையும், பக்தியும் வைத்திருக்கத்தான் செய்கின்றனர்
ஆனால், இன்று, பிசாசுகள்
இருப்பதை, எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை! பிசாசுகள் நோய்கள் உண்டாக்குகின்றன
என்பதையும் எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை! மேலும், புனித எலும்புகளோ அல்லது
மயிர்களோ, கிழிந்த துணிகளோ அல்லது மரத் துண்டுகளோ நோயைப்போக்கும் என்பதையும் இழந்த
நலத்தை மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும் என்பதையும், எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை!
அறிவுள்ள மக்களனைவரும்
அறிவார்கள். அடிகளார் ஒருவரின் எலும்புத் துண்டு விலங்கு ஒன்றின் எலும்புத் துண்டைக்
காட்டிலும் எந்த வகையிலும் சீரிய நன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, அதுபோலவே ஒரு
நாடோடிப் பிச்சைக்காரனின் கிழிந்த ஆடை, அடிகளார் ஒருவரின் கிழிந்த
ஆடையைப் போன்றே ஒரே தன்மையாக விளங்கக் கூடியது என்பதையும் அவர்கள் அறிவார்கள். குதிரையின்
மயிரும் மதத் தியாகி ஒருவரின் மயிரைப் போலவே, அவ்வளவு விரைவாகவும், எளிதாகவும் நோய்நொடிகளைப்
போக்கக்கூடியதுதான் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிவார்கள். புனிதப்பொருள் எல்லாம்
மதக் குப்பை என்பதை நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். அந்தக் குப்பையைப் பயன்படுத்துவர்களெல்லாம்
நாணயமற்றவர்கள் என்பதையும், அதனை நம்பி வாழ்பவர்கள் அத்துணைப் பெரும் முட்டாள்கள் என்பதையும்
நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.
தாயத்துக்களிலும், மந்திரங்களிலும்.
பேய்களிலும் நம்பிக்கை வைப்பது மிகச் சாதாரணமான மூடநம்பிக்கையாகும்.
நமது முன்னோர்கள் இந்த
அதிசயப் பொருள்களை நோய் தீர்க்கும் மருந்தாகவோ, அல்லது நோய் போக்கும் ஆற்றலாகவோ கருதவில்லை;
மகான்சளின் புனிதப் பொருள்களைக் கண்டு பேய் பிசாசுகள் அஞ்சுகின்றன என்றே கருதினர்.
அந்தப் பேய் பிசாசுகள் மகானின் எலும்பைக் கண்டவுடனும், உண்மைச் சிலுவையின் மரத் துண்டைப்
பார்த்தவுடனும், புனித நீர் தெளிக்கப்பட்டவுடனும் அஞ்சி அந்தந்த இடங்களை விட்டு ஓடிவிடுகின்றன
என்று அவர்கள் நம்பினர். ஆகையினாலே அந்தப் பேய் பிசாசுகள் புனிதக் கோயில் மணியின் ஓசையைக்
கேட்டு அஞ்சுவதுடன் ஓடி ஒளிந்துவிடுகின்றன என்றும், மெழுகுவர்த்தியின் ஒளியைக் கண்டதும்,
ஏசுவின் சிலுவையைப் பார்த்ததும் மிக அஞ்சி ஓடுகின்றன என்றும் அவர்கள் கருதி வந்தனர்.
அந்தக் காலங்களில் புரோகிதர்கள்
பணம் என்னும் மீனைப் பிடிக்கும் தூண்டில்காரர்களாக இருந்து அதிசயப் பொருள்களைத் தூண்டில்களாகப்
பயன்படுத்தி வந்தனர்!
மூடநம்பிக்கை 3
அதிசயம்பற்றிய மூடநம்பிக்கை
பேய்—பூதம்—பிசாசு ஆகியவற்றிலே
மக்கள் கொண் டிருந்த நம்பிக்கை, மாந்திரீகம் என்னும் வேறோர் நம்பிக் கைக்கு அடிப்படையாக
அமைந்திருந்தது.
பூதத்திற்கு 'ஆன்மா'
ஒன்றைக் காவுகொடுத்தால் அது, அதற்குப் பதிலாகச் சில பல நன்மைகளைப் புரியும் என்று நம்பப்பட்டது.
வயதுமுதிர்ந்த கிழவன் தன் ஆன்மாவைப் பூதத்திற்கு ஒப்படைத்து அதன் பாதுகாப்பில் நிறுத்திவைத்தால்,
அவனது கூனி-உடைந்த முதுகு நிமிர்ந்து நேராகும், கிழத்தன்மை இளைமையாக மாறும் வெள்ளிய
மயிர் பழுப்பு நிறம் கொள்ளும், நலிந்த இதயம் துடிக்கும் குழந்தை இதயமாக மாறும் என்றெல்லாம்
நம்பப்பட்டன. மந்திரம் ஓதுவதாலும், செபம் செய்வதாலும் கெட்ட பண்புடையவன் பழிக்குப்பழி
தீர்த்துக் கொள்ள முடியும். ஏழை பணக்காரன் ஆகமுடியும், பேராசை பிடித்தவன் பெரிய பதவிக்கும்-அதிகாரத்திற்கும்
உயரமுடியும் என்றெல்லாம் நம்பப்பட்டன. இப்படிப்பட்ட வாழ்க்கையில், ஏற்படும் எல்லா நன்மைகளையும்,
பூதமே முன்னின்று செய்வதாகக் கருதப்பட்டது, கெட்ட பூதம் ஒன்றின் ஆசைகளுக்குக் கட்டுப்படாமல்
நிற்கக் கற்றுக்கொண்டவர்களுக்கு மோட்ச உலகத்தில் நன்மைகள் காத்துக்கொண்டு
இருக்கும் என்றும், ஆனால் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்களுக்குப் பூதம் இவ்வுலகிலேயே
நன்மை புரியும் என்றும் பலரும் நம்பினர் மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்,
பூதத்தோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற காரணத்திற்காக பல அத்தகையோர்க்கு இழைக்கப்பட்ட
கொடுமைகளை எந்தக் கற்பனையாளராலும்கூட தீட்டிக்காட்ட முடியாது. நல்லவர்கள் கூட பூதத்தோடு
தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுக் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டனர். அப்படிப்பட்ட
காரணங்களால் அழிக்கப்பட்ட குடும்பங்கள், சிறையிலடைக்கப்பட்ட தாய் தந்தை மார்கள், சித்ரவதை
செய்யப்பட்ட பெரியவர்கள், எரிக்கப்பட்ட சீலர்கள், அவிக்கப்பட்ட அடுப்புகள், கொல்லப்பட்ட
குழந்தைகள், கைகால் முறித்திடும் பலகையில் கட்டப்பட்டுப் பிய்க்கப்பட்ட, சிதைக்கப்பட்ட
வயதானவர்கள் - ஏழைகள் உதவியற்றோர் எத்தனை ஆயிரம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
மூடநம்பிக்கையும் அச்சமும்
ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடியிருந்த நாட்களைப் பற்றிச் சிறிது
சிந்தித்துப் பாருங்கள்! குற்றஞ்சாட்டிய நல்லவர்களையே குற்றவாளியாகக் கருதப்பட்ட நாட்களையும்,
அறியாமையை வெளிப்படுத்துவதையே குற்றத்தை ஒப்புக்கொள்வதாகும் என்று கருதப்பட்ட நாட்களையும்,
கிருத்துவ உலகம் முழுவதும் மதிகலங்கியிருந்த நாட்களையும் சிறிது சிந்தித்துப் பாருங்கள்!
இந்தக் கொடுமைகளெல்லாம்
மூட நம்பிக்கையின் விளைவுகள் என்பதை நாம் இப்பொழுது நன்கு அறிகிறோம். மக்கள் நுகர்ந்து
வந்த வேதனைகளுக்கெல்லாம். அறியாமையே தாயாகும் என்பதை நாம் இப்பொழுது அறிகிறோம். மந்திர
சாதனை என்பது ஒரு காலத்திலும் நிகழ்ந்ததில்லை என்பதையும் பூதத்தால் மக்கள் நன்மை யேதும் அடைந்ததில்லை என்பதையும் நாம் இப்பொழுது அறிகிறோம்; ஆனால்
நமது காட்டுமிராண்டித் தன்ழையி லிருந்த பக்தியுள்ள முன்னோர்கள் அதுபற்றித் தவறாகவே
எண்ணிவந்திருக்கின்றனர்.
நமது முன்னோர்கள் அதிசயவித்தைகளிலும்,
அதிசய நிகழ்ச்சிகளிலும், அடையாளங்களிலும், கிரகணங்களிலும் வால் நட்சத்திரங்களிலும்,
எலும்புகளின் மகிமையிலும், பேய் பூதம் பிசாசுகளின் நம்பிக்கை கொண்டடிருந்தனர். ஆற்றல்களிலும்
முழு இவையெல்லாம் அதிசயப் பொருள்களாகவும், அதிசய நிகழ்ச்சிகளாகவுமே கருதப்பட்டன. இந்த
உலகமானது மந்திரவித்தையால் நிரம்பப் பெற்றதாகவே கொள்ளப்பட்டது பேய்-பூதம்-பிசாசுகளெல்லாம்
ஜாலவித்தை நிகழ்த்துவோராக அதாவது ஜாலவித்தைக்காரர்களாகக் கருதப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு
அடிப்படையாக இயற்கையான காரணங்கள் உண்டு என்பதை முன்னோர்கள் உணர வில்லை. பூதம் ஒன்றை
விரும்பும்; அது உடனே நிகழும் சாத்தானுக்குத் தன் 'ஆன்மா'வை ஒப்படைத்தவன், கைகால்களை
ஆட்டுவான். சில புரியாத சொற்களைக் கூறுவான், அவ்வளவுதான். உடனே அவன் எதிர்பார்ப்பது
நிகழும்! இதில் இயற்கையான காரணங்கள் இருப்பதாக நம்பப் பட்டதில்லை. ஏமாற்றமும் மதிமயக்கமும்,
பயங்கரமும் அதிசயமும் இவ்வுலகை ஆண்டுவந்தன. இவற்றிற்கெல்லாம் இருந்த அடிப்படை இப்பொழுது
தகர்த்தெறியப்பட்டுவிட்டது: பகுத்தறிவு அவைகளைத் துரத்தியடித்து விட்டது. அறியாத்தன்மை,
பொய்களுக்கு, நாக்குகளையும் இறக்கைகளையும் கொடுத்தது; அவைகள் பறந்தன; அப்பொழுது ஊமையாகவும்
நொண்டியாகவும் இருந்த உண்மைகள் பின்னால் விடப்பட்டன; அவைகள் அலட்சியப்படுத்தப்பட்டு,
வெளிப்படுத்தப்படாமல் பின் தங்கின.
அதிசயம் என்றால் என்ன? இயற்கையின் ஆண்டை யான ஆண்டவன், இயற்கையின் உண்மைகளுக்குத்
தொடர்பில்லாதவகையில், ஒன்றினைச் செய்துகாட்டுவது. இதுதான், அதிசயம் என்பதற்கு நாணயமாகச்
சொல்லக் கூடிய பொருளாக இருக்க முடியும்.
ஒரு மனிதன் முழுவட்டம்
ஒன்று வரைந்து, அதன் விட்டம், வட்டத்தின் சுற்றளவில் சரிபாதியாகும் என்று கூறுவானேயானால்,
அது பூகணிதத்தில் அதிசயமாகக் கருதப்படும். ஒரு மனிதன் நான்கு என்ற எண்ணை இரண்டு தடவையாகக்கூட்டி
ஒன்பது வருகிறது என்று காட்டுவானேயானால், அது கணிதத்தில் அதிசயமாகக் கொள்ளப்படும்.
ஒரு மனிதன் கல் ஒன்றை ஆகாயத்தில் தூக்கி எறிந்து, அது விழும்பொழுது முதல் நொடியில்
பத்து அடி தாண்டி, இரண்டாவது நொடியில் இருபத்தைந்து அடி தாண்டி, மூன்றாவது நொடியில்
ஐந்து அடி தாண்டுமேயானால். அது இயற்கைப் பொருளியலில் அதிசயமாகக் கருதப்படும். ஒரு மனிதன்
உயிர்க்காற்று நீர்க்காற்று உப்புக்காற்று மூன்றையும் கலந்து, தங்கத்தைச் செய்து காட்டுவானேயானால்,
அது கலவையியலில் அதிசயமாக ஏற்கப்படும். ஒரு மதபோதகன் தன் மதக் கொள்கையொன்றை நிரூபித்துக்
காட்டுவானேயானால், அது மதயியவில் அதிசயமாக மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சி ஒன்று ஐம்பது
சத வெள்ளிப்பணத்தை ஒரு டாலரின் மதிப்புக்கு உயர்த்திக் காட்டுமேயானால் அது பொருளியலில்
அதிசயமாக எண்ணப்படும். சதுரத்தை அப்படியே முக்கோணமாக ஆக்கிக்காட்டுவது சிறந்த அதிசயமாகக்
கருதப்படும். ஒரு நிலைக்கண்ணாடி தனக்கு முன்னால் நிற்பவர்களைக் காட்டாமல், தனக்குப்
பின்புறமாய் நிற்பவர்களைக் காட்டுமேயானால், அதுவே ஒரு பெரிய அதிசயமாக நினைக்கப்படும்.
ஒரு கேள்வி கேட்டு, அதன் எதிரொலி அந்தக்கேள்விக்கான விடையாக வருமேயானால், அது அதிசயங்களில்
ஒன்றாகக் போற்றப் படும். சுருங்கச் சொல்லுவதானால், இயற்கையின்
உண்மைகளுக்கு மாறாகவோ, அல்லது இயற்கையின் உண்மைகளை அலட்சியப்படுத்தியோ செய்து காட்டப்படும்
எந்த ஒரு செயலும் அதிசயத்தின்பாற்படும்!
இப்பொழுது, நாம் 'இயற்கையின
ஒருமித்த நியதி" என்று சொல்லப்படுவதொரு கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனதன்
இயற்கைப் பண்புகளுக்கேற்ப ஓவ்வொரு பொருளும் நடக்கின்றது. அல்லது நடத்துவிக்கப்படுகின்றது
என்பதை நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஒரேவிதமான சூழ்நிலையில் முடிவுகளெல்லாம் ஏறத்தாழ
ஒரேவிதமாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஒரேவிதமான பொருள்கள்
ஒரேவிதமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன; ஒரேவிதமான பொருள்கள் ஒரேவிதமான பொருள்களையே
உற்பத்தி செய்யும் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். எனவே. இப்பொழுது, நிகழ்ச்சிகளுக்கு
இயற்கையான பெற்றோர்கள் உண்டு என்பதையும், அவைகளில் எவையும் குழந்தையில்லாமல் செத்துப்போகாதென்பதையும்
நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
'அதிசயக் காட்சிகள்'
அனைத்தும் நடைமுறைக்கு என்பதுமட்டுமல்லாமல், அவையெல்லாம் எந்த தல்ல சிந்தனையாளனாலும்
சிந்திக்கப்படமுடியாத வையுமாகும்.
இப்பொழுது, நல்லறிவு
படைத்த எவனும், அதிசயக் காட்சியொன்று நடத்திக் காட்டப்பட்டது என்பதையோ, இனி நடத்திக்
நடத்திக் காட்டப்படும் என்பதையோ ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அதிசயக் காட்சிகள்பற்றிய
நம்பிக்கை, அறியாமை என்னும் நிலத்தில்தான், வளருகிறது!
மூடநம்பிக்கை 4
நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும்
நமது முன்னோர்கள், வான
இருளில், மனித சமுதாயத்திற்கு மாறுபாடான கெட்ட ஆவிகள் வாழ்ந்தன என்று கருதியது போலவே,
நல்ல ஆவிகள் பலவும் உலாவின என்றும் நம்பினர். கெட்ட ஆவிகள் சாத்தானிடம் எப்படிப்பட்ட
உறவைக் கொண்டிருந்தனவோ, அதே வித மான உறவைத்தான், நல்ல ஆவிகள், கடவுளிடம் கொண்டிருந்ததாக
அவர்கள் கருதினர். கெட்ட ஆவியின் ஆசை வார்த்தைகளினின்றும், தூண்டுதல்களினின்றும், பயபக்தி
உடையவர்களைக் காப்பாற்றுவதே நல்ல ஆவிகளின் தொழில். யார் யார் தாயத்துக்களைக் கட்டிக்
கொண்டும் மந்திரங்களைச் செபித்துக் கொண்டும், வழிபாட்டுரைகளைச் சொல்லிக்கொண்டும், செபமணிகளை
உருட்டிக்கொண்டும். நோன்புகள் எடுத்துக்கொண்டும், சடங்குகள் செய்துகொண்டும், இருந்தார்களோ
அவர்களைப்பற்றி அந்த நல்ல ஆவிகள் கவலை செலுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன
என்றும் நம்பப்பட்டது. பயபக்தி உடையவர்களின் மார்பில் வாள் வீசப்பட்டாலோ அல்லது அம்பு
பாய்ச்சப்பட்டாலோ, உடனே அந்த நல்ல ஆவிகள் சென்று அவைகளைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு
நன்மை செய்யும் என்றும் கருதப்பட்டது. உண்மை நம்பிக்கையாளரைப் பொறுத்து, அவர்கள், நஞ்சைக் கெடுதியற்றதாக ஆக்கவும், அறியாத்தன்மைக் குப்பாது காப்பாக
இருக்கும், வேறு ஆயிரக்கணக்கான வழிகளில் மக்களுக்கு ஆதரவு தரவும், மீட்சி கொடுக்கவும்
ஆன தொண்டுகளைப் புரிந்துவந்தன என்றும் கொள்ளப்பட்டது. அவைகள் பயபக்தியுடையவர்களின்
உள்ளத்திலிருந்து ஐயப்பாடுகளைப் போக்கின அவர்களுடைய உள்ளத்தில் அறியாத்தன்மை பயபக்தி
ஆகிய விதைகளைத் தூவின: பெண்களின் ஆசை வலைகளினின்றும் மகான்களை மீட்டன; உண்ணா நோன்பு
இருந்தும் வழிபாட்டுரை கூறியும் வாழ்ந்துவந்தவர்களுக்காக, மோட்ச லோகத்தின் தன்மைகளை
விளக்கிக் கூறின. பயபக்தி கொண்ட நல்லவர்களை உணர்ச்சி இன்பங்களை மறக்கச் செய்யவும்,
சாத்தானை வெறுக்கச் செய்யவும் பேருதவி புரிந்தன என்றெல்லாம் நம்பப்பட்டன.
அந்த நல்ல ஆவிகள் ஞானமுழுக்கு
செய்யப்பட்ட குழந்தைகளை ஓம்பின; புனித சூளுரைகளுரைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன;
கடவுளை நம்பின புரோகிதர்கள், சந்நியாசினிகள், நாடோடிப்பிச்சைக்காரர்கள் ஆகியவர்களைக்
காப்பாற்றி வந்தன!
இந்த நல்ல ஆவிகளிலும்
பலவகைகள் இருந்தன! சில ஆண்களாகவும், பெண்களாகவும் இவ்வுலகில் வாழ்ந்திருந்தன; சில இவ்வுலகில்
வாழ்ந்ததேயில்லை; சில ஆரம்பகாலத்திதிருந்தே தேவதைகளாக இருந்தன! அவைகள், சரியாக எப்படிப்பட்டவைகள்
என்பது பற்றியோ, அல்லது அவைகள் எப்படித் தோற்றமளித்தன என்பது பற்றியோ, அல்லது அவைகள்
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எவ்வழியாகப் போயின என்பது பற்றியோ, அல்லது அவைகள்
எப்படி மனிதர்களின் உள்ளத்தைப் பாதித்தன அல்லது உள்ளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின
என்பதுபற்றியோ திட்டவட்டமாகக் கூறினவர்கள் யாருமில்லை!
கெட்ட ஆவிகளுக்கெல்லாம் அரசன் சாத்தான் என்றும் நல்ல ஆவிகளுக்கெல்லாம் அரசன
கடவுள் என்றும் நம்பப்பட்டன. உண்மையில் பார்க்கப்போனால், கடவுள்தான் எல்லாவற்றிற்கும்
அரசன் என்றும், சாத்தான்கூட ஆண்டவனின் பிள்ளைகளிலே ஒருவன் என்றும் நம்பப்பட்டன. இந்தக்
கடவுளும் இந்தச் சாத்தானும் மனிதர்களின் 'ஆன்மாக்'களை வசப்படுத்திக்கொள்வதில் போட்டி
போட்டுக்கொண்டு, போரில் ஈடுபட்டனர்! கடவுள் அழியாப் பேரின்பத்தைப் பரிசுகளாகக் கொடுத்து,
அழியா நரகவேதனைகளைப்பற்றி அச்சுறுத்தி வந்தார்! சாத்தான் இவ்வுலக இன்பத்தை அளித்து,
உணர்வுகளுக்ககெல்லாம் நுகர்ச்சியைக் கொடுத்துக் காதல் விளையாட்டுகளையெல்லாம் காட்டி.
மோட்ச உலகத்தின் மகிழ்ச்சியைப் பார்த்தும் நரகத்தின் வேதனைகளைப் பார்த்தும் சிரித்தான்!
அவன், தன் குற்றக்கையால் ஐயவிதைகளைத் தூவினான். மக்களை ஆராய்ச்சி செய்யும்படியும்,
பகுத்தறியும்படியும், சான்று காணும்படியும், தன்னம்பிக்கை கொள்ளும்படியும் தூண்டினான்
; மக்களின் இதயத்தில் விடுதலைவேட்கையன்பை ஊனறினான்; விலங்குகளை உடைத்தெறிய அவர்களுக்கு
உதவி செய்தான்; சிறைக்கூடங்களிலிருந்து தப்பிஓட அவர்களுக்கு வழி கற்பித்தான்; அவர்களைச்
சிந்திக்கும்படி வற்புறுத்தினான்! இந்த வழிகளில் அவன் மக்களாகிய குழந்தைகளைக் கெடுத்தான்!
வழிபாட்டுரையால் பலியால்.
உண்ணாநோன்பால், சிலபல சடங்குகளைச் செய்வதால், கடவுளின் உதவியையும் நல்ல ஆவிகளின் உதவியையும்
பெற்றுவிடலாம் என்று நமது தந்தைமார்கள் நம்பிவந்தனர். அவர்களுடைய வாதம் போதுமான ஆன்ற
அறிவுபடைத்ததாக அமைந்திருக்கவில்லை. கேடுகள் அனைத்திற்கும் மூல்காரணம்
சாத்தான்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை வெள்ளமும், வறுமையும், பிளேக்கும்
புயலும் நில அதிர்ச்சியும் போர் முயற்சியும், சிலசமயங்களில், நம்பிக்கை யிழந்தவர்களுக்குத்
தண்டனை கொடுக்க, ஆண்டவனால் அனுப்பப்பட்டவை என்று அவர்கள் எண்ணினர். அந்தக் கொடுமைகளைத்
தடுக்கும்படி, முழங்காற்படியிட்டுக்கொண்டு வெளுத்த உதடுகளால் வழிபாட்டுரை கூறிக் கடவுளை
வேண்டிக்கொண்டனர். அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டனர்; தாங்கள் செய்த பாவங்களை
ஒப்புக்கொண்டனர்; குளுரைகளாலும் வேண்டுதலைகளாலும் வானவெளியை நிரப்பினர்; புரோகிதர்களுடைய
உதவியைக்கொண்டும், வழிபாட்டுரைகளின் உதவியைக் கொண்டும் பிளேக்கை அகற்ற முயன்றனர், அவர்கள்
புனித நினைவுக்குறிகளை முத்தமிட்டனர்; கோயில்கள் தோறும் விழுந்தெழுந்தனர்; அன்னை மேரி
அருமை மகான்கள் ஆகியோரின் ஆதரவை வேண்டினர்; ஆனால் வழிபாட்டுரைகளெல்லாம் இதயமற்ற காற்று
வெளியில் இறந்தொழிந்தன; பிளேக் அதன் வலிமை முழுவதும் காட்டி உலகை அழிக்கவே செய்தது!
நமது அறிவிற் குறைவுடைய தந்தைமார்கள், அறிவியலைப்பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. எல்லா
நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படைக் காரணங்களாக, அவர்கள், நல்ல ஆவிகளையோ அல்லது கெட்ட ஆவிகளையோ,
தேவதைகளையோ அல்லது பிசாசுகளையோ, கடவுள்களையோ அல்லது பூதங்களையோ வைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும்
இயற்கைக் காரணம் ஒன்றைக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை, எல்லாம் ஆவிகளின்
வேலைப்பாடுகளே என்று கருதினர். எல்லாம் இயற்கைக்குமீறிய கடவுளால்
நடந்தேறுகின்றன என்று எண்ணினர். அழிவை உண்டாக்குவது, தண்டனையை அளிப்பது, தவறச்செய்வது,
மக்களாகிய குழந்தைகளைப் பாழ்படுத்துவது போன்ற செயல்களெல்லாம் கெட்ட ஆவிகளால் நிகழ்த்தப்பட்டன
என்று நம்பினர். இந்த உலகம் ஒரு போர்க்களமாகத் திகழ்ந்தது! இங்கே மோட்ச உலகத்தைச் சேர்ந்தவர்களும்,
நரக உலகத்தைச் சேர்ந்தவர்களும் போர் தொடுத்துக் கொண்டனர்!
மூடநம்பிக்கை 5
தேவதைகள் பறந்துவிட்டன!
இப்பொழுது, எவன் கொழுந்துவிட்டெரியும்
பகுத்தறிவுச் சுடரைத் தன்மூளையில் ஏற்றிவைத்திருக்கிறானோ, எவன் ஆராய்ச்சி செய்துபார்க்கும்
அறிவைப் படைத்திருக்கிறானோ, எவன் சிரித்துப் பார்க்கும் தன்மையைக் கொண்டிருக்கிறானோ,
எவன் சான்றுகளைச் சரி தூக்கிப் பார்க்கும் திறம் உடையவனாக இருக்கிறானோ, அவ அடையாளங்களிலும்.
அதிர்ஷ்ட – துர் அதிர்ஷ்ட நாட்களிலும், அதிர்ஷ்ட – துர் அதிர்ஷ்ட எண்களிலும் நம்பிக்கை
கொள்ளவே மாட்டான். வெள்ளிக்கிழமைகளைப் போன்றவையே தாம் வியாழக்கிழமைகளும் என்பதையும்
பன்னிரண்டைக் காட்டிலும் பதின்மூன்று எந்த விதத்திலும் கேடுபயக்கக்கூடியது அல்ல என்பதையும்
அவன் அறிவான். சிவப்புக் கற்கள், வைரங்கள் சாதாரண கண்ணாடி எந்த அளவுக்கு மனிதனைப் பாதிக்குமோ
அதே அளவுதான் வெள்ளைக் கற்களும் பாதிக்கும் என்பதை அவன் அறிவான், ஒரு பெண்ணின் திருமண
வாய்ப்புகள் ஒரு மலரிலுள்ள இதழ்களைப் பொறுத்தோ அல்லது ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளைப்
பொறுத்தோ, கூடவோ குறையவோ ஆகிவிடா என்பதையும் அவன் அறிவான். ஒரு படக் கொட்டகைக்குள்
முதன்முதல் நுழைகிறவன் ஒற்றைக் கண்ணணாக இருந்தாலும் ஓடிந்த கையனாக
இருந்தாலும், வணங்கிய முதுகினனாக இருந்தாலும் வளைந்த காலனாக இருந்தாலும் அல்லது ‘அப்பலோ'
போல முழு அழகுவாய்ந்தவனாக இருந்தாலும் அவன் கவலைப்படுவதில்லை. குடும்பத்திற்கு எவ்வித
குறைபாடும் தோன்றாத நிலையில்கூட, வேற்றுப் பூனைக்கு இடமளிக்க மறப்பதால், ஒன்றும் நேராது
என்பதை அவன் அறிவான். ஒரு முக்கியமான மனிதன் இறந்து படப்போகிறான் என்பதற்காக, முழு
நிலவு நாளில் ஆந்தையொன்று அலறிக்காட்டாது என்பதை அவன் அறிவான் மக்கட் கூட்டம் எல்லாம்
இறந்து பட்டாலும்கூட, வால்நட்சத்திரங்களும், கிரகணங்களும் வரத்தான் செய்யும் என்பதை
அவன் வானவில்லைக் கண்டோ அல்லது வடக்கே இருளைக் கிழித்துக்கொண்டு வெளிச்சம் வெளிப்படுவதைக்கண்டோ
அவன் அஞ்சுவனங்களும் வரத்தான் செய்யும் தில்லை. மனிதசமுதாயத்தைச் சிறிதளவும் பொருட்படுத்தாமலேயே
இவையெல்லாம் நிகழ்கின்றன என்பதை அவன் அறிவான். வெள்ளங்கள் அழிவையுண்டாக்கும். புயற்காற்றுகள்
பாழ்படுத்தும், நில அதிர்ச்சிகள் விழுங்கும் என்பதையெல்லாம் அவன் உறுதியாக உணர்கிறான்.
நட்சத்திரங்கள் ஒளிவீசும், உலகைச்சுற்றி இரவும் பகலும் ஒன்றையொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்,
பூக்கள் தம் நறுமணத்தைக் காற்றில் கமழச் செய்யும். காலை மாலை வேலைகளில், மேகங்கள் நிறைந்திருக்கும்
பொழுது, ஒளி ஏழுநிற வானவில்லை, மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமலே வானத்தில் தீட்டும்
என்பதை யெல்லாம் அவன் உறுதியாக அறிகிறான்.
நல்ல சிந்தனையும், தெளிவான
உணர்வும் உடைய மனிதன் சரத்தான் வாழ்கிறான் என்பதை நம்பமாட்டான். அவன் உறுதியாக உணர்கிறான்,
பேய்களும், பூதங்களும், பிசாசுகளும், கெட்ட ஆவிகளும், அறியாமையும் அச்சமும் கொண்டவர்களின்
கற்பனையுள்ளத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை மிகக் கீழ்த்தரமான கட்டுக்கதைகளெல்லாம்
எப்படி இயற்றப்பட்டன என்பதை அவன் அறிகிறான். அந்தக் கட்டுக்கதைகள்
எல்லா மதங்களிலும் எந்த அளவுக்கு வேலை செய்கின்றன என்பதையும் அவன் அறிகிறான். பூதங்களிடத்தும்,
கெட்ட ஆவிகளிடத்தும் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை பன்னெடும் நூற்றாண்டுகளாக, எல்லா
நாடுகளிலும் இருந்து வருகிறது என்பதை அவன் அறிகிறான். சாதாரணக் குடியானவன் போலவே, மதக்
குருக்களும் மிக அழுத்தந் திருத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும் அவன் அறிகிறான்.
அந்த நாட்களில் மிகப் படித்தறிந்தவர்களும், மிக அறியாமையில் மூழ்கியவர்களும் ஒரே மாதிரியான
ஏமாற்றுக்காரர்களாகத் திகழ்ந்தனர். அரசர்களும் அவரது அவையினரும், பெண்களும், பேடிகளும்
போர்வீரர்களும், கலைவாணர்கள்களும், அடிமைகளும், குற்றவாளிகளும் கடவுளை எந்த அளவு அழுத்தமாக
நம்பினார்களோ அதே அளவு அழுத்தமான நம்பிக்கையைத்தான் சாத்தானைப் பொறுத்தும்கொண்டிருந்தனர்.
இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக
எந்த ஓரு சான்றும் இருக்கவில்லை; இதுவரையிலும் இருந்ததில்லை. இந்த நம்பிக்கை எந்த உண்மை
மீதும் நிலை நின்றதில்லை இந்த நம்பிக்கையானது, தவறுகளாலும்,உயர்வு நவிற்சிகளா பொய்களாலும்
ஆதரிக்கப்பட்டு வந்தது. அந்தத் தவறுகள் இயல்பாகவே எழுந்தனவாக இருந்தன; உயர்வு நவிற்சிகள்
மக்களின் உணர்வற்ற நிலையிலேயே வெளி வந்தன. பொய்களெல்லாம் கூடப் பொதுவாக நாணயமாகச் சொல்லப்பட்டன.
இந்தத் தவறுகள், இந்த உயர்வு நவிற்சிகள் இந்தப் பொய்கள் ஆகிய இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக
இருந்தது, பேரதிசயத்தின்பால் கொண்ட அன்பேயாகும். அதிசயம், பேராசை
கொண்ட காதுகளால் கேட்கப்பட்டது; அகன்ற கண்களால் பார்க்கப்பட்டது; அறியாமை திறந்த வாயால்
பருகப்பட்டது!
அறிவு வளர்ந்த ஒருவன்.
இந்த நம்பிக்கை வளர்ந்த வரலாற்றை நன்கு அறிவான். பல நூற்றாண்டு காலமாக நம்பிக்கை பற்றிய
உண்மை, 'புனித பைபிளால்' நிலை நாட்டப்பட்டு வந்தது என்பதையும் அவன் அறிவான். பழைய வேதம்,
சாத்தானைப்பற்றியும் தீய ஆவிகளைப்பற்றியும் எழுதப்பட்ட கதைகளால் நிரம்பியது என்பதையும்,
அதுபோலவே புதிய வேதமும் நிரம்பியது ஆகும் என்பதையும் அவன் அறிவான். ஏசு கிருத்துவே
சாத்தானையும், தீய ஆவிகளையும் நம்பியிருந்தவர் என்பதையும், ஆடவர் பெண்டிர் ஆகியோரைப்
பிடித்திருந்த அந்தத் தீய ஆவிகளை,விரட்டுவதை, அவர் முக்கிய பணியாகக் கொண்டிருந்தார்
என்பதையும் அவன் அறிவான். புதிய வேதத்தில் சொல்லப்பட்டபடி, ஏசு கிருத்துவே தீய ஆவியால்
ஆசைகாட்டி மயக்கப்பட்டார் என்பதையும், சாத்தானால், அவனது கோயிலின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டார்
என்பதையும் அவன் அறிவான். புதிய வேதமானது உள்ளபடியே ஆண்டவனால் மொழியப்பட்டது எனில்,
பூதங்கள் பிசாசுகள் இருக்கின்றன என்பதையும், அவைகள் மக்களை வசப்படுத்தியிருக்கின்றன
என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் !
இந்தத் தீய ஆவிகள் இல்லை
என்று மறுப்பது - இந்தச் சாத்தான இல்லை என்று மறுப்பது, புதிய வேதத்தின் உண்மையையே
மறுப்பதாகும். இருளில் பிசாசுகள் இல்லை என்று மறுப்பது, ஏசு கிருத்துவின் சொற்களையே
மறுத்துக் கூறுவதாகும். இந்தப் பூதங்கள் இல்லை என்றால், இவைகள்
நோயை உண்டாக்கவில்லை என்றால், இவைகள் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களைத் தவறான வழியில்
இழுத்துச் செல்லவில்லை என்றால், பிறகு, கிருத்து, அறியாமை நிரம்பியவராகவும், மூட நம்பிக்கை
மனிதராகவும்,மனங்குழம்பியவராகவும், ஏமாற்றுக்காரராகவும்தான் இருக்கவேண்டும்; அல்லது,
அவர் சொல்லியதாகவும் செய்ததாகவும் சொல்லப்படுகிற புதிய வேதம் என்பது, உண்மையான பதிவாக
இருக்கமுடியாது. நாம் பேய் – பூதம் – பிசாசு பற்றிய நம்பிக்கையைக் கைவிடுகிறோம் என்றால்,
பழைய - புதிய வேதங்களின் கடவுள் கருத்துக்களையும் நாம் கைவிடத்தான் வேண்டும் ! நாம்
கிருத்துவின் கடவுள் தன்மையைக் கைவிடத்தான் வேண்டும்! தீய ஆவிகள் இருப்பதை மறுப்பது
என்பது கிருத்தவ மதத்தின் அடிப்படையையே அடியோடு அழிப்பதாகும். அப்படிக் கிப்படிப் பேசுவதற்கு
ஒன்றுமில்லை. இரண்டிற்கும் ஒத்தவொரு சமாதானம் தேடுவது ஆகாத ஒன்றாகும். புதிய வேதத்தில்
சொல்லப்பட்ட பிசாசுகளை விரட்டுவதுபற்றிய கருத்துக்களெல்லாம் தவறு என்று ஆயினால், பின்னர்
அந்த புனித நூலின் எந்தப்பகுதிதான் உண்மையாக இருக்கமுடியும்?
அதன் உண்மைவழிப் பார்க்கப்போனால்,
ஏடன் தோட்டத்தில் சாத்தானுக்கு ஏற்பட்ட வெற்றியின் விளைவே கிருத்துவைத் தோற்றம் செய்யும்படியான
அவசியத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. கிருத்து உயிர்த்தியாகம் செய்வதற்கு வழி அமைத்தது;
கிருத்துவைச் சிலுவையில் அறைந்தது; தந்தை–மகன்–புனிதப்பிசாசு ஆகிய மூன்றும் சேர்ந்து
முத்தன்மையை நமக்குக் கொடுத்தது!
சாத்தான் வாழவில்லை என்றால்
கிருத்துவமதக் கருத்துக்கள் அத்துணையும் சிதறுண்டு போகும்; "கிருத்தவம" என்று சொல்லப்படுகிற பெருங்கட்டிடம் முழுவதும் எரிந்து போய்விடும்?
பாதிரிமார்களாலும் குருமார்களாலும், புரோகிதர்களாலும் மதவாதிகளாலும், தவறுகளாலும் பொய்மைகளாலும்,
ஜாலவித்தைகளாலும், அதிசயங்களாலும், குருதியினாலும், நெருப்பினாலும், காட்டுமிராண்டிகளிடமிருந்து
கற்றுக்கொண்ட பொய்களாலும் பொய்மைக் கதைகளாலும் கட்டப்பட்ட “கிருத்தவம்" என்ற அந்தப்
பெருங்கட்டிடம் உருத்தெரியாமல் அழிந்து போய்விடும்!
பூதங்களிடத்தும் தீய
ஆவிகளிடத்தும் கொண்டிருந்த நம்பிக்கையை நாம் கைவிடுவோமேயானால், பேயாட்டுபவள் என்று
ஒருத்தி வாழ்ந்திருக்கமுடியாது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியவர்களாவோம் இப்பொழுது
அறிவுள்ள எந்த மனிதனும், பேய் - பூதம்- பிசாசு ஆகியவற்றை அடக்கியாளும் தன்மையில் நம்பிக்கை
கொள்வதில்லை. அது ஒரு ஏமாற்று வித்தையாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
நடைபெற முடியாத ஒரு குற்றத்தைச் செய்தார்கள் என்ற காரணத்துக்காக,ஆயிரமாயிரம் ஆடவரும்,
பெண்டிரும், குழந்தைகளும். சித்ரவதை செய்யப்பட்டும், கொளுத்தி எரிக்கப் பட்டும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டும்
போயினர் என்பதை நாம் இப்பொழுது அறிகிறோம். மத நம்பிக்கையால் நமது உள்ளங்கள் பாழ்படாமலிருந்திருக்குமேயானால்.
பேயாட்டுபவர்கள் வாழ்ந்ததைப்பற்றிக் கற்பிக்கிற புத்தகங்களெல்லாம் அறியாமையும் மூடநம்பிக்கையும்
கொண்டவர்களாலேயே எழுதப்பட்டன என்பதை நாம் இப்பொழுது நன்கு அறியலாகும். பேயாட்டுபவர்கள்
வாழ்ந்ததைப் பழைய வேதம் உறுதிப்படுத்துகிறது என்பதையும் நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம்.
அந்தப் 'புனித வேத'த்தின்படி, ஜெகோவா பேயாட்டுவதில் நம்பிக்கை
கொண்டிருந்தார் என்பதும், அவரைப் பின் பற்றினவர்களுக்கு அவர், 'பேயாட்டுபவன் ஒருத்தியை
வாழவிட்டுவிட்டு நீங்கள் துன்பம் அடையாதீர்கள்" என்று போதனை புரிந்தார் என்பதும்
அறியப்படுவனவாகும்.
இந்த ஒரு கட்டளை, இந்தச்
சாதாரணமான ஒருவரி போதும், ஜெஹோவா கடவுள் அல்ல என்பது மட்டுமல்லாமல், அவர் பரிதாபத்திற்குரிய
– அறியாமை நிரம்பிய – மூட நம்பிக்கை மனிதர் என்பதை நிரூபிக்க பழைய வேதம் சாதாரண மனிதர்களால்
அதாவது காட்டுமிராண்டிகளால் எழுதப்பட்டதாகும் என்பதை, ஐயப்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லாதவகையில்
இந்த வரி ஒன்றே நிரூபிக்கும்.
பேயாட்டும் தன்மையிலுள்ள
நம்பிக்கையைக் கைவிடுவது என்பது, பைபிளையே கைவிடுவதாகும் என்று, ஜான் வெஸ்லி கூறியது,
முற்றிலும் உண்மையாகும்.
பூதத்தைக் கைவிடுவதென்றால்,
பின்னர் வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அஹாம் என்பானை ஏமாற்றுவதற்காக
ஜெஹோவாவால் அனுப்பப்பட்ட பொய்யான ஆவிகளுக்குப் பின்னர் எப்படிப்பட்ட சமாதானத்தைத் தேடுவது?
பேயாட்டுவது ஒரு மூட
நம்பிக்கை என்று என்று ஒப்புக் கொண்ட போதனையாளர்கள், எண்டார் என்ற பேயாட்டியைப் பற்றிய
கதையினைப் படிப்பார்களா? அதளைப் பயபக்தியோடும், அடக்கத்தோடும் படிக்க அவர்களால் இயலுமா?
மத உணர்வோடுதான் அதனைப் படிக்க முடியுமா? அல்லது அதனை நம்புகிறோம் என்று தான் சொல்ல
அவர்களுக்கு உறுதி பிறக்குமா?
தேவதைகள் காற்றில் உலாவுகின்றன;
அவைகள் ஏதும் அறியாதவர்களைப் பாதுகாக்கின்றன; அவைகள் நல்லவர்களுக்கு
ஆதரவு தருகின்றன; அவைகள் தொட்டில்களைச் சூழ்ந்து நினறு குழந்தைகளுக்கு உடல்நலத்தையும்,
மகிழ்ச்சியையும் அளிக்கின்றன; அவைகள் இருட்டறைகளில், தங்கள் ஒளியின் மூலம் வெளிச்சத்தை
உண்டாக்குகின்றன; சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கு அவைகள் நம்பிக்கை அளிக்கின்றன; அவைகள்
வீழ்ச்சியுற்றவர்கள் தவறு செய்தவர்கள்–தள்ளப்பட்டவர்கள்–ஆதரவற்றவர்கள் ஆகியோரைத் தொடர்ந்து
போய், அவர்களுக்கு நன்மையும், அன்பும், மகிழ்ச்சியும் தருகின்றன. கெட்ட ஆவிகள் இல்லை
என்பதற்கு எவ்வளவு காரணங்கள் உண்டோ, அவ்வளவு காரணங்கள் உண்டு. நல்ல ஆவிகள் இல்லை என்பதற்கும்
என்பதை இப்பொழுது நாம் அறிவோம். பேய்களும் பூதங்களும் இடைக்காலங்களில் உலாவின என்பது
எவ்வளவு பொய்யோ, அதே அளவு பொய்யான செய்திதான் ஆப்ரஹாமையும், சாம்சானுடைய தாயாரையும்
தேவதைகள் கண்டு பேசின என்பதும், பலாம் என்ற தேவன ஏறிய கழுதையை நிறுத்திய தேவதை; நெருப்புக்
குண்டத்தில் நடந்த தேவதை: ஆசிரியர்களைக் கொன்ற தேவதை; ஜோஸப்பின் கனவில் தோன்றி ஐயங்களைப்
போக்கிய தேவதை என்று சொல்லப்படும் தேவதைகளெல்லாம், ஏமாற்றுக்காரர்களின் கற்பனைகளில்
உதித்தவைகளாகும். மிகப் பேரதிசயங்கொண்டவைகளாக மதக் கருத்துக்களைச் சித்தரிக்கவேண்டும்
என்று ஆசை கொண்டவர்களால், இட்டுக்கட்டப்பட்டவைகளே அவைகள். ஏமாற்றுக்காரர்கள், அந்தக்
கதைகளை, வயது முதிர்ந்த தளர்ந்த வரிலிருந்து, துள்ளி விளையாடும் குழந்தைப் பருவத்தினர்
வரையிலுமுள்ள எல்லோரிடமும் பரப்பினர்; எல்லாக் காலங்களிலும் பரப்பினர். அந்தக் கதைகள்,
அறியாதவர்களிடமிருந்து அறியாதவர்களிடம் தாவித் தொடர்ந்து வளர்ந்து வந்தன. கத்தோலிக்க
நாடுகளைத்தவிர, ஏனைய நாடுகளில் சென்ற பல நூற்றாண்டுகளாக, 'இறக்கை கட்டிய தேவதை' எதுவும்
பறந்துவந்து மக்களைப் பார்த்ததில்லை. உண்மைகளை அறிந்துகொள்ள முடியாத குருட்டு நம்பிக்கைகொண்ட ஒரு சில மூடர்களே. இத்தகைய 'அதிசயப் பிராணிகளை'ப்
பாசாங்காகப் பார்ப்பார்கள். சான்றுகளைக்கொண்டு ஒரு முடிவுக்கு வராமல், தான் தோன்றித்தனமாக
எதையும் முடிவு செய்துகொள்ளும் ஒருசிலர்தான், அவைகள் இருப்பதாக நம்புவர் ஆஞ்செலோ என்ற
சிறந்த ஓவிய நிபுணன். மாதா கோயிலை ஓவியங்களால் அழகுபடுத்தும்போது, செருப்பு போட்டுக்
கொண்ட தேவதைகளை வரைந்தானாம். அந்தப்படத்தைப் பார்த்த பாதிரியார் ஒருவர், "செருப்புப்
போட்டுக்கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்?" என்று ஓவியனைப் பார்த்துக்
கேட்டாராம். அதற்கு ஆஞ்செலோ தேவதைகளை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்?" என்று
மறுமொழியாகக் கேட்டானாம்.
தேவதைகள் வாழ்ந்தன என்பது
ஒருபொழுதும் நிலை நாட்டப்படவில்லை. ஆனால் உயர்ந்ததர தேவதைகளையும் தாழ்ந்ததர தேவதைகளையும்
கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டு வருகிறார்கள் என்பதை நாமறிவோம். கேப்ரியல் என்ற
தேவதை, மோசஸின் உடலுக்காகப் பூதத்தோடு போரிட்டதையும், டேனியலைக் காப்பாற்றுவதற்காகச்
சிங்கங்களின் வாய்களைத் தேவதைகள் அடைந்ததையும், ஏசுகிருஸ்துவிற்குத் தேவதைகள் போதனை
புரிந்ததையும், ஏசு உலகத்திற்கு வரும்போது அவருக்குத் துணையாக எண்ணற்ற தேவதைகள் வந்ததையும்
கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மத நூல்களில்
உரைக்கப்பட்ட சான்றுகளையும் - உண்மைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு, குருட்டுத்தனமான
போக்கில் பகுத்தறிவற்ற பக்தியன்போடு இவைகளையெல்லாம் அம்மக்கள் நம்பிவருகிறார்கள் என்பதையும்
நாம் அறிவோம்!
ஆனால் இனிமேல் தேவதைகள்
எதுவும் வராது! புண்பட்ட நெஞ்சத்திற்குத் தடவ அவைகள் களிம்பு எதனையும் இனி எடுத்துக் கொண்டு வாரா! நீண்ட நாட்களுக்கு முன்பே அவைகள் தமது
இறக்கைகளைச் சுருட்டிக் கொண்டு, உலகிலிருந்தும், காற்றிலிருந்தும் மறைந்து விட்டன!
இந்த இறக்கை கொண்ட தேவதைகள் இனி மேல் அறியா மக்களைக் காப்பாற்ற முன்வரா; துன்புறுகின்றவர்களை
மகிழ்ச்சிப் படுத்தா; ஆதரவற்றோர்க்கு ஆதரவு நல்கும் சொற்களைக் கூறா! அவையெல்லாம் கனவுகளாகிவிட்டன;
மறைந்த தோற்றங்களாக மாறிவிட்டன!
மூடநம்பிக்கை 6
அந்தக் காலமும் இந்தக் காலமும்
மத நம்பிக்கை மிகுந்திருந்த
மிகப் பழங்காலத்தில் இந்த உலகமானது தட்டை வடிவினது என்றும், ஏறத்தாழ ஒரு தட்டுப்போன்றது
என்றும், அதற்குச் சற்று மேல் ஜெஹாவாவின் வீடு இருந்தது என்றும். அதற்குச் சற்று கீழே
சாத்தான் வாழ்ந்தான் என்றும் நம்பப்பட்டு வந்தன! கடவுளும் அவரைச் சேர்ந்த தேவதைகளும்
மூன்றாவது தட்டில் வாழ்ந்தார்கள் என்றும், சாத்தானும் பிசாசுகளும் அடித்தட்டில் வாழ்ந்தார்கள்
என்றும், மக்கட் சமுதாயம் இரண்டாவது தட்டில் வாழ்ந்தது என்றும் கருதப்பட்டு வந்தன!
அப்பொழுது, அவர்கள்,
எங்கே மேல் உலகம் இருந்தது என்பதை அறிந்திருந்தார்கள்! அவர்கள் மேலுலகத்திலிருந்து
எழுப்பப்பட்ட வீணையின் ஒலியையும், பாட்டின் இசையையும் கேட்டறிந்தார்கள்! அவர்கள் எங்கே
நரகம் இருந்தது என்பதை அறிந்தனர்; அங்கே எழுப்பப்படும் வேதனைக் குரல்களைக் கேட்டனர்;
நெருப்பிலிருந்து எழும்பிய கந்தகப்புகைகளை நுகர்ந்தனர்! அவர்கள் எரி மலைகளை நரகத்திலிருந்து
வெளிப்படும் புகைபோக்கி என்று கருதினர்! அவர்கள் வானுலகத்தோடும், பூவுலகத் தோடும், நரக உலகத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்! அவர்கள்,
தங்கத்தெருக்களையும், முத்து வாயில்களையும் கொண்டிருந்த புதிய ஜெருஸலம் நகரோடு நெருங்கிய
தொடர்பைக் கொண்டிருந்தனர்! அந்தக்காலங்களில் ஈனக்கின் மாற்றம் அறிவுக்கு ஒத்ததாகவே
கொள்ளப்பட்டது; பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, கடவுளின் பிள்ளைகள் பூவுலகத்திற்கு
வந்து மனிதர்களின் பெண்களோடு காதல் புரிந்தார்கள் என்பதைப்பற்றியாரும் ஐயப்பாடு கொண்டதில்லை!
வானுலகை எட்டிப்பிடிக்கப் பேபல் கோபுரம் கட்டத் தொடங்கியபோது, கடவுள் வந்து அவர்களுடைய
மொழிகள், அவர்களில் ஒருவர்க்கொருவர் புரியாத வண்ணம் செய்த காரணத்தினால்தான் அதனைக்
கட்டி முடிக்க முடியாமற்போயிற்றே யொழிய, இல்லையானால் அதனைக் கட்டத்தொடங்கியவர்கள்,
கட்டியே முடித்திருப்பார்கள் என்றே, மதவாதிகள் நம்பினர்!
ஆண்டவனின் அருள் பாலிக்கப்பட்டதாகக்
கருதப்படுகிற அதே நாட்களில், மதபோதகர்கள் மோட்ச உலகத்தைப்பற்றியும், நரக உலகத்தைப்
பற்றியும் எல்லாம் அறிந்திருந்தார்கள்! கடவுள் ஆசையினாலும் அச்சத்தாலும் வாக்குறுதியினாலும்
அச்சுறுத்தலாலும், வரமளிப்பதாலும், தண்டனை கொடுப்பதாலும் இவ்வுலகை ஆண்டு வந்தார் என்று,
அவர்கள் அறிந்திருந்தனர்! கடவுள் அளிக்கும் வரம் எல்லையற்ற காலத்தது; அதுபோலவே தான்
அவர் கொடுக்கும் தண்டனையும்! சரியையும் தவற்றையும் கண்டறிந்துகொள்ளும் அளவுக்கு, மனிதனுடைய
மூளையை வளர்க்க வேண்டும் என்பது ஆண்டவனுடைய திட்டமாக இருந்ததில்லை! அவர் அறியாமையைக்
கற்பித்தார்; அதுவும் கீழ்ப்படிதலைத்தவிர வேறெதையும் கற்பித்ததில்லை கீழ்ப்படிதலுக்கு
அவர் கால எல்லையற்ற பேரின்பத்தை அளித்தார்! அவர் வணங்கிக் கொடுப்பவர்களையும், முழங்காற்படியிடுவர்களையும்,
குப்புறக் கவிழ்பவர்களையும் அவர் விரும்பினார்! அவர் ஐயங்கொள்வோர்களை ஆராய்ச்சிபுரிவோரை,சிந்தனையாளர்களை,
தத்துவாசிரியர்களை வெறுத்தார்! அவர்களுக்காக, அவர் கால எல்லையற்ற
பெருஞ் சிறையை உண்டாக்கினார்; அங்கு அவர் தம் வெறுப்பின் பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய
அளவு உணவைப் பெற்று வந்தார்! அவர் ஏமாற்றுக்காரர்களையும், சான்று ஏதும் எதிர்பார்க்காமல்
நம்புபவர்களையும் மிகவும் விரும்பினார்; அவர்களுக்காக அழியாப் பேரொளி வீசும் இடத்தை
இல்லமாக அவர் ஆக்கித்தந்தார் ! கேள்வி ஏதும் கேட்காதவர்களின் கூட்டத்திடையே அவர் மிகவும்
மகிழ்ச்சியுற்றிருந்தார்!
ஆனால் இந்த மோட்ச உலகம்
எங்கே இருக்கிறது; இந்த நரக உலகம் எங்கே இருக்கிறது? நாம் இப்பொழுது அறிவோம். இந்த
மோட்ச உலகம். மேகமண்டலத்துக்கு மேலே இல்லை என்பதை. இந்த நரக உலகம் பூவுலகத்திற்கு அடியில்
இல்லை என்பதை; தொலைநோக்கு ஆடி (தூர திருஷ்டிக்கண்ணாடி) மோட்ச உலகத்தை இல்லாமற் போக்கிவிட்டது;
சுழலும் உலகம் பழைய நரகத்தின் தீச் சுழல்களை அவித்துவிட்டது, மதம் கூறிய நாடுகளும்,
மதம் கற்பனை செய்த உலகங்களும் மறைந்தொழிந்து விட்டன. மோட்ச உலகம் எங்கே இருக்கிறது
என்பதை எவரும் அறியமாட்டார்கள்; அறிந்திருப்பதாக யாரும் பாசாங்கு செய்யமுடியாது. நரகம்
இருக்கும் இடத்தை யாரும் அறியமாட்டார்கள்; அதனை அறிந்திருப்பதாக யாரும் பாசாங்கு செய்யமுடியாது
இப்பொழுது பல மதவாதிகள், மோட்சம் என்பதும், நரகம் என்பதும் இடங்கள் அல்ல என்றும், அவை
மன நிலைகளையே, நிலைமைகளையே குறிப்பனவாகும் என்றும் கூறுகின்றனர். கடவுள்களிடத்தும்,
பூதங்களிடத்தும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவியிருக்கிறது
மனிதன் நல்லதுக்குப் பின்னால் கடவுளை நிறுத்துகிறான்; தீதுக்குப் பின்னால் பூதத்தை
நிறுத்துகிறான்; நலத்துக்குப் பின்னால் ஞாயிற்றின் ஒளியை வைக்கிறான்; நல்ல அறுவடைக்குப் பின்னால் நல்ல கடவுளை வைக்கிறான்; நோய்க்குப் பின்னால்
தீய வாய்ப்பைப் பார்க்கிறான்; இறப்புக்குப் பின்னால் கொடிய பேயைப் பார்க்கிறான்.
கடவுள்களும் பூதங்களும்
வாழ்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் நல்ல சான்று இருக்கிறதா? கடவுள் இருக்கிறார். என்பதற்கும்,
பூதம் உண்டு என்பதற்கும் ஒரேவிதமான காரணந்தான் கூறப்படுகின்றது. இந்த இரண்டு வணக்க
பொருள்களும் கற்பித்துக் கொள்ளப் பட்டவைகளே; ஒவ்வொன்றும் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுவதேயாகும்.
அவைகள் கண்ணால் பார்க்கப்பட்டதில்லை; அவைகள் ஐம்புல உணர்ச்சிகளின் எல்லைக்குள் தட்டுப்பட்டதில்லை.
வயதான கிழவி, பூதம் இருந்து தீரவேண்டும், இல்லையானால் அதனைப்போலவே எப்படிப் படம் வரைந்து
காட்டமுடியும் என்று கேட்கிறாள்; அவள் மதக் கருத்துக்களில் பயிற்சி பெற்றவள் போலவும்,
கடவுளைப் பற்றிய செய்திகளில் தேர்ச்சி அடைந்தவள் போலவும் கேட்கிறாள்!
பூதம் இருக்கிறது என்பதில்
எந்த அறிவுள்ள மனிதனும் இப்பொழுது நம்பிக்கை வைப்பதில்லை; கொடுந்தோற்றமுடைய பேய்க்காக
அவன் அஞ்சுவதுமில்லை; ஆராய்ந்து பார்க்கும் திறம்படைத்த பெரும்பாலான மக்கள், வழிபடும்,
சொந்தக் கடவுளாகிய, 'படைக்கும் கடவுளை'க் கைவிட்டு விட்டனர். அவர்கள். இப்பொழுது பெரும்பாலும்
'காண முடியாதது.' 'எல்லையற்ற பேராற்றலாவது' என்றெல்லாம் பேசத்தலைப்பட்டு விட்டனர்.
ஆனால், அவர்கள் 'ஜெஹோவா'வை, 'ஜூபிடருடன் சேர்த்துவைத்து எண்ண முற்பட்டு விட்டனர். அவர்கள்,
அவைகளைப் பழங் காலத்தில் கொண்டாடிய உடைந்த பொம்மைகள் என்றே கருதுகின்றனர்.
சான்று வேண்டி நிற்கிற-உண்மையை
அறியவிரும்புகிற ஆண்களும், பெண்களும் தலையெழுத்துக்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை.
அதிசயங்கள் என்று சொல்லப்படுபவைகளைப் பற்றிக் கவலையுறுவதில்லை. அதிர்ஷ்ட துர் அதிர்ஷ்ட நகைகள், நாட்கள், எண்கள் ஆகியவைபற்றிக் கவலைப்படுவதில்லை;
மந்திரங்களுக்காகவோ அல்லது தாயத்துக்களுக்காகவோ கவலைகொள்வதில்லை; வால் நட்சத்திரங்களுக்காகவோ
அல்லது கிரகணங்களுக்காகவோ கவலைப்படுவதில்லை, நல்ல ஆவிகளிடத்தோ அல்லது தீய ஆவிகளிடத்தோ
நம்பிக்கை கொள்வதில்லை; கடவுள்களிடத்தோ அல்லது பூதங்களிடத்தோ நம்பிக்கை வைப்பதில்லை.
பொதுவான அல்லது தனியான நன்மை பயக்கும் என்று அவர்கள் எதன்மீதும் குருட்டு நம்பிக்கைவைப்
பதில்லை, நல்லதை மீட்கிறது, காப்பாற்றுகிறது, ஆதரிக்கிறது என்பதற்காகவோ, அல்லது தீயதைக்
கொடியதைத் தண்டிக்கிறது என்பதற்காகவோ எந்த ஆற்றலின் மீதும் அவர்கள் குருட்டு நம்பிக்கை
கொள்வதில்லை. மனிதசமுதாய வரலாற்றுக் காலம் முழுவதிலும், வழிபாட்டுரைக்குப் பதிலுரை
தரப்பட்டது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை இடப்பட்ட பலிகளெல்லாம் வீணாகிவிட்டன
என்றும், எரிக்கப்பட்ட நறுமணப்புகைகளெல்லாம் பாழாகிப் போயின என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.
உலகமானது நச்சுப் பூச்சிகளுக்காக படைக்கப்பட்டு அவைகளுக்காகத் தயாராக்கப்பட்டது என்பதை,
அவர்கள் எந்த அளவுக்கு நம்புவதில்லையோ, அதே அளவுக்கு அது மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டு
தயாரிக்கப்பட்டது என்பதையும் நம்புவதில்லை. எஸ்கிமோயர்களுக்குக் கொழுப்பை உணவாக அளிப்தற்காகவே,
வேல்ஸ் என்ற ஒருவகை மீனினம் உண்டாக்கப்பட்டது என்பதையோ அல்லது விட்டில் பூச்சிகளைக்
கவர்ந்து, அவைகளை அழிக்கவே தீச் சுழல்கள் உண்டாக்கப்பட்டன என்பதையோ, பொருந்தி வருபவை
என்று அவர்கள் நினைப்பதேயில்லை. எல்லாப் பக்கங்களிலும் சான்றுக்கான விளக்கங்கள் தென்படுகின்றன;
நல்லது நிகழ்வதற்கான காரண விளக்கங்களும் தீயது நிகழ்வதற்காள காரண விளக்கங்களும் தென்படுகின்றன:
எல்லாப் பக்கங்களிலும் நன்மையும், கொடுமையும் இருக்கின்றன; சிறிது உழைப்பிற்குப் பிறகே
நல்லது காக்கப்படுகிறது, சிறிது உழைப்பிற்குப் பிறகே தீயது அழிக்கப்படுகிறது.
ஒவ்வொன்றும் நண்பர்களாலும் பகைவர்களாலும் சூழப்பட்டிருக்கின்றன. அவை அன்பால் காக்கப்படுகின்றன.
வெறுப்பால் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் அறிகுறி எவ்வளவு தெளிவாகத் தெரிகிறதோ அவ்வளவு
தெளிவாக வீழ்ச்சியின் அறிகுறியும் தென்படுகிறது; வெற்றியின் அறிகுறியைப் போலவே தோல்வியின்
அறிகுறியும் புலப்படுகிறது; இன்பத்தின் அறிகுறியைப் போலவே, துன்பத்தின் அறிகுறியும்
விளங்குகிறது. இயற்கை கேடயமும் வாளும் ஏந்திக்கொண்டு ஒருகையால் கட்டி முடிக்கிறது மற்றொரு
கையால் அழித்துத்தள்ளுகிறது. ஒரு கையால் காப்பு அளிக்கிறது. மற்றொரு கையால் கொன்று
குவிக்கிறது; ஆனால் ஆக்கத்திற்காக அழிவு வேலை செய்கிறது, எல்லா வாழ்வும் சாவை நோக்கி
நடக்கின்றன; எல்லாச் சாவும் வாழ்வை நோக்கித் திரும்புகின்றன. எங்கு பார்க்கினும் கழிவும்
சேமிப்பும், அலட்சியமும் அக்கரையும் நிகழ்கின்றன!
மூடநம்பிக்கை 7
இது தெரியாதாம் அது தெரியுமாம்!
நாம், வாழ்வின் ஓட்டத்தையும்
எழுச்சியையும், சாவையும் பார்க்கிறோம்; அந்தப் பெரும் நாடகம் எப்பொழுதும் நடந்துகொண்டே
யிருக்கிறது; அங்கே நடிகர்கள் தங்கள் தங்கள் பகுதிகளை நடித்துவிட்டு மறைந்து விடுகின்றனர்;
அந்தப் பெரும் நாடகத்தில் எல்லோரும் நடித்தேயாக வேண்டும்; அறியாதவரானாலும், அறிந்தவரானாலும்
முட்டாளானாலும்,பைத்தியமானாலும் நடித்தேயாகவேண்டும்; அதுவும் முன்கூட்டி ஒத்திகை யில்லாமல்,
ஏற்று நடிக்கவேண்டிய உறுப்பின் தன்மை தெரியாமல், கதையின் உட்பொருளை உணராமல், நாடகத்தின்
நோக்கத்தை அறியாமல் நடித்தேயாக வேண்டும். திரை மாறுகிறது: சில நடிகர்கள் மறைகிறார்கள்;
வேறு சிலர் வருகிறார்கள்; மீண்டும் திரை மாறுகிறது; எங்கனும் அதிசயம். நாம் விளக்கங்
கொடுக்க முற்படுகிறோம்; ஒரு உண்மைக்குக் கொடுக்கும் விளக்கம் மற்றொரு உண்மைக்கு மாறாகக்
காணப்படுகிறது. ஒரு மறைப்புப் படுதாவை நீக்கினால், வேறோர் படுதா வந்து நிற்கிறது. எல்லாப்
பொருள்களும், சம அளவில் அதிசயிக்கத்தக்கனவாக இருக்கின்றன. எல்லாக் கடல்களையும் சேர்த்துப்
பார்க்கும்போது ஏற்படும் வியப்பைப்போலவே, ஒரு துளித்தண்ணீரும்
அதே அளவு வியப்பைத் தருகிறது; உலகம் முழுவதையும் போலவே, ஒரு தனி மணற்கல்லும் வியப்பைத்
தருகிறது; எல்லா உயிரினங்களைப் போலவே, வண்ண இறக்கைகளைக் கொண்ட ஒரு விட்டில் பூச்சியும்
வியப்பைத் தருகிறது. அகன்ற வானவெளியில் காணப்படும் எல்லா நட்சத்திரங்களைப் போலவே, ஒரு
முட்டையும் வியப்பைத் தருகிறது; இருட்டில் வைக்கப்படும் முட்டையினுள் உள்ள உயிரணுவுக்குச்,
சூடு ஊட்டம் அளிக்கிறது. மூச்சுவிடும் உயிர்ப்பிண்டம் வளர்கிறது, தசைகள்– எலும்புகள்–நரம்புகள்–குருதி–மூளை
எல்லாம் உருவாகின்றன. உணர்ச்சிகள் ஆசைகள்–எண்ணங்கள்–தேவைகள் வளர்கின்றன. இவையெல்லாம்
வியப்புக்குரியவைகளாக இருக்கின்றன.
மண்ணிலே மறைந்து கிடக்கும்
மிகச்சிறிய விதை, ஏப்ரல் மழைகளுக்காகக் கனவுகண்டு, ஜூன் வெயிலுக்காக் காத்திருந்து,
அதனுடைய இரகசியங்களையெல்லாம், உலகிலுள்ள மிகச்சிறந்த அறிவாளிகளெல்லோராலும்கூட அறிந்து
கொள்ளமுடியாத வகையில் மறைத்து வைத்து. வளர்த்து வருகிறது. உலகில் காணப்படும் மிகச்சிறந்த
அறிவாளிகூட, காரணம் கூறமுடியாத அளவில் புல்லிதழ் ஒன்றின் தோற்றமும், மிகச்சிறிய இலையொன்றின்
அசைவும் அமைந்திருக்கின்றன. மிகச்சிறிய பொருளின் வியப்பிற்கு முன்னால் மதவாதிகளும்
-குருமார்களும்-பாதிரிமார்களும் போதகர்களும் வாய் திறக்கமுடியாதபடி நிற்கின்ற நிலைமையில்
இருந்தும்கூட, அவர்கள் உலகங்களின் அடிப்படையை அறிந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்;
உலகங்கள் எப்பொழுது தோன்றின, எப்பொழுது அழியும் என்பதையும் அறிந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்;
கடவுளைப்பற்றிய எல்லாவற்றையும், அவர் எப்படிப்பட்ட விருப்பத்தோடு எல்லாவற்றையும் உண்டாக்கினார்
என்பதையும் அறிந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்: அவர், எப்படிப்பட்ட திட்டத்தையும்
நோக்கத்தையும் கொண்டிருக்கிறார், எந்த வழிகளைப் பயன்படுத்துகிறார், எந்த
முடிவை எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் அறிந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்.
அவர்களுக்குக் கண்ணுக்குப் புலனாகாத அதிசயங்களெல்லாம் புலனாகின்றன; ஆனால் ஒரே ஒரு அதிசயம்
மட்டும் புலப்படுவதில்லை; அதுதான், உயிருள்ள மனிதன் வாழ்வில், அவனுடைய உணர்ச்சிகளோடு
நேரடித் தொடர்பு கொண்டிருக்கிற பொருள்களைப்பற்றிய அதிசயமாகும்!
ஆனால், நாணயமான மனிதர்கள்,
தாங்கள் எல்லாம் அறிந்திருப்பதாகப் பாசாங்கு செய்வதில்லை; அவர்கள் உண்மையாகவும், வெளிப்படையாகவும்
பேசக்கூடியவர்கள் அவர்கள் உண்மையை விரும்புகிறவர்கள்; அவர்கள் தங்கள் அறியாமையை நாணயத்தோடு
ஒப்புக்கொள்கிறவர்கள்: "நாங்கள் அதனை அறியமாட்டோம்" என்று சொல்லிவிடக்கூடியவர்கள்.
இவை எல்லாவற்றையும் கூர்ந்து
பாருங்கள்; நாம் ஏன் அறியாமையை வணங்கவேண்டும்? 'அறியமுடியாத ஒன்று'க்கு நாம் ஏன் முழங்காற்படியிட்டுக்
கிடக்கவேண்டும்? ஊகித்துக்கொண்ட ஒரு பொருளின் முன்னால் நாம் ஏன் வீழ்ந்து கிடக்கவேண்டும்?
கடவுள் இருக்கிறார் என்றால்,
அவர் நல்லவர் என்றும், அவர் நமக்காகக் கவலை கொள்கிறார் என்றும் நாம் எப்படி அறிவது?
கடவுள் அறிவாளியாகவும் நல்லவராகவும். எல்லையற்ற காலந்தொட்டு இருந்து வருகிறார் என்றும்,
அவர் எப்பொழுதும் இருக்கிறார் என்றும், அவர் இனியும் எல்லையற்ற காலம் வரையில் இருப்பார்
என்றும் கிருத்தவர்கள் கூறுகிறார்கள். இந்தக் கடவுள் தம் கடவுள் தன்மையை அகற்றிவிட்டு
வாழக்கூடியவரா ? அவர், தம்முடைய நல்ல தன்மையை அகற்றிவிட்டு வாழக்கூடியவரா? அவர், தம்முடைய
விருப்பமோ, குறிக்கோளோ அற்ற தன்மையில், அறிவாளியாகவும், நல்லவராகவும் வாழக் கூடியவரா?
எல்லையற்ற காலந்தொட்டு அவர் உண்டாக்கப்பட்ட தேயில்லை. அவர் காரணங்களுக்கெல்லாம்
பின்னால் நின்றவர். அவர் மாற்றம் அடையாதவராக, மாற்றம் அடையப்படாதவராக இருந்தார்; இருக்கிறார்;
இருப்பார். அவர் அவருடைய பண்பை உண்டாக்கவோ அல்லது வளர்க்கவோ வேண்டிய அவசியமில்லை; அதுபோலவே
அவருடைய உள்ளத்தை வளர்க்கவேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. அவர் முன்பு எப்படி இருந்தாரோ
அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறார்; அவர் முன்னேற்றம் எதனையும் காட்டவில்லை. அவர்
இப்பொழுது எப்படியிருக்கிறாரோ, அப்படித்தான் இனியும் இருப்பார்; மாற்றம் எதனையும் அவர்
காணப் போவதில்லை. பின் ஏன் அவரைப் புகழவேண்டும் என்று, நான் கேட்கிறேன்? முன்பு எப்படி
இருந்தாரோ, இப்பொழுது எப்படியிருக்கிறாரோ அவற்றினின்றும் அவர் வேறுபாடுடையவராக இருக்க
முடியாது. அவர் மாறப்போவதில்லை; நாம் ஏன், அவரை, வழிபாட்டுரை கூறி வணங்கவேண்டும்?
அப்படியெல்லாம் இருந்தும்,
கடவுள் தவறு செய்ய மாட்டார் என்று கிருத்தவர்கள் கூறிக்கொள்கிறார்கள் !
சாத்தான்மீது சுமத்தப்படும்
மிகச் சாதாரணமான குற்றச்சாட்டு என்னவென்றால். அவன் மக்களாகிய குழந்தைகளுக்கு ஆசைவார்த்தை
காட்டி அழைத்துச் சென்றான் என்பதாகும். அப்படியிருந்தும், கடவுளின் வழிபாட்டுரையில்,
கடவுள் பிசாசுகளின் அரசன் போல் நடந்துகொள்ளக்கூடாது என்று அவமானப்படும் முறையில் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்.
"ஆசைகளில் எம்மை
இழுத்துச் செல்லாதீர்" என்று வழிபாட்டுரையில், கேட்டுக் கொள்ளப்படுகிறது!
புகழ்ச்சியைக் கடவுள்
ஏன் விரும்பவேண்டும்? அவர் ஒரு பொழுதும் ஒன்றையும் கற்றுக்கொண்டதில்லை; தன்னலத்தை மறந்துவாழும் தன்மையை அவர் ஒருபொழுதும் பழக்கப்படுத்திக் கொண்டதில்லை;
அவர் ஆசைக்கு அகப் பட்டதில்லை; அச்சத்தாலோ அல்லது விருப்பத்தாலோ அவர் தொடப்பட்டதில்லை;
அவருக்குத் தேவை எப்பொழுதும் ஏற்பட்டதில்லை ! பின்னர், ஏன் அவர் நமது புகழ்ச்சியை விரும்பவேண்டும்,
கேட்க வேண்டும் ?
இந்தக் கடவுள் இருக்கிறார்
என்பதையோ, வழிபாட்டுரையைக் கேட்டார், அதற்குப் பதிலிறுத்தார். என்பதையோ எவனொருவனாவது
அறிவானா ? அவர் இந்த உலகத்தைக் கட்டி ஆளுகிறார். மக்களின் நடவடிக்கைகளில் அவர் தலையிடுகிறார்,
அவர் நல்லவர்களைக் காப்பாற்றுகிறார், அவர் கெட்டவர்களைத் தண்டிக்கிறார் என்பதெல்லாம்,
மக்களால் அறியப்பட்டவைகளா? இதற்கான சான்று மனித சமுதாய வரலாற்றில் காண முடியுமா? கடவுள்
இவ்வுலகத்தை ஆளுகிறார் என்றால், நல்லதுக்கெல்லாம் நாம் அவரைக் காரணமாக்குவானேன்; இதே
நேரத்தில் தீதுக்கெல்லாம் அவரைக் குற்றஞ்சாட்டாமலிருப்பானேன்? இந்தக் கடவுளை ஒப்புக்கொள்வதற்காக,
நாம் நல்லதை நல்லது என்று சொல்லவேண்டும், தீதையும் நல்லது என்று சொல்லவேண்டும்! எல்லாம்
கடவுளாலேயே இயங்குகின்றன என்றால், அவருடைய செயல்களுக்குள்ளே நாம் வேற்றுமைகளைக் கற்பிக்கக்கூடாது;
எல்லையற்ற பேரறிவு படைத்த, எல்லாம் வல்ல, நல்ல தன்மை கொண்ட கடவுளின் செயல்களுக்குள்ளே
நாம் வேற்றுமைகளைக் கற்பிக்கக்கூடாது! கதிரவனின் ஒளியையும் அறுவடையும் கொடுப்பதற்காக
நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், பிளேக்கையும் பஞ்சத்தையும் கொடுப்பதற்காகவும்
நாம் நன்றி செலுத்தத்தானே வேண்டும்! அவர் அளிக்கும் விடுதலைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம்
என்றால், அடிமை, தன்னுடைய விலங்கு பூட்டப்பட்ட கைகளை உயர்த்திக், கடவுளை வணங்கித்,
தன்னுடைய உழைப்பிற்குக் கூலி கொடுக்காததற்காகவும், சாட்டையடியால் முதுகில் தழும்புகள்
ஏற்றுக்கொண்டதற்காகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தத்தானே வேண்டும்
! நாம் வெற்றிக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், தோல்விக்காகவும் நாம் நன்றி
செலுத்தத்தானே வேண்டும்!
இப்பொழுதுதான் சில நாட்களுக்கு
முன்பு, நமது குடியரசுத் தலைவர், சாண்டியாகோ என்ற இடத்தில் நமக்கு வெற்றி கிடைத்ததற்காக,
ஒரு பிரகடனத்தின்மூலம், கடவுளுக்கு நன்றி செலுத்திக்கொண்டார். மஞ்சள் காய்ச்சல் என்ற
நோயை அனுப்பி வைத்ததற்காக, அவர் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவில்லை. பொருத்தமான
முறையில் பார்க்கப்போனால், நமது குடியரசுத் தலைவர், இரண்டு செயல்களுக்காகவும் சமமான
அளவில், கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டாமா!
உண்மை என்னவென்றால்,
நல்ல-தீய ஆவிகளும், கடவுள்களும் பூதங்களும், மனித அனுபவத்திற்கு மிக அப்பாற்பட்டவைகளாகும்;
நமது எண்ணங்களின் எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும்; நமது சிந்தனைக்கு மிக அப்பாற்பட்டவையாகும்.
மனிதன் சிந்திக்கவேண்டும்;
அவன் அவனுடைய புலனுணர்ச்சிகளை யெல்லாம் பயன்படுத்தவேண்டும்; அவன் ஆராய்ச்சி செய்யவேண்டும்;
அவன் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்கத் தெரியாத மனிதன், மனிதனைவிட மிகத்
தாழ்ந்தவனாகிறான்; சிந்திக்க மறுப்பவன், அவனுக்குத் தானே துரோகியாகிறான்; சிந்திக்க
அஞ்சுபவன், மூட நம்பிக்கையின் அடிமையாகிறான்!
மூடநம்பிக்கை 8
மூடநம்பிக்கையின் விளைவு
மூடநம்பிக்கை செய்யும்
தீங்குதான் என்ன? கட்டுக் கதைகளையும், பழங்கதைகளையும் நம்புவதால் ஏற்படும் தீங்குதான்
என்ன?
அடையாளங்களையும் அதிசயங்களையும்,
தாயத்துக் களையும், மந்திரங்களையும், விதியையும், அற்புதங்களையும் கடவுள்களையும், பூதங்களையும்,
மோட்சங்களையும், நகரங்களையும், நம்புவது, மனிதனின் மூளையைக் குழப்பிவிடுகிறது உலகை
ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்றுகிறது; உள்ளத்திலிருக்கும் உறுதிப்பாடுகளையெல்லாம்
அகற்றி விடுகிறது; அனுபவத்தை ஒரு கட்டுப்படுத்தும் வலையாக ஆக்கிவிடுகிறது; காரண காரியத்திற்கிடையேயுள்ள
அன்புத்தொடர்பை அறுத்து விடுகிறது: இயற்கையிலுள்ள ஒருமைப்பாட்டைக் குலைக்கிறது; மனிதனை
ஒரு நடுக்கங் கொண்ட வேலைக்காரனாகவும், அடிமையாகவும் மாற்றுகிறது. இந்தநம்பிக்கையோடு
இருந்தால், இயற்கை அறிவு நாம் கடைபிடிக்க வேண்டிய வழியைத், தெளிவாகக் காட்டுவதில்லை!
காணப்படாத ஆற்றல்களுக்கு முன்னால், இயற்கை ஒரு பொம்மையாகவே இருக்கிறது! இயற்கைக்கு
மீறிய மந்திரக்கடவுள் தம்முடைய மந்திரக்கோலால், உண்மையைத்தொடுகிறார்; அந்த உண்மை மறைந்துவிடுகிறது!
காரணங்களில்லாமல் காரியங்கள் நிகழ்கின்றன; காரியங்கள் இயற்கைக்
காரணங்கள் எல்லாவற்றினின்றும் தனித்து வாழ்கின்றன! ஏமாற்றம் அரசனாக வீற்றிருக்கிறது
அடிப்படை போய்விட்டது! கோபுரம் காற்றில் மிதக்கிறது! பண்புகளிடையிலோ அல்லது உறவுகளிடையிலோ
அல்லது முடிவுகளிடையடையிலோ ஒரு ஒற்றுமை கிடையாது! பகுத்தறிவு நாடு கடக்கிறது; மூடநம்பிக்கை
முடிசூட்டிக் கொள்கிறது;
இதயம் இறுகுகிறது; மூளை
பலவீனமாகிறது!
இயற்கையை மீறிய ஆற்றலின்
பாதுகாப்பை அடையவேண்டும் என்ற முயற்சியில் மனிதனுடைய ஆற்றல் களெல்லாம் கொன்னே கழிக்கப்படுகின்றன.
நாணயமான உழைப்பு – ஆராய்ச்சி – அறிவின் முயற்சி – நோக்கு – அனுபவம் ஆகியவற்றின் இடங்களைக்
கொடுமை – சடங்கு – வழிபாடு – பலி – வழிபாட்டுரை ஆகியவைகள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன;
முன்னேற்றம் என்பது முடியாத தொன்றாக ஆகிவிட்டது.
மூடநம்பிக்கை, விடுதலையுணர்ச்சியின்
பகையாகவே எப்பொழுதும் இருந்துவருகிறது; எப்பொழுதும் இனியும் இருந்துவரும்.
மூட நம்பிக்கைதான், எல்லா
கடவுள்களையும் தேவதை களையும் உண்டாக்கிற்று; எல்லா பூதங்களையும், பேய்களையும் உண்டாக்கிற்று;
எல்லாப் பிசாசுகளையும், மாந்திரீகர்களையும் உண்டாக்கிற்று; நமக்குக் குறி சொல்வோரையும்,
அவதார புருஷர்களையும், தேவதூதர்களையும் கொடுத்தது; வானவெளியில் மோட்சஉலகின் அறிகுறிகளையும்
அதிசயங்களையும் நிறையச் செய்தது; காரண காரியத்திற்கிடையே இருந்த தொடர்புச் சங்கிலியை
அறுத்தது; அற்புதங்களும் பொய்களும் நிறைந்ததான மளித வரலாற்றை எழுதிற்று மூடநம்பிக்கை பாதிரிமார்களையும் குருமார்களையும் போதகர்களையும் புரோகிதர்களையும்,
ஆண் துறவிகளையும், பெண் துறவிகளையும், பிச்சை எடுக்கும் மந்திரக்காரர்களையும், குற்றம்
புரியும் மகான்களையும், மதவிளக்கங் கூறுவோரையும், மதவெறி கொண்டோரையும், 'அப்படிப்பட்டவர்'களையும்,
'இப்படிப்பட்டவர்'களையும் ஏற்படுத்திற்று! மூட நம்பிக்கை மனிதர்களை, விலங்குகள் - கற்கள்
ஆகியவற்றின் முன்னால் மண்டியிட்டு விழும்படி செய்தது; பாம்புகளையும், மரங்களையும்,
காற்றில் வாழும் பைத்தியக்கார பிசாசுகளையும் வணங்கும்படி அவர்களைத் தூண்டியது; பொன்னும்
உழைப்பும் வீணாகும்படி அவர்களுக்குத்தப்புவழி கற்பித்தது குழந்தைகளின் குருதியை அவர்கள்
சொரியும்படி செய்தது தீச்சுழலில் குழந்தைகளைத் தள்ளி அவர்கள் கொளுத்தும் படிசெய்தது!
மூட நம்பிக்கை, எல்லாவித மடாலயங்களையும் ஈசுவரன் கோயில்களையும் கட்டிற்று; எல்லா வகை
மாதா கோயில்களையும், மசூதிகளையும் கட்டிற்று; உலகத்தில் தாயத்துக்களையும் மந்திரங்களையும்
கொண்டுவந்து நிரப்பிற்று; கடவுள் பொம்மைகளையும் கடவுள் உருவச்சிலைகளையும் கொண்டுவந்து
சேர்த்தது; புனித எலும்புகளையும் பரிசுத்த மயிர்களையும் கொண்டுவந்து காட்டிற்று; மதத்
தியாகிகளின் குருதியையும் அவர்களின் கிழிந்த துணிகளையும் கொண்டுவந்து வைத்தது;மனிதர்களின்
உடலிலிருந்து பேய்களை விரட்டும் என்று சொல்லி மரத்துண்டுகளைக் கொண்டுவந்து நிரப்பிற்று!
மூட நம்பிக்கை,சித்ரவதைக்கான கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பயன்படுத்தச் செய்தது;
ஆடவரையும் பெண்டிரையும்உயிரோடு வைத்துச் சித்ரவதைக்கு ஆளாக்கியது; கோடிக்கணக்கான மக்களுக்கு
விலங்குகளைப் பூட்டிற்ற ; நூறாயிரக்கணக்கான வர்களை நெருப்பிலிட்டு அழித்தது! மூடநம்பிக்கை
பைத்தியக்காரத்தனத்தை அந்தராத்மாவின் ஆலோசனை என்று தவறாக எடுத்துக் கொண்டது; பைத்தியக்காரர்கள்
உளறுவதை அசரீரிவாக்காக, எண்ணிக்கொண்டது; மகான்கள் மனங்குழம்பிக் கூறுவதை ஆண்டவனின்
அறிவு என்று கருதிக்கொண்டது; மூட நம்பிக்கை, நலம்புரிவோரைச் சிறையிலடைத்தது;
சிந்தனையாளர்களைச் சித்ரவதை செய்தது; உடலைச் சங்கிலியால் பிணைத்தது; உள்ளத்திற்கு விலங்குகளிட்டது;
பேச்சுரிமை முழுவதையும் அழித்தது! மூடநம்பிக்கை எல்லாவித வழிபாட்டுரைகளையும், சடங்கு
முறைகளையும் நமக்கு அளித்தது; கீழே விழுதல் முழங்காற் படியிடுதல், வணங்கி நிற்றல் போன்றவைகளெல்லாம்
கற்றுக்கொடுத்தது; மக்களை மக்களே வெறுப்பதற்கும் மகிழ்ச்சியை அழிப்பதற்கும், மக்களின்
உடலில் காயங்களை உண்டுபண்ணுவதற்கும், புழுதியில் கிடந்து புரளுவதற்கும் மனைவியரையும்,
குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடுவதற்கும் உடன் வாழ்வோரை வெறுத்து ஒதுக்குதற்கும், பயனற்ற
நோன்பிலும் வழிபாட்டுரையிலும் வாழ்நாட்களைக் கழிப்பதற்கும் கற்றுக்கொடுத்தது! மூட நம்பிக்கை,
மனிதாபிமானமாவது மிகக்கீழானது, தாழ்ந்தது, கெட்டது என்று கற்றுக்கொடுத்தது; தந்தையார்களைக்
காட்டிலும் பாதிரிமார்கள் தூய்மையானவர்கள் என்றும், தாய்மார்களைக் காட்டிலும் பெண்
துறவிகள் புனிதமானவர்கள் என்றும் கற்றுக்கொடுத்தது: உண்மையைக் காட்டிலும் பக்தி நம்பிக்கையே
உயர்ந்தது என்று கற்றுக்கொடுத்தது; ஏமாற்றுத்தனம் மோட்சத்திற்கு அனுப்பிவைக்கும் என்று
கற்றுக்கொடுத்தது; ஐயப்படுவது நரகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வழிஎன்று கற்றுக்கொடுத்தது;
அறிவை விட நம்பிக்கையே சிறந்தது என்று கற்றுக்கொடுத்தது; எதற்கும் சான்று கேட்பது ஆண்டவனைப்
பழிப்பதாகும் என்று கற்றுக்கொடுத்தது! மூடநம்பிக்கை முன்னேற்றத்திற்கு எப்பொழுதும்
பகையாகவே இருந்து வருகிறது. எப்பொழுதும் பகையாகவே இருந்துவரும்; கல்வியின் எதிரியாக
எப்பொழுதும் இருந்துவருகிறது: வரும்; உரிமையின் கொலையாளியாக எப்பொழுதும் இருந்து வருகிறது,வரும்!
மூடநம்பிக்கை அறிந்த ஒன்றை அறியாத ஒன்றிற்கும், நிகழ்காலத்தை எதிர்காலத்திற்கும், இந்த
உண்மை உலகத்தைக் கண்டறியாத வருங்கால உலகத் திற்கும் பலியிட்டுவிடுகிறது.
மூடநம்பிக்கை, சுயநலம் நிறைந்த ஒரு மோட்ச உலகத்தையும் பழிக்குப்பழிவாங்கும் ஒரு நரக
உலகத்தையும் நமக்கு அளித்திருக்கிறது! மூட நம்பிக்கை உலகில் வெறுப்பையும், போரையும்,
குற்றத்தையும் மிகக் கீழ்த்தரமான கொடுமையையும், மிக அருவருப்பான கர்வத்தையும் நிரப்பி
வைத்தது! மூட நம்பிக்கை, உலகம் முழுவதுமுள்ள அறிவியலின் ! ஒரே எதிரியாக இருந்து வருகிறது!
மூட நம்பிக்கை என்னும்
இந்தப் பயங்கர விலங்கினால், நாடுகளும், இனங்களும் மிகவாக அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாகக் கடவுளின் நம்பிக்கைக் குகந்த பிரதிநிதி, இத்தாலியில்
வாழ்ந்து கொண்டு வருகிறார். அந்த நாடு தேவாலயங்களாலும், மடாலயங்களாலும், சத்திரங்களாலும்,
சாவடிகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது; எல்லாவகையான போதகர்களாலும், புனித மனிதர்களாலும்
அந்த நாடு நிரப்பப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக் காலம், இத்தாலி, பக்திமான்கள் கொடுத்த
பொன்னால் செழிப்புற்றிருந்தது. எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே சென்றன; அந்தச்
சாலைகளெல்லாம். காணிக்கைகளை ஏந்திய புனித யாத்ரீகர்களால் நிறையப் பெற்றிருந்தன. அப்படியிருந்தும்,
எல்லாவகையான வழிபாட்டுரை கொண்டிருந்தும். இத்தாலி கீழ்நோக்கி சென்று, வீழ்ச்சியுற்றுச்
செத்துப் புதைந்தது என்றுதான் சொல்லவேண்டும்; காவர், மாஜினி, காரீ பால்டி போன்றவர்கள்
தோன்றாமலிருந்திருப்பார்களே யானால், அது இதுநேரம் மண்ணோடு மண்ணாய்ப் புதைந்து, கல்லறைக்குள்
சென்றிருக்கும் அது வறுமையும் துன்பமும் அடைவதற்குப் புனித கத்தோலிக்க தேவாலயத்திற்கும்
கடவுளின் நம்பிக்கையான பிரதிநிதிகளுக்குமே அது மிகவும் கடமைப்பட்டதாகும்.
அது வாழ்வு நடத்து வதற்கு, மூட நம்பிக்கையின் எதிரிகளுக்கே அது மிகவும் கடமைப்பட்ட
தாகும். சில ஆண்டுகளுக்கு முன்புதான், இத்தாலி, ஜியார்டனோ புரூனோவுக்கு, நினைவுச் சின்னம்
எழுப்பும் பெருஞ்செயலை செய்து முடித்தது! புரூனோ "மூர்க்க மிருகத்திற்கு"
இரையாகிப் போனவர், இத்தாலி பெற்றெடுத்தவர்களிலே மிகச் சிறந்து விளங்கினவர்!
ஸ்பெயின், ஒருபொழுது,
உலகில் பாதிப்பகுதிக்குச் சொந்தக்காரியாய்த் திகழ்ந்தது; அவளுடைய பேராசைக் கைகளில்
உலகின் பொன்னும் வெள்ளியும் நிறைந்திருந்தன். அந்த நேரத்தில் உலக நாடுகளெல்லாம், மூட
நம்பிக்கை என்னும் இருளில் மூழ்கியிருந்தன அந்தச் சமயத்தில் இந்த உலகமானது புரோகிதர்களால்
ஆளப்பட்டு வந்தது. ஸ்பெயின் அதன் மதக் கொள்கையை, விடாப்பிடியாகப் பற்றியிருந்தது. சில
நாடுகள் சிந்திக்கத் தொடங்கின ஆனால் ஸ்பெயின் மத நம்பிக்கையை இழக்காமலேயே இருந்தது.சில
நாடுகளில் புரோகிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர்; ஆனால் ஸ்பெயினில் மட்டும் அவர்கள்
ஆதிக்கம் அழியவில்லை ஸ்பெயின் செப மாலையை உருட்டிக்கொண்டும், கன்னி மேரியைத் துதித்துக்கொண்டும்
இருந்தது. ஸ்பெயின், அதனுடைய ஆன்மாவைக் காப்பாற்றுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது
அது தன்னுடைய பேராசையால், தன்னைத்தானே அழித்துக்கொண்டது. அது இயற்கைக்கு மீறிய ஆற்றலை
நம்பியிருந்தது. அது அறிவைப் பற்றி நிற்கவில்லை, மூட நம்பிக்கையையே பற்றி நின்றது.
அதனுடைய வழிபாட்டுரைகளெல்லாம் பதிலளிக்கப்படவேயில்லை. மகான்களெல்லாம் இறந்து போயினர்.
அவர்கள் என்ன செய்வார்கள். பரிதாபத்திற்குரியவர்கள்! கடவுள் தன்மை
கொண்ட மேரி யாதொன்றையும் கேட்டாளில்லை. சில நாடுகள் புதிய நாளின் விடியலில் இருந்தன;
ஆனால் ஸ்பெயின் மட்டும் இரவிலேயே தங்கியிருந்தது. சிந்தித்த மனிதர்களையெல்லாம், அது
தீயைக்கொண்டும் வாளைக்கொண்டும் தீர்த்துக் கட்டியது. மத விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டவர்களின்
மீது கொலைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் நாளே ஸ்பெயினின் சிறந்த திருவிழா நாளாகும்.
மற்ற நாடுகள் வளர்ந்து கொண்டு போகும்போது. ஸ்பெயின் மட்டும் தேய்ந்து கொண்டு சென்றது.
நாளுக்குநாள் அதனுடைய அதிகாரம் குறைந்து கொண்டே வந்தது; ஆனால் அதனுடைய பக்தி நாளுக்கு
நாள் வளர்ந்துகொண்டே சென்றது குடியேற்ற நாடுகளை, அது ஒன்றன்பின் ஒன்றாக இழந்து கொண்டே
வந்தது; ஆனால் அது, தன்னுடைய மதக் கொள்கையைமட்டும் வைத்துக் காப்பாற்றிக் கொண்டேயிருந்தது,
சில நாட்களுக்கு முன்புதான், அது தன்னுடைய கடவுளையும், புரோகிதர்களையும், மந்திரங்களையும்,
தாயத்துக்களையும், புனிதத் தண்ணீரையும், உண்மைச் சிலுவையின் மரத்துண்டுகளையும் நம்பிக்
கொண்டு,பெரிய குடியரசு நாட்டின் மீதுபோர்தொடுத்தது பாதிரிமார்கள்: படையினரை வாழ்த்தியனுப்பினர்.
புனிதத் தண்ணீரைக் கப்பல்கள் மீது தெளித்தனர். அப்படியிருந்தும், அதனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன;
அதனுடைய கப்பல்கள் தாக்கப்பட்டு, உடைக்கப்பட்டுக் கொளுத்தப்பட்டன. அது ஆதரவற்ற நிலையை
அடையும் போது, நட்புறவு செய்துகொள்ளப் பணிந்து சென்றது. ஆனாலும் அது தன்னுடைய மதக்கொள்கையை
அப்பொழுதும் அப்படியே கொண்டிருந்தது; அதனுடைய மூடநம்பிக்கை அழிந்துவிடவில்லை. பரிதாபத்திற்குரிய
ஸ்பெயின்! மதத்திற்கு இரையாகி பக்திநம்பிக்கையால் பாழடைந்தது.
போர்ச்சுகல். நாளுக்குநாள்
ஏழையாகிச் செத்துக் கொண்டிருக்கிறது; என்றாலும் அது மத பக்தியைப் பற்றிக் கொண்டு நிற்கிறது. அதனுடைய வழிபாட்டுரைகள் விடை யிறுக்கப்பட்டதில்லை;
ஆனாலும் அது இன்னமும் அவைகளை ஓதிக்கொண்டிருக்கிறது, ஆஸ்திரியா, கிட்டதட்ட அழிந்து விட்டது;
மூடநம்பிக்கைக்கு இரையாகிவிட்டது. ஜெர்மனி இரவின் இருட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கடவுள், கெய்ஸரை அதன் அரியணையில் ஏற்றிவைத்துள்ளார். மக்கள் அவனுக்கு அடங்கியே நடக்கவேண்டும்.
தத்துவாசிரியர்களும் அறிவியல் அறிஞர்களும், ஆண்டவன் 'அனுமதி'யோடு ஆளும் அவ்வரசன் முன்னால்
மண்டியிட்டுத் தாழ்ந்துகிடக்கிறார்கள்; அரசன் அவர்களைப்பொம்மைகளாக மதிப்பிடுகிறான்;
எல்லாம் மூடநம்பிக்கையின் விளைவு!
மூடநம்பிக்கை 9
கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா!
இயற்கைக்கு மேலான ஒன்றாகிய
இயற்கையை மீறிய ஆற்றலிடத்து அதாவது கடவுளிடத்து நம்பிக்கையுடையவர்கள், 'கடவுளால் சொல்லப்பட்ட
வேதங்கள்' என்று சிலபல நூல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூல்கள் எல்லா உண்மைகளையும்
உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் கருதப்படுகின்றன. அவைகள்,அவர்கள் கருத்துப்படி
நம்பவேண்டியவைகளாகும். அவைகளை எவனொருவன் மறுக்கிறானோ அவன் எல்லையற்ற காலம் வரையில்
துன்பம் நுகரும்படி தண்டிக்கப்படுவான். அந்த நூல்கள் மனித பகுத்தறிவுக்கு ஒத்துவரவேண்டும்
என்பதற்காகச் சொல்லப்பட்டதல்ல, அவைகள் பகுத்தறிவுக்கு அப்பா ற்பட்டவை மனிதன் எவற்றை
'உண்மைகள்'என்று கருதுகிறானோ. அந்த உண்மைகளைப் பற்றி அவைகளுக்குக் கவலையில்லை. அந்த
நூல்களோடு ஒத்துவராத உண்மைகள் தவறானவைகள் என்றே கருதப்படும். அந்த நூல்கள் மனிதனுடைய
அனுபவத்தோடும், மனிதனுடைய பகுத்தறிவோடும் தொடர்புபடாது. தனித்து நிற்பனவாகும்.
கடவுளால் உரைக்கப்பட்டதாகக்
கருதப்படும் நமது நூல்கள் "பைபிள்" என்ற பெயரைப் பெறுகின்றன. இந்தக் கடவுளருளிய நூலை எவன் படிக்க நேரிடுகிறானோ அவன், இதில், முன்னுக்குப்
பின் முரண்பாடுகள், தவறுகள் இடைச் சேர்க்கைகள் ஆகியவற்றைக் கண்டு, தன்னுடைய அமைதியான
உயிரை வாட்டி வதைத்துக்கொள்ள வேண்டியவனாவான். அவன் இதைப் படிக்கும்போது, சிந்தித்துப்
பார்க்கவோ, பகுத்தறிந்து பார்க்கவோ அவனுக்குச் சிறிதும் உரிமை கிடையாது. இதை நம்ப வேண்டியதுதான்
அவன் செய்ய வேண்டிய கடமையாகும்.
கோடிக்கணக்கான மக்கள்,
இந்த நூலைப்படிப்பதிலும், முன்னுக்குப் பின்னுள்ள முரண்பாடுகளைப் பொருத்திக் காண்பிப்பதிலும்,
பொருளற்றவைகளைத் தெளிவாக்குவதிலும், அபத்தமானவைகளை விளக்கிக் காட்டுவதிலும் தங்கள்
வாழ்நாட்களை வீண் நாட்களாக ஆக்கியிருக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது அவர்கள், ஒவ்வொரு
குற்றத்திற்கும், ஒவ்வொரு கொடுமைக்கும் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள். இதிலுள்ள முட்டாள்
தனங்களில், அளவிடற்கரிய அறிவுடைமை இருப்பதாகக்கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். கடவுள்
தன்மை கொண்ட வாக்கியங்களிலிருந்து, நூற்றுக்கணக்கான கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
எந்த இரண்டு வாசகர்களும் இதன் பொருளை ஒருபடியாக ஒத்துக்கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை.
ஆயிரக்கணக்கானவர்கள் ஹிபுரு, கிரேக்கம் முதலிய மொழிகளைக் கற்றறிந்திருக்கிறார்கள்;
காரணம் பழைய-புதிய வேதங்களை, அவை முதலில் எழுதப்பட்ட அந்த மொழிகளிலேயே படித்துத் தெரிந்து
தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது எண்ணம், அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப்
படித்தார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அவர்கள் ஒருவரோடொருவர் வேறுபட்டுக் காணப்பட்டார்கள்.
இந்த ஒரே நூலில் அவர்கள் இரு வேறுபட்ட கருத்துக்களையும் நிரூபித்துக் காட்டுவர்: ஒவ்வொருவரும்
அழிந்து படவேண்டும் என்பதையும் காட்டுவர். எல்லோரும் காப்பாற்றப்பட
வேண்டும் என்பதையும் காட்டுவர்; இதில் அடிமைத்தனம் ஆண்டவன் சம்மதம் பெற்றது என்பதும்
இருக்கும். எல்லோரும் உரிமையோடு வாழவேண்டும் என்பதும் இருக்கும். பல தார மணம் உரிமையின்
பாற்பட்டது என்பதும் இருக்கும். ஒரு மனிதன் ஒரு மனைவிக்கு மேல் கொண்டிருக்கக்கூடாது
என்பதும் இருக்கும்; ஆற்றல்களெல்லாம் ஆண்டவன் கட்டளையால் இருக்கின்றன என்பதும் இருக்கும்.
இருக்கும் ஆற்றல்களை மாற்றவும், அழிக்கவும் மனிதர்கள் உரிமை படைத்தவர்கள் என்பதும்
இருக்கும்; மனிதனுடைய நடவடிக்கைகளெல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்டவை எல்லையற்ற காலந்தொட்டு
இருந்துவருபவை என்பதையும் காட்டுவர். மனிதன் சுயேச்சை கொண்டவன் என்பதும் இருக்கும்;
இழிந்த மதத்தினர் எல்லோரும் அழிந்துபடுவார்கள் என்பதும் இருக்கும். இழிய மதத்தினர்
எல்லோரும் காப்பாற்றப்படுவார்கள் என்பதும் இருக்கும்; இயற்கை காட்டும் ஒளி வழி வாழ்வோர்
எல்லையில்லாத் துன்பங்களை ஏற்பர் என்பதும் இருக்கும், தண்ணீர் தெளிக்கப்பட்டு 'ஞான
ஸ்நானம்' செய்யவேண்டும் என்பதும் இருக்கும்; 'ஞான ஸ்நானம் பெறாமல் உயிர் உய்வதற்கு
வழிஇல்லை என்பதும் இருக்கும், 'ஞானஸ்நானத்தால் பயனில்லை என்பதும் இருக்கும்; கடவுளின்
தந்தை-மகன்-பூதம் மூன்று தன்மையையும் நம்பவேண்டும் என்பதும் இருக்கும். தந்தைக் கடவுளின்
தன்மையை மட்டும் நம்பினால் போதும் என்பதும் இருக்கும்; 'ஹீபுருக் குடியானவர்' கடவுளாக
இருந்தார் என்பதும் இருக்கும், அவர் அரை மனிதர், அவருடைய உண்மையான தந்தையாக இல்லாதவரும்,
ஆனால் தந்தை என்று சொல்லப்படுபவருமான ஜோஸ்பின் மூலமாக டேவிட் குருதியில் அவர் தோன்றியவர்,
ஆதலால் கிருத்துவைக் கடவுள் என்று நம்பவேண்டிய அவசியமில்லை என்பதையும் காட்டுவர்; அவருக்கு
முன்னால் புனிதபூதம் வந்ததை நீங்கள் நம்பவேண்டும் என்பதையும் காட்டுவர். அதனை நீங்கள்
நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதனால் ஒரு வேறுபாடும் தோன்றாது என்பதையும்
காட்டுவர்; ஞாயிற்றுக்கிழமையைப் புனித நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதையும் காட்டுவர்,
கிருத்து அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்பதையும் காட்டுவர்; கிருத்து தேவாலயம் ஒன்றை
நிறுவினார் என்பதையும் காட்டுவர், அவர் எந்த தேவாலயத்தையும் நிறுவவில்லை என்பதையும்
காட்டுவர்; இறந்து பட்டவர்களெல்லாம் எழுப்பப்படுவார்கள் என்பதையும் காட்டுவர், அப்படி
எழுப்புதல் என்பது இல்லை என்பதையும் காட்டுவர்; கிருத்து மீண்டும் வருவார் என்பதையும்
காட்டுவர், அவர் தமது கடைசி வருகையை முடித்துவிட்டார் என்பதையும் காட்டுவர், கிருத்து
நரகத்திற்குச் சென்று, அங்கு சிறையலிருக்கும் ஆவிகளுக்கு உபதேசம் புரிந்தார் என்பதையும்
காட்டுவர். அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை என்பதையும் காட்டுவர்: பூதங்களெல்லோரும்
நரிகத்திற்குப் போவார்கள் என்பதையும் காட்டுவர். இல்லை, அவர்களெல்லோரும் மோட்சத்திற்குப்
போவார்கள் என்பதையும் காட்டுவர்; பைபிளில் சொல்லப்பட்ட அதிசயங்களெல்லாம் செய்து காட்டப்பட்டன
என்பதையும் காட்டுவர், அவைகளில் சில செய்து காட்டப்படவில்லை, ஏனென்றால் அவை சிறுபிள்ளைத்
தனமாகவும், முட்டாள் தனமாகவும், மடத்தனமாகவும் இருக்கின்றன என்பதையும் காட்டுவர், பைபிளிலுள்ள
எல்லாப் பகுதிகளும் கடவுளால் சொல்லப் பட்டன என்பதையும் காட்டுவர், அவைகளில் சில கடவுளால்
சொல்லப்படாதவை என்பதையும் காட்டுவர்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப்
பிரித்துக் காணும்போதும், ஒரே பொதுவான தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதையும் காட்டுவர்,
பொதுப்படையான தீர்ப்பு என்று ஒரு பொழுதும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் காட்டுவர்;
ரொட்டித்துண்டும் திராட்சை ரசமும் கடவுள் சதையாகவும் குருதியாகவும் மாறுகின்றன என்பதையும்
காட்டுவர். அவைகள் அப்படி மாறவில்லை என்பதையும் காட்டுவர்; கடவுளின் தந்தை –மகன்–பூதம் ஆகிய முத்தன்மையுருவம் படைத்தவர் என்பதையும் காட்டுவர்,
கடவுளுக்குச் சதையோ இரத்தமோ இல்லை என்பதையும் காட்டுவர், பாபங்களைக் கழுவுமிடம் ஒன்று
உண்டு என்பதையும் காட்டுவர் அப்படி ஒரு இடமும் இல்லை என்பதையும் காட்டுவர்; 'ஞானஸ்நானம்'
செய்யப்படாத குழந்தைகள் அழிந்துபடும் என்பதையும் காட்டுவர். அவைகள் காப்பாற்றப்படும்
என்பதையும் காட்டுவர்; சீடர்களின் கோட்பாட்டை நாம் நம்பவேண்டும் என்பதையும் காட்டுவர்,
சீடர்கள் ஒரு கோட்பாட்டையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் காட்டுவர்; புனிதபூதந்தான
கிருத்துவின் தந்தையாகும் என்பதையும் காட்டுவர், ஜோஸப்பே கிருத்துவின் தந்தையாவார்
என்பதையும் காட்டுவர்; கடவுள் விரோதிகள் கொல்லப்பட வேண்டும் என்பதையும் காட்டுவர்;
தீமையை நீங்கள் எதிர்க்கக்கூடாது என்பதையும் காட்டுவர், நம்பாதவர்களை நீங்கள் கொல்ல
வேண்டும் என்பதையும் காட்டுவர், உங்களுடைய பகைவர்களிடம் நீங்கள் அன்பு காட்டவேண்டும்
எனபதையும் காட்டுவர்; நீங்கள் நாளைக்கு ஒன்று வேண்டுமே என்று எண்ணக்கூடாது. என்பதையும்
எடுத்துக்காட்டுவர், தொழில் நடத்திச் சம்பாதித்துச் சேர்ப்பதிலே கண்ணுங் கருத்துமாக
இருக்க வேண்டும் என்பதையும் காட்டுவர்: உங்களிடத்திலுள்ளதைக் கேட்பவர்களுக்கெல்லாம்
கொடுங்கள் என்பதையும் காட்டுவர், தனது வீட்டுக்கு வேண்டியதைச் சேர்த்துக்கொள்ளாதவன்,
மதாதரியைக் காட்டிலும் தாழ்ந்தவன் என்பதையும் காட்டுவர் !
இந்த எல்லாக் கோட்பாடுகளையும்,
இந்த எல்லா முரண்பாடுகளையும் பாதுகாக்கவேண்டிய, ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன:
இலட்சக்கணக்கான விரிவுரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன; கணக்கற்ற வாள்கள் குருதியில் தோய்த்தெடுத்துச்
சிவப்பாக்கப்பட்டிருக்கின்றன; ஆயிரமாயிரம் இரவுகள், மாறுபட்டவர்களை எரித்த
கொள்ளிக் கட்டைகளின் தீயொளியால், வெளிச்சமாக்கப்பட்டிருக்கின்றன!
பல நூற்றுக்கணக்கான விளக்கவுரைக்காரர்கள்.
வெளிப்படையாகத் தெரியக்கூடியவைகளைத் தத்துவார்த்தம் பொதிந்தனவாகவும், ஆழ்ந்த கருத்துக்கள்
நிறைந்தனவாகவும் செய்து காட்டுகிறார்கள். நாட்களையும், பெயர்களையும், எண்களையும், வழிவழிமுறைப்
பட்டியலையும், மனித அறிவுக்கு எட்டாதனவாகக் கடவுள் தன்மை நிறைந்தனவாக அவர்கள் ஆக்கிக்
காட்டியுள்ளார்கள். அவர்கள், கவிக்கற்பனையை மிகச் சாதாரண நிலைமைகளாகவும், கட்டுக்கதைகளை
வரலாறுகளாகவும், கற்பனை உருவங்களை முட்டாள் தனமானவையும் நடக்கமுடியாதனவும் ஆன உண்மைகளாகவும்
செய்துள்ளார்கள். அவர்கள் புராணக் கதைகளோடும் அசரீரி வாக்குகளோடும் கடவுள் காட்சிகளோடும்
கனவுகளோடும், ஏமாற்றுக்களோடும் தவறுகளோடும், கற்பனைச் செய்திகளோடும், அதிசயங்களோடும்,
அறியாதவர்களின் தவறுகளோடும் பைத்தியக்காரர்களின் கூற்றுக்களோடும், நோய் கொண்டவரின்
உளறல்களோடும் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான புரோகிதர்களும்,
இந்தக் கடவுளருளிய நூலில் பல அதிசயங்களைத் தாங்களாகவே சேர்த்துள்ளார்கள்; விளக்கங்
கொடுப்பதன் மூலமும், முட்டாள் தனத்தின் அறிவுடமையைக் காண்பிப்பதன் மூலமும், அறிவுடைமையின்
முட்டாள் தனத்தைக் காண்பிப்பதன் மூலமும், கொடுமையின் அருள் திறத்தைக் கூறுவதன் மூலமும்,
நடக்கமுடியாதவைகளின் நடக்கக்கூடிய தன்மையை விளக்குவதன் மூலமும் பற்பல அதிசயங்களைப்
புதிதாகச் சேர்த்துள்ளார்கள்.
மதவாதிகள் பைபிளை ஒரு
ஆண்டையாகவும், மக்களை அவரின் அடிமைகளாகவும் ஆக்கினார்கள். இந்த நூலை வைத்துக்கொண்டு
அவர்கள் அறிவின் பல்வேறு திறங்களையும், மனிதனின் இயற்கையான மனிதத்
தன்மையையும் அழித்துவிட்டார்கள். இந்த நூலை வைத்துக்கொண்டு, அவர்கள், மனித இதயங்களிலிருந்த
பரிவைப் போக்கிவிட்டார்கள்; நீதியும் நேர்மையும் கொண்ட கருத்துக்களையெல்லாம் தாழ்த்திவிட்டார்கள்;
அச்சம் என்னும் இருட்டறையில் மனித உயிர்களைச் சிறை அடைத்துவிட்டார்கள்; நாணயமாக ஐயப்படுவதைக்
குற்றம் என்று செய்துவிட்டார்கள் !
அச்சத்தின் காரணமாக,
இவ்வுலகம் ஏற்ற துன்பங்களின் அளவைச் சிந்தித்துப் பாருங்கள்! மனங்குழம்பிய வெறியர்களாக
விரட்டப்பட்ட கோடிக்கணக்கான மக்களை, எண்ணிப் பாருங்கள்! பயங்கரமானவைகளாகத் தீட்டிக்
காட்டப்பட்ட இரவுகளைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்; அச்சமூட்டும் பிசாசுகளாலும்,
பறந்துகொண்டும், ஒடிக்கொண்டும், ஊர்ந்துகொண்டும் இருந்த பேய்களாலும், படமெடுத்துச்
சீறி எழும் பாம்புகளாலும், கொடூரமான எரியும் கண்களோடு உருவமற்று விளங்கிய கொடிய பிசாசுகளாலும்
நிரப்பப்பட்ட இரவுகளைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் !
இறப்பைப்பற்றிய அச்சம்,
கால எல்லையற்ற துன்பத்தைப் பற்றிய அச்சம், நரக நெருப்பிலும் நரகச் சிறையிலும் என்றென்றும்
போட்டுப் பழிவாங்குவது பற்றிய அச்சம், நீங்காத நாவறட்சி பற்றிய அச்சம், நீங்காத வருத்தம்
பற்றிய அச்சம், செருமுதலும் பெருமூச்செறிதலும் பற்றிய அச்சம், வலி தாங்காமல் கதறும்
கூச்சல் பற்றிய அச்சம், எல்லையற்ற வலியினால் முணுமுணுப்பது பற்றிய அச்சம் ஆகிய பல்வேறு
வகை அச்சங்களைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்!
கெட்டிப்பட்ட இதயங்கள், உடைந்த நெஞ்சுகள், இழைக்கப்பட்ட கொடுமைகள், தாங்கிக்கொள்ளப்பட்ட
வேதனைகள், இருட்டடையச் செய்யப்பட்ட வாழ்க்கைகள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்
!
கடவுள் அருளியதாகச் சொல்லப்படும்
இந்த பைபிள், கிருத்தவ உலகத்திற்கு ஒரு சீர்கேடாக இருந்து வருகிறது, இருக்கிறது; இது
கடவுளருளியதாகக் கருதப்படும் காலம் வரையிலும், அப்படியேதான் இருந்து தீரும்!
மூடநம்பிக்கை 10
ஆண்டவனும் பகுத்தறிவும்
நமது கடவுள் மக்களால்
செய்யப்பட்டவராவார்! நமது காட்டுமிராண்டிகளால் செதுக்கப்பட்டவராவார்! அவர்களால் எந்த
அளவுக்குச் செய்ய முடிந்ததோ அந்த அளவுக்குச்செய்தார்கள்! அவர்கள், அவர்களைப்போலவே நமது
கடவுளைச் செய்தார்கள்; அவருக்கு அவர்களுடைய உணர்ச்சிகளையே கற்பித்தார்கள்; அவர்களுடைய
சரியான–தவறான கருத்துக்களை எல்லாம் அவர்மேல் ஏற்றினார்கள்!
மனிதன் முன்னேற முன்னேறத்
தன் கடவுளையும் மாற்றிக்கொண்டான்; நாளடைவில் அவர் இதயத்திலிருந்த மூர்க்கத்தனத்தைக்
கொஞ்சம் எடுத்தான், அன்பு தவழும் ஒளியை அவர் கண்களில் ஏற்றினான். மனிதன் மேலும் வளர
வளர, அவனது நோககம் பரந்து விரிந்து அறிவின் எல்லையும் அகன்றது மீண்டும் அவன் தன் கடவுளை
மாற்றிக்கொண்டான்; அவனால் கடவுளை எவ்வளவு முழுமைத்தன்மையராக ஆக்க முடிந்ததோ, அவ்வளவு
முழுமைத்தன்மையராக ஆக்கினான் என்றாலும் இந்தக் கடவுளும், அவரை
ஏற்படுத்தியவர்களின் சாயலையே கொண்டிருந்தார். மனிதன் நாகரீகம் அடைய அடைய, அவன் அருளுடையவனாக
வளர்ந்தான், நீதியை விரும்பத் தொடங்கினான், அவனது உள்ளம் விரிய விரிய அவனது எண்ணமும்
தூய்மை யடைந்தது, சிறந்து விளங்கிற்று, ஆகவே அவனது கடவுளும் அவனைப் போலவே அருளுடையவராகவும்,
அன்புடையவராகவும், வளர்ந்தார்!
நமது நாட்களில் ஜெஹோவா
மறைந்துவிட்டார் அவர் முழுத்தன்மை நிரம்பியவராகக் கருதப்படுவதில்லை; இப்பொழுதெல்லாம்,
மதவாதிகள், ஜெஹோவாவைப் பற்றிப் பேசுவதில்லை; ஆனால் அன்பான கடவுளைப் பற்றியும், முதலிறுதியற்ற
எல்லையில்லாத் தந்தையைப்பற்றியும், நிலையான நண்பரைப் பற்றியும், மனிதனின் நம்பிக்கைக்குக்
கொள்கலமானவரைப்பற்றியுமே பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் அன்பான கடவுளைப்பற்றிப் பேசும்போதுதான்,
பெரும் புயற்காற்றுகள் அழிவையும் பாழையும் உண்டாக்குகின்றன; நில அதிர்ச்சி உயிரினங்களை
விழுங்குகிறது; வெள்ளப் பெருக்கு பேரழிவை உண்டாக்குகிறது; பேரிடி முகிலிலிருந்து விழுந்து
மக்களின் உயிரை வவ்வுகிறது; பிளேக்கும் காய்ச்சலும், சாவு என்னும் வயலில் இடைவிடாமல்
அறுவடை அறுத்துக்கொண்டே யிருக்கின்றன !
அவர்கள், இப்பொழுது கூறிவருகிறார்கள்.
எல்லாம் நன்மைக்கே என்று. தீமை மாறு உருவில் நலம் புரிவதற்காக வந்த நன்மை என்றும்,
துன்பம் ஏற்றல் மக்களுக்கு வலிவையும், வளத்தையும் உண்டாக்கும் என்றும், அதுவே பண்பை
உருவாக்குகிறது என்றும்; அதே நேரத்தில் மகிழ்ச்சி நலிவையும், தாழ்வையும் தருகிறது என்றும்
கூறி வருகிறார்கள். இது உண்மையாக இருக்குமேயானால், நரகத்தில் கிடக்கும் ஆன்மாக்கள்
எல்லாம் உயரிய நிலைக்குப் போகவேண்டும்; மோட்சத்திலிருக்கும் ஆன்மாக்களெல்லாம் வாடி
வதங்கவேண்டும்!
ஆனால்,நாம், நல்லது நல்லதே என்பதை அறிவோம். நாம் தீது நல்லது அல்ல என்பதையும்,
நல்லது தீது அல்ல என்பதையும் அறிவோம். நாம், ஒளி இருள் அல்ல என்பதையும், இருள் ஒளி
அல்ல என்பதையும் அறிவோம். ஆனால் நாம் அறிவோம், நன்மையும், தீமையும், இயற்கைக்கு மீறிய
ஆற்றலான ஆண்டவனால் திட்டமிடப்பட்டு, உண்டாக்கப்பட்டவை அல்ல என்பதை. அவை இரண்டையும்
அவசியத்தின்பாற்பட்டவைகளாகவே நாம் கருதுகிறோம். நாம் அவற்றிற்காக வாழ்த்துப் பாடுவதுமில்லை.
வசைபொழிவதுமில்லை. நாம் அறிவோம், சில தீமைகளை அகற்றிவிடமுடியும் என்பதையும். நன்மையைப்
பெருக்கிக் கொள்ள முடியும் என்பதையும், நாம் மூளையை வளர்ப்பதன் மூலமும், அறிவைப் பெருக்கிக்கொள்வதன்
மூலமும் இதனைச் சாதித்துக்கொள்ளலாம் என்பதை அறிவோம். கிருத்தவர்கள் எப்படித் தங்களது
கடவுளை மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படியே, அவர்கள் தங்களது பைபிளையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நடக்கமுடியாதவைகளையும், அபத்தமானவைகளையும், கொடுமையானவைகளையும், மதிப்புத் தாழ்ந்தவைகளையும்
அப்பால் தூக்கி எறிந்துவிட்டு, எப்படியேனும் கடவுள் அருளிய வேதத்தைக் காப்பாற்றிக்
கொண்டால் போதும், என்ற அளவுக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும் பழுத்த
பழமை விரும்பிகள் அதனுடைய ஒவ்வொரு சொல்லையும் பற்றிக்கொண்டு நிற்பதோடு, அதன் ஒவ்வொரு
வரியையும் உண்மையென்றே நம்பிக் கொண்டிருக்கத்தான் செய்கின்றனர். வெறும் படிப்பாளர்கள்
சிலர் இருக்கிறார்கள். பைபிள் என்ன சொல்லுகிறதோ அதுதான் அவர்களுக்கு 'பைபிள்' அவர்கள்
விளக்கவுரையேதும் வேண்டமாட்டார்கள். விளக்கவுரை செய்வோரைப்பற்றி அவர்களுக்குக் கவலையேயில்லை.
முரண்பாடுகள் அவர்களுடைய பக்தியை அசைத்துவிட முடியா. எந்தவித முரண்பாடுகள் இருப்பதையும்
அவர்கள் மறுத்துரைப்பார்கள். அவர்கள் அந்தப் புனித வேதத்திற்குப் பணிந்து
அதனோடு ஓட்டியே நிற்பார்கள்; அவர்கள், அதற்குச் சிறிதளவு தத்துவார்த்த விளக்கமே கொடுப்பார்கள்.
ஒரு மதிப்பிற்குரிய பெரியவர் குழந்தைகளை உடையவராக இருக்கிறார் என்ற காரணத்துக்காகவே,
அவருக்குக் குடியிருக்க இடமளிக்க மறுக்கும், பல கட்டுகளை உடைய வீட்டுக்கு வாடகை வசூலிப்பவனைப்
போன்றவர்கள் அவர்கள். "ஆனால், என்னுடைய மக்கள் இருவரும் மணம்புரிந்து கொண்டவர்கள்.
அவர்கள் தனியே அயோவாவில் வாழ்கிறார்கள்” என்று அந்தப் பெரியவர் சொல்கிறார். அதற்கு
அந்த வீட்டு வாடகை வசூலிப்பவன், "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. குழந்தைகளை
யுடைய எவருக்கும் வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்பதே, எனக்கிடப்பட்டிருக்கும் கட்டளையாகும்”
என்று கூறினான். இதைப் போன்றதுதான் அந்தப் பழமை விரும்பிகளின் நிலைமையும்.
வைதீக மாதா கோவில்கள்
எல்லாம். முன்னேற்றம் என்னும் நெடுவழியின் குறுக்கே, போடப்பட்டிருக்கும். தடைக்கற்களாகும்.
ஒவ்வொரு வைதீகக் கொள்கையும் ஒரு இருப்புச் சங்கிலியாகும்; ஒரு இருட்டறையாகும்.
"கடவுளருளிய அந்த வேதத்தில்" நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு நம்பிக்கையாளனும்
ஒவ்வொரு அடிமையாவான். அவன் பகுத்தறிவை அதன் அரியணையினின்றும் வீரட்டியடித்துவிட்டு,
அதற்குப்பதிலாக அச்சத்திற்கு முடிசூட்டியிருப்பவனாவான்.
பகுத்தறிவு மூளையின்
ஒளியாகும்; செஞ்ஞாயிறாகும். அதுதான் உள்ளத்தைச் சுற்றி அளவிடும் அளவு கருவியாகும்;
நிலைத்து நிற்கும் வடமீன் (நட்சத்திரம்) ஆகும்; மேகக்கூட்டங்களை யெல்லாம் தாண்டிக்கொண்டு,
வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் மலைமுகடாகும்!
மூடநம்பிக்கை 11
அறிவியலும் மதவியலும்
கிருத்தவ உலகத்தில்
மதம் ஆதிக்கம் செலுத்தியிருந்த போது. பல நூற்றாண்டுகள் இருளிலேயே உருண்டோடின. மூடநம்பிக்கை
எங்கணும் நிலவி வந்தது. இருபதினாயிரத்தில் ஒருவருக்குக்கூட படிக்கவோ அல்லது எழுதவோ
தெரியாது. அந்த நூற்றாண்டுகளிளெல்லாம். மக்கள், அறிவு ஞாயிற்றுத் தோற்றத்தின் பக்கம்
தங்கள் முதுகைக் காட்டிக்கொண்டு, அறியாமையும் பக்தியுமாகிய இருட்காடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்பொழுது முன்னேற்றம் எதுவுமில்லை; கண்டுபிடிப்பு எதுவுமில்லை; ஆராய்ச்சி முடிவு எதுவுமில்லை.
எங்கு பார்த்தாலும், வாதனையும், வழிபாடும், குற்றஞ் சாட்டலும், துதிபாடலும் நிறைந்திருந்தன.
மதப் புரோகிதர்கள் சிந்தனைக்கும், ஆராய்ச்சியறிவுக்கும் பகைவர்களாக இருந்தார்கள். அவர்கள்
ஆட்டிடையர்களாக இருந்தார்கள்; மக்கள் ஆடுகளாக இருந்தார்கள்; சிந்தனை, ஐயப்பாடு என்ற
ஓநாய்களிடமிருந்து அந்த ஆட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றுவதே அவர்களுடைய முக்கிய தொழில்.
மேல் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவ்வுலகம் ஒரு பயனும் உடையதாகக் காணப்படவில்லை.
வருங்கால வாழ்வுக்குத் தயார்படுத்திக்கொள்ளும் முறையிலேயே இவ்வாழ்வு செலவழிக்கப்படவேண்டியதாகக்
கருதப்பட்டது. மக்களுடைய பொன்னும் உழைப்பும் தேவாலயக் கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வைதீகப்–பயனற்ற கூட்டத்தைக் காப்பாற்றுவதற்கும் வீணே செலவழிக்கப்பட்டன.
நான் முன்பு கூறியதுபோல, கிருத்துவத்தின் இந்த இருண்ட காலங்களில் ஏதொன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை;
ஏதொன்றும் ஆராய்ந்து செய்யப்படவில்லை; மனித வாழ்வு உயர்வதற்கான ஏதொரு திட்டமும் தீட்டப்படவில்லை.
இயற்கையை மீறிய ஆற்றலிடமிருந்து, உதவியைப் பெறவேண்டி, கிருத்தவ உலகின் உழைப்பாற்றல்களெல்லாம்
வீணாக்கப்பட்டன.
பல நூற்றாண்டுகள் வரையிலும்,
கிருத்தவர்கள், கிருத்துவின் வெறும் கல்லறையை மீட்பதற்காக மகம்மதுவைப் பின்பற்றினவர்களோடு
போரிடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர், இந்தக் கவைக்குதவாத கடவுள் பீடத்தின்மீது கோடிக்கணக்கான
மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டன! அப்படியிருந்தும் எதிரியின் படைவீரர்களே வெற்றி பெற்றனர்;
கிருத்துவின் கொடியை ஏந்திச் சென்றவர்கள். புயற்காற்றின்முன் இலைகளைப் போல, சிதறுண்டு
போனார்கள்.
அந்த இருண்ட காலங்களில்,
ஒரேயொரு கண்டுபிடிப்பு நடந்தேறியதாகயதாக நான் நினைக்கிறேன். அதுதான் வெடி மருந்துக்
கண்டுபிடிப்பு கி பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோஜர் பேக்கன் என்ற மடாலய
பாதிரியார் ஒருவர் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்; ஆனாலும் ஆண்டவனுடைய ஆசியில்லாமலேயேதான்
கண்டுபிடித்தார். என்றாலும், இந்தப் பெருமை நாம் கிருத்தவ மதத்திற்குக் கொடுப்பதற்கில்லை;
ஏனென்றால், ரோஜர் பேக்கன், மத எதிரி என்று சொல்லி ஒதுக்கப்பட்டவர்; இம்மாதிரியான பகுத்தறிவுதான்
நிலைக்களனாக நின்று வேலை செய்திருக்க வேண்டும் என்று மதவாதிகள் கருதினர். அந்த வைதீக
நாட்களில், அறிவுடைய மக்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டனவோ, அவற்றையொட்டியே
ரோஜர் பேக்கனும் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
மாதாகோயில் வெற்றி வீரனாக நின்றது. வாளும் கேடயமும் அதன் கையில் இருந்தன; அப்படியிருந்தும்
நாணயமற்ற போக்கையும் வலிவையும் உதவியாகக் கொண்டு வெற்றி பெற்றது. அது தனக்குள்ளேயே
தோல்வி என்னும் விதைகளை விதைத்துக்கொண்டது. மாதா கோயில் நடக்கமுடியாத செயல்களுக்காக
முயன்று பார்த்தது. உலகத்தை ஒரே நம்பிக்கையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அரும்பாடு
பட்டது; எல்லோருடைய உள்ளங்களையும் ஒரு பொதுத் தன்மைக்கு மறப்புரட்சி மூலம் கொண்டு வருவதற்கும்
மனிதனின் தனித்தன்மையை அடியோடு அழிப்பதற்கும் ஆனவரையில் பாடுபட்டது. இதனை நிறைவேற்றி
வைக்க, அது, தந்திரம் சொல்லிக் கொடுத்த எல்லாவித வித்தைகளையும், முறைகளையும் கையாண்டு
பார்த்தது. குற்ற உள்ளம் கண்டுபிடித்துக் கூறிய எல்லாவித முறைகளையும் அது கடைப்பிடித்துப்
பார்த்தது.
ஆனால், இப்படிப்பட்ட
நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறி யுங்கூட, சில மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அவர்கள்
உலக நடவடிக்கைகளிலும், இயற்கையின் பெரிய கண்காட்சியிலும் விருப்பஞ் செலுத்தத் தலைப்பட்டார்கள்.
அவர்கள் ஒவ்வொரு வியப்புக்குரிய நிகழ்ச்சிக்குள்ள காரணங்களையும, விளக்கங்களையும் தேடத்
தொடங்கினார்கள். மாதாகோயில் சரியென்று நிலைநாட்டின கொள்கைகளைக் கொண்டு அவர்கள் மன நிறைவு
கொள்ளவில்லை. இந்தச் சிந்தனையாளர்கள் வானுலகை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டுத்
தங்களுடைய சூழ்நிலைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கினர். அவர்கள். இவ்வுலக நலத்தை விரும்பும்
அளவுக்கு ஆத்மார்த்தமற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள், உணர்ச்சிகள் வயப்பட்டவர்களாகவும்,
மதச் சார்பற்றவர்களாகவும், உலக வாழ்வில் திளைத்தவர்களாகவும், பேரறிவு கொண்டவர்களாகவும்
திகழ்ந்தார்கள்.
முடிவு என்ன? அவர்கள், புதிது கண்டுபிடிக்கவும், புதியன ஆராயவும், உண்மைகளுக்கிடையேயுள்ள
தொடர்பை அறியவும், மகிழ்ச்சிக்குரிய காரணங்களைக் கண்டறியவும், தங்கள் உடன் வாழும் மக்கள்
நல்வாழ்வு வாழ்வதற்கான வழிகள் யாவை என்பதைக் கண்டறியவும் தலைப்பட்டார்கள்!
கோர்க்கும் அச்செழுத்துக்கள்
கண்டுபிடிக்கப்பட்டன; மூர் வகுப்பினரிடமிருந்து காகிதம் பெற்றுக்கொள்ளப்பட்டது; புத்தகங்கள்
வெளியிடப்பட்டன; ஒவ்வொரு தலைமுறையினரும் வருங்காலத் தலைமுறையினர்க்கு அறிவுச் செல்வத்தைச்
சேமித்துவைத்துக் கொடுக்கக்கூடிய வகையில் ஏதுவான நிலைமை ஏற்பட்டது. சட்டுக் கதைகளும்
வதந்திகளும் உலாவிவந்த இடத்தை வரலாறு பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தொலைநோக்கு ஆடி
(தூர திருஷ்டிக் கண்ணாடி) கண்டுபிடிக்கப்பட்டது. நட்சத்திரங்களின் நிலைமையும் இருப்பிடமும்
கண்டுபிடிக்கப்பட்டன; மக்கள் அண்டத்தின் குடிமக்களாக மாறினர். நீராவிப் புகைவண்டி கட்டப்பட்டது;
பெரிய வேலைக்காரனாக நீராவி, கோடிக்கணக்கான மக்களின் வேலையைச் செய்து வருகிறது. நடக்க
முடியாதவைகளான "கற்பனை அதிசயம் ஒதுக்கித் தள்ளப்பட்டது; பயன்படும் கலவையியல்,
இடத்தைப் பற்றிக்கொண்டது. வான ஜோஸ்யம் வான இயலாக மாறிற்று. மனித அறிவின் மிகப்பெரிய
முயற்சிகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படும் மூன்று விதிகளைக் கெப்லர் கண்டுபிடித்தார்.
நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து இப்பொழுது கவிதையாகவும், பாட்டாகவும்
ஆகிவிட்டது. நில ஈர்ப்பின் தொடர்பான கணக்கு விதிகளை, நியூட்டன் நமக்கு அளித்தார். குருதியோட்டத்தின்
அமைப்பினை ஹார்வி கண்டுபிடித்தார். அவர் அதன் உண்மையை நமக்குக் கூறினார்; டிராப்பர்
அதற்கான காரணத்தை நமக்குக் கொடுத்தார். நீராவிக் கப்பல்கள் அலைகடல்களை வென்றன; புகைவண்டித்
தொடர்கள் நிலத்தை நிரப்பின. வீடுகளும் தெருக்களும், புகைக்காற்றால்
ஒளிபெறச் செய்யப்பட்டன. தீக்குச்சி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், தெருப்பு மனிதனின்
நெருங்கிய நண்பனாக மாறிவிட்டது. நிழற் படம் எடுக்கும் கலை எல்லோர்க்கும் தெரிந்ததாக
வளர்ந்து விட்டது. கதிரவன் ஓவியக் கலைஞனாக மாறிவிட்டான். நிலம் வழித் தந்திகளும், கடல்வழித்
தந்திகளும் கண்டு பிடிக்கப்பட்டன. மின்னாற்றல் செய்திகளை ஏந்திச் செல்லும் ஏதுவாயிற்று
: நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமுடையனவாக வளர்ந்தன. மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டது;
வலி தூக்கத்தில் மறக்கடிக்கப்பட்டது. புண்ணாற்றல் ஒரு அறிவியலாக வளரத் தொடங்கியது.
தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது; அது கேட்கும் செவிகளுக்கு அலைகளாகிய சொற்களைக் கொண்டுபோய்ச்
சேர்க்கிறது. இசைப்பெட்டி, புள்ளிகளையும் கோடுகளையும் இசைத்தட்டிலே பெற்றுக்கொண்டு,
நமது பேச்சையே நமக்கு மீண்டும் எதிரொலியாகத் தருகிறது.
பிறகு மின்னொளி வந்தது;
இரவை பகலாக்கிக் காட்டுகிறது; எந்த மின்குற்றல் கோடை மேகத்தினின்றும் கிளம்பி, பாழையும்
அழிவையும் உண்டாக்கிற்றே, அதே மின்னாற்றல், வியப்புக்குரிய பொறிகளை இயக்குவதற்குப்
பயன்படுத்தப்படுகிறது. முக்கோண ஸ்படிகக் கற்களின் ஆராய்ச்சிகள், கதிரவனின் ஒளிக்கதிரிலுள்ள
பொருள்களைத் தெளிவாக்கிக் காட்டுகின்றன. சிறந்த பெருஞ் சிந்தனையாளர்கள், பொருள் – ஆற்றல்
ஆகியவற்றின் அழிக்கமுடியாத தன்மையைப் பற்றியும், அழிக்கமுடியாத தன்மை பெற்றவைகளை உண்டாக்க
முடியாது என்பதைப் பற்றியும் நிரூபித்துக் காட்டினார்கள். நிலயியல் ஆராய்ச்சியாளர்கள்
பாறைகளிலும், மலைகளிலும், மண்ணடுக்குகளிலும் அடங்கிக்கிடக்கும் பொருள்களையும், அவற்றிற்குள்
உள்ள மாறுபாடுகளையும் கண்டறிந்து, உலக வரலாற்றின் கதையைச் சிறிதளவு கூறினார்கள்; மரவியலின்
கதையையும், விலங்கியலின் கதையையும் கூறினார்கள். மனித விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள்
பல்வேறு விதமான எலும்புக் கூடுகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்து
மனிதனின் தொடக்கத் தலைமுறைகளை விளக்கிக் காட்டினர்; புனித வேதம் எவ்வளவு பிற்போக்கானது
என்பதையும் அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். பின்னர் உள்ளது சிறத்தல் கொள்கை வளர்ந்தது;
பொருத்தம் ஏற்படுத்திக் கொண்டன. வாழ்தலும், இயற்கையான தேர்வு செய்து கொள்ளலும் ஆன கொள்கைகள்
இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான அதிசயக் காட்சிகளுக்கு விளக்கந் தரப்பட்டன; அறிவியல் மூடநம்பிக்கை
ஏந்தியிருந்த வாளைத் தாக்கி முறித்துப் போட்டது. உயிரணுவின் கொள்கை வளர்ந்தோங்கியது;
உயிரணுக்களின் கருத்தோற்றம் ஆராய்ச்சி செய்யப்பட்டது; நுண் நோக்கு ஆடி (பூதக்கண்ணாடி)
நோய்தரும் கிருமிகளைக் கண்டுபிடித்துச் சொல்லிற்று; பிளேக்கை எப்படித் தடுக்கலாம் என்பதற்கான
முறையையும் சொல்லிக் கொடுத்தது. எண்ணற்ற கண்டுபிடிப்புகளோடு இந்தக் கொள்கைகளும், ஆராய்ச்சி
முடிவுகளும், விடுதலையறிவின் குழந்தைகளாகும்!
மூடநம்பிக்கை 12
மூடநம்பிக்கையும் அறிவியலும்
நாம் அறிந்திருக்கும்
கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் கொள்கைகளையும் ஒருசேர வைத்துப் பார்த்தால்
நாம் மிகச் சொற்பமாகத்தான் அறிந்திருக்கிறோம் என்பது தெரியவரும். வாழ்க்கை என்னும்
இருட்படலத்தில், சிற்சில ஒளிக்கதிர்கள் தோன்றியிருக்கின்றன. தட்டுத் துடைக்கும் துணி
கீழே விழுவது. விருந்தினர் வருகையை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்; ஆனால் அதற்குச்
சான்றுமட்டும் ஏதும் கிடைப்பதில்லை! பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது ஆபத்தை
உண்டாக்கினாலும் உண்டாக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று மட்டும் கிடைப்பதில்லை! ஒரு
ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளின் எண்ணிக்கையோ அல்லது ஒரு மலரிலுள்ள இதழ்களின் எண்ணிக்கையோ
ஒரு பெண்ணின் திருமண மாற்றங்களை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று
ஏதும் இல்லை! சில கற்களை அணிந்து கொள்வதால் நன்மையும், ஏனையவற்றை அணிந்துகொள்வதால்
இழப்போ அல்லது சாவோ ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்; ஆனால் சான்று ஏதும் இல்லை! திங்களை
இடது தோளின் மேலாகப் பார்ப்பது தீய வாய்ப்பை அளித்தாலும் அளிக்கக்கூடும்;
ஆனால் சான்று ஏதும் இல்லை! பழைய எலும்புகள், புனிதக் கந்தல்கள், பரிசுத்த மயிர்கள்,
உருவத் தோற்றங்கள், மரத்துண்டுகள், துருப்பிடித்த ஆணிகள், காய்ந்த குருதி ஆகியவைகள்
நலம் பயக்கும் நன்மைகளாக இருந்தாலும் இருக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும்
இல்லை! வால் நட்சத்திரங்கள், கிரகணங்கள், விண் வீழ்கொள்ளிகள், அரசர்களின் இறப்பையும்,
நாடுகளின் அழிவையும் அல்லது பிளேக்கின் வருகையையும் முறையே முன்கூட்டித் தெரிவிப்பனவாக
இருந்தாலும் இருக்கக் கூடும்; ஆனால்-, அதற்குச் சான்று ஏதும் இல்லை! பிசாசுகள் மனிதர்களின்
உடல்களையும், உள்ளங்களையும் தம் வயப்படுத்தினாலும் படுத்தக்கூடும்; ஆனால் அதற்குச்
சான்று ஏதும் இல்லை! மந்திரவாதிகள் பூதத்தின் உதவியினால் காற்றுகளை அடக்கவும், நிலத்திலும்
நீரிலும் புயல்களை உண்டாக்கவும், கோடை காலத்தில் பனிப் படலத்தையும் பனிக்கட்டிகளையும்
உண்டாக்கவும், மந்திரத்தால் வேலை செய்து காட்டவும், பொதுமக்களின் மகிழ்ச்சிக்கு மாறுபாடாகச்
சபிக்கவும் ஆன செயல்களைச் செய்தாலும் செய்யக் கூடும்; ஆனால், அதற்குச் சான்று ஏதும்
இல்லை! பழைய– புது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அதிசயக்காட்சி களெல்லாம் நிரூபித்துக்
காட்டப்பட்டாலும் படலாம்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! காய்ந்து வதங்கிப் போன
இறந்த உயிர்களின் சதைப்பற்று, மீண்டும் உயிர் பெற்று எழுந்தாலும் எழக்கூடும்; ஆனால்
அதற்குச் சான்று ஏதும் இல்லை! செத்து விழுந்த பிணம், உயிர்பெற்று எழுந்து, மனைவியும்
குழந்தைகளும் இடும் முத்தங்களை உணர்ந்தாலும் உணரககூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும்
இல்லை! தண்ணீர் திராட்சை ரசமாக மாற்றப்படு வதும் ரொட்டியும். மீன்களும் அதிகமாக்கப்படுவதும்,
ஆடவர்–பெண்டிர் உடல்களிலிருந்து பிசாசுகள் விரட்டப்படுவதும் ஆன நிகழ்ச்சிகள் நடந்தாலும்
நடக்கக் கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மீன்கள் தமது வாய்களில் காசுகளைக்
கொண்டிருந்தாலும் கொண்டிருக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று
ஏதும் இல்லை! களிமண்ணும் எச்சிலும் சேர்ந்து ஒளி இழந்த கண்ணுக்கு மீண்டும் ஒளியூட்டினாலும்
ஊட்டக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மந்திரச் சொற்கள் நோயைப் போக்கிக்,
குஷ்டத்தை நீக்கி நலம் விளைவித்தாலும் விளைவிக்கக்கூடும்; ஆனால் அதற்கு சான்று ஏதும்
இல்லை!
இரும்பு மிதப்பதும் ஆறு
பிளப்பதும், காய்ந்த எலும்புகளிலிருந்து நீர் பீறிடுவதும், தேவதூதர்களுக்குப் பறவைகள்
உணவு ஏந்திச் செல்வதும், உருவப்பட்ட வாள் முனையில் தேவதைகள் தோன்றுவதும் ஆன நிகழ்ச்சிகள்
நடந்தாலும் நடக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று கிடையாது!
பொய் சொல்லும் ஆவிகளைக்
கொண்டு ஜேஹோவா ஒரு அரசனை ஏமாற்றியதும், காட்டுமிராண்டிகள் அதிசயங்கள் பல செய்ததும்
நடந்திருந்தாலும் நடந்திருக்கக்கூடும்! ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை!
சாத்தான் என்ற பூதம்
ஒன்று இருப்பதும், அவன் தந்திரமும் ஆற்றலும் கொண்ட எண்ணிறந்த பிசாசுகளைக் கொண்டிருப்பதும்,
மக்களுக்குத் தீங்கைச் சொல்லிக் கொடுப்பது, அவர்களை வெறுப்படையச் செய்வது, தவறான வழிகளில்
ஈடுபடுத்துவது, சிறைபிடிப்பது, சிறை யடைப்பது போன்ற தொழில்களை அந்தப் பிசாசுகள் செய்துகொண்டிருப்பதும்
ஆன செயல்கள் நடந்தாலும் நடக்கக்கூடும்; ஆனால் நமக்கு ஏற்படும் தொல்லை யெல்லாம், அதற்குச்
சான்று ஏதும் இல்லை என்பதே! மதப்புரோகிதர்கள் வாயினால் கூறுவதைத் தவிர வேறு சான்று
ஏதும் இல்லை!
நரகம் என்று சொல்லப்படும்
ஒரு இடம் இருப்பதும், அங்கு பூதமெல்லாம் வாழ்வதும், சிந்திக்கவும் சிந்தித்த கருத்துக்களை
வெளியிடவும் உறுதிபூண்டிருக்கிற மனிதர்களுக்காகவும். புரோகிதர்களுக்கும்
புனித வேதங்களுக்கும் மதிப்பு கொடுக்காதிருப்பவர்களுக்காகவும், பகுத்தறிவொளி காட்டும்
பாதையில் நடந்து செல்பவர்களுக்காகவும், ஏமாற்றுத்தனத்தையும் பக்தியையும் கொள்ளாது ஆண்மையோடும்
நல்ல தன்மையோடும் இருப்பவர்களுக்காகவும் அந்த நரகத்தில் நெருப்புகள் எரிந்து கொண்டிருப்பது
உண்மையாக இருந்தாலும் இருக்கக்கூடும்; ஆனால், நான் மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன்.
அதற்குச் சான்று ஏதும் இல்லை என்று!
சுவர்க்கம் என்று ஒன்று
இருப்பதும், அதனைக் கடவுள் வாழுமிடமாகக் கொண்டிருப்பதும், அங்கு தேவதைகள் ஓடியும்,ஆடியும்,
பறந்தும், பாடியும், நரகத்தில் அவதிப்படுவோரின் கூச்சல்களையும், முணுமுணுப்புகளையும்
கேட்டு மகிழ்ச்சிகொள்வதும் உண்மையாக இருந்தாலும் இருக்கக் கூடும்; ஆனால் அதற்குச் சான்று
ஏதும் இல்லை!
இவையெல்லாம் பைத்தியக்காரர்கள்
கண்ட கனவுகளிலும், காட்சிகளிலும் மட்டுமே நிலை நிற்கின்றன!
இயற்கைக்கு மீறிய ஆற்றல்
ஒன்று இருப்பதும், அது உலகிலுள்ள பொருள்களையெல்லாம் காப்பாற்றி வருவதும், அது அவைகளுக்கு
வழிகாட்டுவதும் ஆன செய்திகள் உண்மையாக இருந்தாலும் இருக்கக்கூடும் ; ஆனால் அந்த ஆற்றல்
இருப்பது நிரூபித்துக் காட்டப்படவே யில்லை !
பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கைகள்–எண்ணங்கள்,
ஆற்றல்–பொருள் வளர்ச்சி–அழிவு, பிறப்பு–இறப்பு. மகிழ்ச்சி–வருத்தம், நல்லவர்கள் துன்புறுவது–தீயவர்கள்
வெற்றிபெறுவது ஆகிய இவற்றிற்கிடையே இருக்கும் எந்த அறிவுள்ள நாணயமான மனிதனும்,
"நான் அதனை அறியவில்லை" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால், நாம் அறிவோம், கடவுள்களும் பூதங்களும், சுவர்க்கங்களும் நரகங்களும்
எப்படி உண்டாக்கப்பட்டன என்பதை. நாம் வேத நூல்களின் வரலாற்றையும் தங்களின் உற்பத்தியையும்
நன்கு மூட நம்பிக்கை என்னும் விதைகள் எப்படி நடப்பட்டன என்பதையும், அவற்றை எது வளர்த்துவந்தது
என்பதையும் நாம் அறிவோம். எல்லா மூட நம்பிக்கைகளும், எல்லாக் கோட்பாடுகளும், எல்லா
முட்டாள் தனங்களும், எல்லாத் தவறுகளும், எல்லாக் குற்றங்களும், எல்லாக் கொடுமைகளும்,
எல்லா நன்மைகளும் தீமைகளும், எல்லா விருப்பங்களும், அச்சங்களும், எல்லாக் கண்டுபிடிப்புகளும்
ஆராய்ச்சிகளும் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்பட்டன என்பதை நாம் அறிவோம் பகுத்தறிவு
ஒளியின் உதவியினைக்கொண்டு, நாம், துன்புறுத்துவதினின்றும் பயன்படுவதைப் பிரிக்கிறோம்;
பொய்யினின்றும் உண்மையைப் பிரிக்கிறோம்.
நாம், இறந்தகாலத்தையும்,
மனிதன் நடந்தேறிவந்த வழிகளையும் அறிவோம். நாம், மிகச் சொற்ப உண்மைகளையும், மிகச் சொற்ப
இயற்கையின் பகுதிகளையும், அறிவோம். இந்தத் தெரிந்த உண்மைகளையும், அறிந்த பகுதிகளையும்
வைத்துக்கொண்டு நாம், நமது கற்பனைத் திறனாலும் கலையுள்ளத்தாலும் இறந்த காலத்தைப் புதுப்பிக்கிறோம்;
இருக்கவேண்டியவைகளை வருங்காலத்தரையில் அறிவு வண்ணங்களால் தீட்டிக்காட்டுகிறோம்.
நாம் இயற்கையிலே நம்பிக்கை
செலுத்துகிறோம்; உடையாத உடையமுடையாத இயற்கைக் காரணகாரியங் களின் தொடர்பில் நம்பிக்கை
செலுத்துகிறோம். இயற்கைக்கு மீறிய ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்படுவதை நாம் மறுக்கிறோம்
நறுமணப்புகை காட்டல், மண்டியிடுதல், மணியோசை ஒலித்தல், பாட்டுப்பாடல் செபமணி உருட்டல்,
வழிபாட்டுரை கூறல் ஆகியவைகளால் மகிழ்ச்சியுறும் கடவுளை நாம் நம்புவதில்லை; அச்சத்தாலும்,
பக்தியாசையாலும் கூறப்படும் புகழ்ச்சிச் சொற்களை, விரும்பி நிற்கும்
கடவுளை நாம் நம்புவதில்லை.
நாம் இயற்கையை நம்புகிறோம்.
நாம் பூதங்களையோ, பிசாசுகளையோ, நரகங்களையோ கண்டு அஞ்சுவதில்லை. மகாத்மாக்கள், தெய்வீக
உடம்புகள், ஆவிகளின் உலாவுகள் மைப்பார்த்தல், எதிர்காலம் அறிதல், தொலைவிலுணர்தல், மனதை
அறிதல், கிருத்துவ அறிவியல் இவையெல்லாம் தந்திரமான ஏமாற்று வித்தைகள் என்றே நாம் நம்புகிறோம்;
நாணயமான சான்றுகளைக்கொண்டு இவையெல்லாம் நிரூபிக்கப்ட்டதில்லை. சில சமயங்களில் தந்திரம்
என்னும் தட்டுகள் நாணயமென்னும் தங்கமுலாம் பூசப்பட்டும், தீமை நன்மை என்னும் முலாம்
பூசப்பட்டும், ஏமாற்றப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
கோடிக்கணக்கான மக்கள்,
இல்லாத ஒன்றை வேண்டிக்கொண்டும், இயற்கைக்கு மீறிய ஆற்றலின் உதவியைத் தேடிக்கொண்டும்,
வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க முயன்றுகொண்டும், விதியின் விளையாட்டை ஊகித்துக் கொண்டும்.
எதிர்கால இரகசியங்களைப் பறித்துக் கொண்டும் காலந்தள்ளிவருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்
அவர்களுடைய முயற்சிகளெல்லாம் வெறும் வீணே என்பதை நாம் அறிவோம்.
நாம் இயற்கையை நம்புகிறோம்.
நம்வீட்டிலும் குளிர்காயும் இடத்திலும், மனைவியிடத்தும் மக்களிடத்தும், நண்பர்களிடத்தும்
உறவினர்களிடத்தும், உலகின் உண்மைகளிடத்தும் அறிவினிடத்தும், மூளை வளர்ச்சியினிடத்தும்
நம்பிக்கை வைக்கிறோம். நாம் மூட நம்பிக்கையை உதறித்தள்ளுகிறோம் ; அறிவியலை வரவேற்கிறோம்
நாம், மாயைகளையும், தவறுகளையும், பொய்களையும் அகற்றுகிறோம்; உண்மையைப்பற்றி நிற்கிறோம்.
நாம், அறியாத தொன்றை அரியணையில் ஏற்றமாட்டோம். நாம், நமது முதுகுப் புறத்தைக் கதிரவனுக்குக்காட்டி
நின்று, நம்முடைய நிழலையே கடவுள் என்று கூறி நிற்கமாட்டோம்.
நாம், நாமே ஒரு ஆண்டையை உண்டாக்கிக் கொண்டு, அது அளிக்கும் விலங்குகளை நன்றியோடு
பெற்று மாட்டிக்கொள்ள மாட்டோம். நாம் நம்மையே அடிமைகளாக்கிக் கொள்ளமாட்டோம். நாம் தலைவர்களையும்
விரும்போம்; சீடர்களையும் விரும்போம். ஒவ்வொருவனும் இலஞ்சத்துக்காளாகாத உறுதிமொழிகளையும்,
அச்சுறுததல்களுக்குக் கவலைப்படாத தன்மையையும், தனக்கும் தன்னுடைய கொள்கைக்கும் உண்மையாக
நடத்திக் கொள்ளும் பண்பையும்கொண்டு விளங்கவேண்டும் என்பதே நமது விருப்பம். கொடுங்கோலன்
மண்ணிலேயோ அல்லது விண்ணிலேயோ இருப்பதை நாம்விரும்பவில்லை.
மூடநம்பிக்கை, ஏமாற்றுதல்களையும்
வஞ்சித்தல்களையும், கனவுகளையும் காட்சிகளையும், சடங்குகளையும் கொடுமைகளையும், பக்தியையும்
பைத்தியக்காரத் தனத்தையும் பிச்சைக்காரர்களையும் போக்கிரிகளையும், குற்றஞ் சுமத்தல்களையும்
வழிபாட்டுரைகளையும், மதத் தத்துவத்தையும், சித்ர வதையையும், பரிதாபத்தையும் வறுமையையும்,
மகான்களையும் அடிமைகளையும், சடங்குகளையும் வேத மந்திரங்களையும், நோயையும் சாக்காட்டையும்
நமக்கு அளித்துள்ளது என்பதை நாம் அறிவோம் !
மதிப்பிடத்தக்கப் பொருள்களனைத்தையும்,
அறிவியல் நமக்கு அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அறிவியல் ஒன்றுதான் நாகரிகத்தைக்
கற்பிக்கும் கருவியாகும். அது அடிமையை விடுதலைப்படுத்தியுள்ளது ; நிர்வாணமாயிருந்தவர்களுக்கு
உடை உடுத்தியுள்ளது; பசித்திருந்தவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது; வயதை நீடிக்கச் செய்துள்ளது;
நமக்கு வீடுகளையும் குளிர் காயும் இடங்களையும் அளித்திருக்கிறது; படங்களையும் புத்தகங்களையும்
தந்திருக்கிறது; கப்பல்களையும் நீராவி வண்டிகளையும் தந்திருக்கிறது; நிலவழித் தந்திகளையும்
நீர்வழித் தந்திகளையும் கொடுத்திருக்கிறது; எண்ணற்ற உருளைகளை எப்பொழுதும் உருட்டிக்கொண்டிருக்கும்
பொறிகளை அளித்திருக்கிறது; காட்டுமிராண்டியின் மூளையிலிருந்து
உதித்த பயங்கரப் பிராணிகளையும் பேய்-பூதம்-பிசாசுகளையும் இறக்கைகெண்ட தேவதைகளையும்
அழித்திருக்கிறது!
அறிவியல்தான், உண்மையான
உதவிபுரியக்கூடிய ஏதுவாகும். அதுதான் ஆணவத்தை அகற்றி நாணயத்தைப் புகுத்தும்; எல்லா
மூட நம்பிக்கைகளையும் தள்ளிவிட்டு உண்மைபேசும் தன்மையைப் புகுத்தும் அது, பயன் படத்தக்கவைகள்
எவை என்பதை மதத்திற்குச் சொல்லிக் கொடுக்கும். அது, அழுத்தமான மூடநம்பிக்கை எந்த உருவில்
அமைந்திருந்தாலும், அதனை அழித்துவிடும். அது, சிந்தனையற்ற பக்திக்குமேல், சிந்தனையுள்ள
ஐயப்பாட்டை வைக்கும். அது, புரோகிதர்கள்– மதவாதிகள்–மகான்கள் ஆகியோர்க்குப் பதிலாகத்
தத்துவாசிரியர்கள்–சிந்தனையாளர்கள் கற்றறிந்தவர்கள் ஆகியோரை நமக்கு அளித்திருக்கிறது
அது, வறுமையையும் குற்றத்தையும் அகற்றும்; எல்லாவற்றையும்விட சிறந்ததும், உயர்ந்ததும்
மதிப்பு வாய்ந்ததுமான செயல், அது உலகம் முழுமைக்கும் விடுதலை வழங்கும் என்பதேயாகும்!
(முற்றும்)
0 Comments: