கிராமங்கள் ஒழிய வேண்டும் - பெரியார் | Giramangal Oliya Vendum Periyar Tamil book PDF

புத்தகம்

கிராமங்கள் ஒழிய வேண்டும்

எழுத்து

பெரியார்

PDF

EPUB

MOBI

To Hear the Audio Book


கிராமச் சீர்திருத்தம்

(31-10-44ல் ஈரோட்டில் தோழர் ப.சண்முகவேலாயுதம் அவர்களால் ஏற்பாடு ஆன கிராம அதிகாரிகள் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் மாவட்டக் கல்வி அதிகாரி திரு.வி.கே. ராமன்மேனன், எம்.ஏ..(பாரிஸ்டர்) அவர்கள் தலைமையில், "கிராமச் சீர்த்திருந்தமும் அவற்றின் எதிர்காலத் திட்டமும்" என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சாரம்)


“தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் கிராமாதிகாரி ஆவதற்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் கூட்டமா னாலும், இதற்குத் தலைமை வகிப்பவர் ஒரு கல்வி அதிகாரி ஆவார்; இங்கு அருகில் வீற்றிருப்பவர் கிராமாதிகாரிகட்கு அதிகாரியாக இருக்கும் “டெப்டி கலெக்டர்" ஆவார்; இருவர்களும் தக்க அதிகாரமும், பொறுப்பும் பெற்ற அதிகாரிகள். அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் "புரட்சிக்காரனும்" சகல துறையிலும் இந் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் சாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியு மாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன். நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்த்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு, மத - அடிப்படை என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன். இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.


இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் “கிராமச் சீர்த்திருத்தம், கிராமத்தின் எதிர்காலத்திட்டம் என்பதைப் பற்றிப் பேசுவதென்றால், அது இச்சபைக்கு அவ்வளவு திருப்தியாயும், பொருத்தமாகவும் இருக்குமா என்பது கவலைப்படத்தக்கதாக இருக்கிறது. இருந்தாலும் நாடகத்தில் நகைச்சுவை என்பதன் மூலம் எப்படித் தலை கீழான வெறுப்பான - பல மாறான கருத்துகளைக் கண்டு உடல் துடிக்காமல் அவைகளைச் சகித்துக்கொண்டு அனுபவிக்க றோமோ அதுபோல், நான் சொல்வதைச் சற்று கவனமாய்க் கேட்டு நகைச்சுவையாய் அனுபவித்து வீட்டுக்குச் சென்று நடுநிலையில் இருந்து ஆலோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஆத்திரப் படாமல் ஆலோசனையில் இறங்கினால்தான் நல்ல முடிவு கிடைக்கும்.


ஆகவே, தோழர்களே! எனது கிராமச் சீர்திருத்தத் திட்டம் என்பது என்னவென்றால் இந்த நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்துவிடுவதேயாகும். அது மாத்திரமல் லாமல், கிராமங்கள் (villages) என்கின்ற வார்த்தைகள் அகராதியில் கூட இல்லாதபடி செய்துவிட வேண்டும் அரசியலிலும்கூட கிராமம் என்கிற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்றே சொல்லுவேன். கிராமம் என்கின்ற எண்ணத்தையும், பெயரையும் அதற்கு ஏற்ற பாகுபாட்டை யும், பாகுபாட்டு முறையையும் வைத்துக் கொண்டு நீங்கள் என்னதான் கிராமச் சீர்திருத்தம் செய்தாலும் 'பறையன்' 'சக்கிலி என்பவர்கள், எப்படி 'அரிஜனன் ஆனானோ அதுபோலவும், ஆதிதிராவிடன் ஆனா னோ அதுபோலவும் போன்ற மாற்றம்தான் ஏற்படுமே ஒழிய பறையன் மற்ற மனிதர்களைப் போல மனிதனானான் என்கிற மாற்றம் எப்படி ஏற்படாதோ அது போல் “கிராமச்சீர்திருத்தம் செய்யப்படுவதால் நல்ல கிராமம் ஆயிற்று' என்றுதான் ஏற்படுமே ஒழிய மற்றபடியான நகரத் தன்மையும், நகர மக்கள் அனுபவிக்கும் உரிமையையும் அனுபவிக்க முடியவே முடியாது. ஏனெனில் நகரத்தின் அமைப்பும் அவசியமும் வேறு; கிராமத்தின் அமைப்பும் அவசியமும் வேறு.


Categories:
Similar Books

0 Comments: