தேவ லீலைகள் - அறிஞர் அண்ணா | Deva Leela - Aringar Annadurai - Tamil Free Book PDF


 தேவ லீலைகள்

  அறிஞர் அண்ணா

முன்னுரை

அறிஞர் அண்ணாதுரை திராவிடத்தின் ஆடும் மயில், கூவும் குயில், குளிர்ந்தடிக்கும் தென்றல், அறிவுக் களஞ்சியம்! மாற்றாருக்கு, மந்த புத்தி கொண்டவருக்கு, அவர், கொட்டும் செந்தேள், சுழன்றடிக்கும் சூறாவளி, தனல் கக்கும் எரிமலை, சீறிப் பாயும் சிறுத்தை!

தமிழ்ப் பாசறையின் முதல் வெளியீடாக அறிஞர் அண்ணாவின் நூலேயே வெளியிட எண்ணினோம், அணுகினோம், அன்போடு தந்துதவினார். அண்ணாவிற்கு நன்றியும் வணக்கமும்!

"தேவலீலைகள்" அறிஞர் தீட்டிய தலைசிறந்த ஓவியங்களுள் ஒன்றாகும். இதிலுள்ள கட்டுரைகள் திராலிட நாடு இதழில் தனித்தனியே வெளிவந்தவை யாகும்.

தமிழ்ப் பாசறை, பூரிப்போடும் பெருமிதத்தோடும் தேவலீலைகளை உங்களுக்குத் தருகிறது, இனி இது போன்ற மிகச் சிறந்த நூல்களையே உங்களூக்குத் தரும் என்பது உறுதி! தோழர் இராதாமணாளன் தீட்டிய, எண்ணக் குவியலும் எழில் மிகுசித்திரமுமான "பொற்சிலை" பாசறையின் அடுத்த வெளியீடு! திராவிடப் பெருங்குடி மக்களின் ஆதரவு தேவை.

—தமிழ்ப் பாசறையார்.

 

 

 

தேவலீலைகள்!

 

"தேவாதி தேவா! தேவர். தலைவா! மூவரே, மூவரில் முதல்வனே!" என்று பக்திமான்கள் நித்த நித்தம் சத்தமிட்டுப் பூஜிக்கக் கேட்கிறோம். சித்தம் சிதைந்தவனை வித்தகனே என்று அழைப்பதுபோலக் குடியனைக் குணவானே என்று கொண்டாடுவது போல, குக்கலைக் கேசரி என்று அழைத்தல்போல இருக்கிறது.... காமவெறியர்களை தேவா என்றும் மூவா என்றும் அழைக்கும் போக்கு. ஏனெனில் எந்தப் பக்தியினால் யாராரை, இங்ஙனம் ஆரிய மதத்தைக் கடைப்பிடிக்கும் குறைமதியினர் பூஜிக்கின்றனரோ, அந்த மூர்த்திகளின் லீலைகள். கேவலம் காமாந்தகாரம், கபடம், கயமைக்குணம், காட்டுமிராண்டித்தனம் நிரம்பியதாக இருப்பதை, அதே பக்திமான்கள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளிலிருந்து காணலாம். தேவவீலைகள் என்ற தலைப்பிலே இந்தக் காமக்கூத்தர்களின் கோலாகலத்தை ஓரளவு தருகிறேன். கருத்துள்ளோர் சிந்திக்கட்டும்; பழமைவிரும்பிகள் வெட்கித் தலைகுனியட்டும்; வாலிப உலகு கைகொட்டி நகைக்கட்டும்!

000

 "இந்திர தேவா! இதுவே தக்க சமயம் தாமதிக்க வேண்டாம். உடனே புறப்படுக!"

 

"தூதா! என்ன சேதி! எங்கே புறப்படச் சொல்கிறாய்?"

“தங்களுடைய நெடுநாளைய எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ள அபூர்வமான சமயம் வாய்த்துவிட்டது, கிளம்புங்கள்"

"எங்கே?"

"பாரிஷதன் மாளிகைக்கு"

"ஆஹா! அந்தப் பேச்சை, ஏனடா தூதா எடுத்தாய்? அங்கு அந்த ரூபாவதி வபுஷ்டமை என்னை வாட்டியபடி இருப்பாளே! நான் கெஞ்சியும் கொஞ்ச மறுத்தாளே! என் மனம் பாகாய் உருகியும் அந்தப் பாவை இந்தப் பாவிக்கு இணங்கவில்லையே. என் செய்வேன்? எவ்வாறு உய்வேன்? என்னென்னவெல்லாமோ செய்து பார்த்தேன்; என் முழுத் திறமையையும் காட்டினேன், முடியவில்லையே. வபுஷ்டமை மீது கொண்ட மோகமோ தணியவில்லை. அவளோ இணங்கவில்லையே, ஏங்குதே என் மனம்"

"என்ன இது இப்படிச் சோதிக்கலாமோ! அகலிகையின் ........."

 "அது சுலபமாக முடிந்துவிட்டது. சுலபமாக முடிந்தது மட்டுமல்லடா தூதா? அவளுக்கு, நான் இந்திரன் என்று தெரிந்ததும், ஆனந்தமும் பிறந்தது. பெரிய இடமாயிற்றே என்ற பெருமையுமடைந்தாள்; இந்த வபுஷ்டமை அப்படியில்லையே!"

 

"அதற்காகத்தான் சொல்கிறேன். இச்சமயம் தவறினால் மறுகணம் வாய்ப்பதரிது. புறப்படுங்கள் பாரிஷதன் மாளிகைக்கு"

"தக்க சமயமா? எப்படி? என்ன விஷயம்?

"அங்கே அசுவமேதம் நடக்கிறது!"

"அசுவமேதம் நடந்தால் எமக்கென்னடா? அப்சரசுகளைப் பழிக்கும் அழகியான அவளல்லவா எனக்கு வேண்டும்."

அவசரப்பட்டு என் பேச்சை முடிக்க முடியாதபடி தடுக்கிறீரே. அசுவமேதயாகம் நடக்கிறது. அந்த அசுவம் இறந்துவிட்டது"

"இறந்துவிட்டதா? அதனால் ..."

"அதனால் என்று யோசிக்கிறீரே. வபுஷ்டமைமீது ஆசை கொண்டதால், உமது வழக்கமான புத்திகூர்மை கூட மழுங்கிவிட்டதோ? அசுவமேதயாக முறைப்படி குதிரையுடன் ஓரிரவு ராஜபத்தினி தங்கி இருப்பது உமக்குத் தெரியாதா?"

"பேஷ்'பேஷ்! தூதா நல்ல சமயத்திலே கவனப் படுத்தினாய்! வளமான மூளை உனக்கு"

இந்திரனுக்கும். அவனுடைய தூதனுக்கும் இம்முறையிலே உரையாடல் நடைபெற்றதாம் ஒரு நாள். பாரிஷதன் எனும் மன்னனுடைய மனைவி, மகா ரூபவதி வபுஷ்டமை என்னும் பெயரினள். அவளிடம் மோகம் பிறந்தது இந்திரனுக்கு. இந்திராணியின் எழில், மேனகை, அரம்பை ஆகியோரின் லாவண்யம் ஆகியவற்றைவிட, வபுஷ்டமையின் வசீகரம் அதிகம்போலும் எப்படியோ இந்திரனுக்கு இவ்வெண்ணம் மூண்டு விட்டது. ஏதேதோ செய்து பார்த்தான்; அந்த வனிதை இடந்தரவில்லை. இந்நிலையிலே, பாரிஷதன் ஓர் யாகம் செய்தான். அதன் முறைப்படி மன்னன் மனைவி யாகக் குதிரையுடன் ஓரிரவு தங்கி இருக்க வேண்டும். அந்தச் சமயத்திலே குதிரை இறந்துவிட்டது. இது தெரிந்த தூதன் ஓடோடிச் சென்று, வபுஷ்டமையிடம் மோகங்கொண்ட இந்திரனிடம் இஷ்ட பூர்த்திக்கு ஏற்ற சமயம் இதுவே என்றுரைத்தான். இந்திரன் கிளம்பினான். எண்ணம் கைகூடிற்று என்ற களிப்புடன், யாகசாலை சென்றான்! இறந்த குதிரையின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினான்! வபுஷ்டமையிடம் கூடிக்களித்தான். இன்ப இரவு அவனுக்கு. இது சாமான்ய ஏடுகளிலே உள்ளதல்ல. சிவமகா புராணம்; புண்ணிய கதையிலே உள்ளவிஷயம்.

பிறனுடைய மனைவியைப் பெண்டாளும் பெருங்குணம் ! இறந்த குதிரையின் உடலிலே புகுந்து இராசானுபவம் நுகரும் இலட்சணம்! இந்திரனுக்கு இருந்தது. இத்தகைய காமாந்த காரத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் உரைவிடமாக விளங்கிய இந்திரன், காமக் குரோதாதிகளை ஒழித்து, இச்சைகளை அடக்கி கடுந்தவம் புரிந்து, கடவுள் அருள் பெற்று, தேவ பதவி பெற்றவர்களுள் சிலாக்கியமானவன், அவர்களுக்குத் தலைவன். காமக் குரோதாதிகளை அடக்கியவன் செய்தகாரியம், பிறன் மனைவி விழைதல் மட்டுமல்ல; அதற்காக அநாகரிக அக்கிரமச் செயல்! கடவுள் நிலை எய்தியோனின் காமச்சேட்டை இதுபோலென்றால், அதற்கு அடுத்தபடியிலே வைத்துப் பேசப்பட வேண்டிய தபோதனர்கள் ரிஷிகள் ஆகியோரின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இந்திரன் இவ்வண்ணம் அகலிகையிடமும், வபுஷ்டமையிடமும், அரம்பையரிடமும் ஆனந்தமாக இருந்து, காம இச்சைக்காகச் செய்யத் தகாத செயல் பல புரிந்து இருந்ததுபோலவே இந்திராணி அம்மையும் அவர்களுடைய சக்தியானுசாரம் ஏதோ 'சத்காரியம்'! செய்யாதிருக்கவில்லை.

ஒருமுறை இந்திராணிக்கு மகாவிஷ்ணுவின் மீது மோகம் பிறந்ததாம். அவரிடம், அம்மை தமது ஆசையைத் தெரிவித்தார். "அடி பேதாய்! கற்புக்கரசியாக வாழவேண்டுவது காரிகைகளின் கடனன்றோ! தேவமாதரும் பூவுலக மாதரும் சற்குணவதிகளாக இருக்க, நீ ஓர் வழிகாட்டியாக இருக்க வேண்டாமோ? சௌந்தரியம்மிகுந்தவனும், போகபோகாதிகளிலே இலயித்திருப்பவனும், ரசிகனுமாகிய இந்திரனுக்கு நீ பாரியையானாய். உனக்கேன் உதித்தது இக்கெடுமதி! பாபிதேவலோகத்திலே இப்படி ஒரு தூர்த்தை இருத்தல் தகுமா? அதிலும் உனக்குத்தான் எவ்வளவு துணிவு! மும்மூர்த்திகளிலே ஒருவனாகிய என்னிடம், சீதேவி பூதேவி மணாளனாகிய என்னிடமே உன் காமக் கண்களை ஏவினாயே எவ்வளவு நெஞ்சழுத்தம்! நான் காமுகனா? பிறன் இல்லம் நுழைபவனா! பேதாய்! பெருங்கடவுளரிலே ஒருவனாகிய என்னிடம் மோகம் கொண்டாயே, தகுமா? முறையா? பிடிசாபம்!" என்று மகாவிஷ்ணு மிரட்டினார் என்று எண்ணிடத்தான் எவருக்கும் தோன்றும். ஆனால் நடந்தது அதுவன்று! தம்மிடம் மையல்கொண்ட இந்திராணியை நோக்கி மகாவிஷ்னு, "இச்சைக்கினிய இந்திராணியே! இங்கே உன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து வைக்க இயலாது. பூலோசத்திலே, நான் கிருஷ்ணனாக அவதார மெடுக்கப் போகிறேன். அது சமயம் நீயும், பூலோகத்திலே இராதையாக அவதரித்திடு; உன் மனோபீஷ்டம் நிறைவேறும்" என்று அருளிச் செய்தாராம். அதுபோலவே, விபசாரநோக்கங்கொண்ட இந்திராணி, ராதையாகப் பூலோகத்திலே பிறந்து நாராயணனின் அவதாரமாகிய கிருஷ்ணனிடம் சுக சல்லாபமாக வாழ்ந்ததாகப் புராணம் கூறுகிறது.

இப்படிப்பட்ட இந்திரன் இந்திராணி என்பவர்களைத்தான், இந்து மார்க்க சிகாமணிகள் என்போர், கடவுள் பட்டியலிலே சேர்த்துவைத்துக்கொண்டுள்ளனர். ரிக்வேதத்திலே இந்திரனைக் குறித்துப் பலசுலோகங்கள் உள்ளன. காமுகனை பிறன் இல்லம் நுழைபவனை, சோரம் போனவளை மனைவியாகக் கொண்டவனைத் தேவர்க்கரசன் என்று வெட்கமின்றிக்கூறிக்கொண்ட ஆரியக் கூட்டத்தின், அந்தநாள் மனப்பான்மை கூடக் கிடக்கட்டும். இன்றும் ஆரியர்கள், இந்திராதி தேவர்களை இஷ்டசித்தி மூர்த்திகளென்று பூஜித்து வணங்கிப் பலன் பெறவேண்டுமென்று உபதேசிக்கவும் துணிகின்றனர். அவர்களின் துணிவு காணும்போது, கோபம் பிறக்கிறது ஆனால் அந்தப் பேச்சை நம்பி, இவ்வளவு இழிதன்மைகளைக் கொண்ட கதைகளை நம்பி, மனிதத் தன்மையும், புனிதத் தன்மையுமற்ற கற்பனைகளை கடவுள்கள் என்று கருதும் நமது பாமர மக்களின் ஏமாளித்தனத்தைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம் பிறக்கிறது.

இந்திரனுடைய இலட்சணந்தான் இப்படி என்று எண்ணி விடுவதற்கில்லை, ஆரியர்களின் பட்டியலிலே காணப்படும் வேறு தேவர்களின் குணாதிசயங்களும், இதற்கு இம்மியும் குறைந்ததாகக்கூறுவதற்கில்லை. ஒரு தேவனை மற்றோர் தேவன் தோற்கடிக்கிறான். எதில்? தூய்மையிலா? வாய்மையிலா? கடவுட் தன்மையிலா? நீதி நேர்மையிலா? தயை தர்மத்திலா? இல்லை இல்லை; காமாந்தகாரத்தில்.

வேத ஒலி நிறைந்ததும், நாரத கானமும் நல்லோரின் நாதமும் கமழுவதும், ஓமப்புகை சூழ்ந்திருப்பதும், இராஜ அம்சங்கள் அழகுற உலவும் தாமரைத் தடாகங்கள் நிரம்பியதும், மந்தமாருதம் வீசும் மாண்புடையதும், வேத ஒழுக்கமுற்றநல்லோர் சென்று அடையும் புண்ய பூமியாக இருப்பதுமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பிரம்மலோகம். இங்குக் கொலுவீற்றிருக்கும் சிருஷ்டிகர்த்கா பிரம்மன். இவருடைய லீலைகளோ அனந்தம். சிருஷ்டி கர்த்தாவின் லீலைகளிலே மிகச் சிலாக்கியமானது, தானே சிருஷ்டித்த மங்கையைத் தானே மணம் செய்து கொண்டது. சரசுவதிக்குத் தந்தையும் பிரமனே; கணவனும் அவரே! மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், என்ற தத்துவத்தைப் பிரம்மன் தனது காமத்துக்குத் துணை கொண்டார் போலும். சிருஷ்டி கர்த்தாவைப் பற்றிக் கதைகளைச் சிருஷ்டித்தவன், அவருக்குச் சீலத்தை, சாந்தத்தை, ஒழுக்கத்தைச் சூட்டியிருக்கக் கூடாதா! பூலோகத்தின் பிதா என்ற பட்டத்தை யாருக்குச் சூட்டினரோ, அந்த பிதாவின் காமப்பித்தம், பெற்ற மகளைப் பெண்டாளும் அளவுக்குச் சென்றதாகக் கதை எழுதிப் பிறகு, "அப்படிப்பட்ட பிரமனைப் பூஜை செய்ய வேண்டும். அந்தப் பிரமனின் கட்டளையே குலதர்மம்" என்று கூறுவது எவ்வளவுபோக்கிரித்தனமான புரட்டு. அதனை நம்புவது எத்தகையகேவலமான குருட்டுக் கொள்கை என்பதை நமது மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள், மடமையை வளர்க்கிறார்கள்; கொடுமைக்கு ஆளாகித் தவிக்கிறார்கள்; தீயைத் தொட்டுவிட்டுத் திமி திமி என்று கூத்தாடுவதுபோல; மலத்தை மிதித்துவிட்டு ஐயையே! என்று அசங்கியப் படுவதுபோல, மடமை நிறைந்த கருத்துக்களை—கட்டுக் கதைகளை நம்பிக்கொண்டு, பிறகு இழிநிலை பெற்று, இழிநிலை பெற்றதற்காகப் பிறகு மனம் வருந்துவது சரியா?

பிரம்மனின் பிரதாபத்திலே ஒன்று, பார்வதியை அவர் பெண்டாள நினைத்தது, ஆரியர்களின் கண்டனத்துக்கு ஆளான அரக்கர்கள் செய்ததில்லை அப்படிப்பட்ட அக்ரமங்களை. பிரமன் மும்மூர்த்திகளில் ஒருவர், மும்மூர்த்திகளிலே முதல்வர் சிவன், இருவருக்கும் ஐந்து சிரங்களாம். அம்மை பார்வதி ஒரு தினம், நந்தவனத்திலே சென்றார். அங்கு பிரமன் உலாவிக்கொண்டிருந்தார். தலை ஐந்து இருக்கவே பார்வதி தன் நாயகனே அவர் என்று எண்ணிக்கொண்டு, அன்னமென்று நடந்துசென்று அவரைத் தழுவிக்கொண்டாராம்! அம்மையாருக்குத்தான் அவசரத்தால் வந்தது இந்த விபத்து. அயனுக்குத் தெரியுமல்லவா? பார்வதியின் கரம் மேலே பட்டதும் கூவியிருக்கக்கூடாதா? "நான் பிரமன், சிவனல்ல!" என்று சொல்லியிருக்கக் கூடாதா? வலிய அணைந்த சுகானுபவத்திலே, வேதத்தின் முதல்வன்—சிருஷ்டி கர்த்தா களித்திருந்தார். அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் அழகு மனைவியைத் தேடிக்கொண்டு, அரன்! கண்டார் காட்சியை! கொண்டார் கோபம் இவனுக்கும் தலைஐந்து இருத்தலாலன்றோ நமது இன்பவல்லி நாமென்று எண்ணி இவனைத் தழுவினாள் என்று வெகுண்டார். பிரமனைப் பிடித்திழுத்தார். ஒரு சிரத்தைக்கிள்ளி எறிந்தார். செய்யத்தகாத செயல் புரிந்ததற்காக எந்தப் பிரமனைச் சிவனார் தலையைக் கொய்து தண்டித்தாரோ, அதே பிரமனைப் பூலோகத்தார் எப்போதும் போலவே பூஜிக்கலாயினர் நான்முகன் என்ற புதிய நாமதேயமிட்டு.

பார்வதி தேவியை தொட்டிழுத்த துரோகியைத் தேவனென்றும், மூவரில் ஒருவனென்றும் கூறும் மதவாதியைக் கண்டிக்க அகராதியிலே சரியான பதமும் கிடைக்குமா? காட்டுமிராண்டியும், அத்தகைய காரியம் செய்தவனைக் கண்ணால் காண மறுப்பான். இங்குக் கடவுளென்று, காமுகனை, கயவனை, சிவத்துரோகியை கைகூப்பித் தொழுகிறார்கள். இதற்குப் பெயர் பக்தியாம்!

 என்னய்யா பாபம்! அம்மையாரும் அவசரத்திலே ஆலிங்கனம் செய்து கொண்டார். அவரும் என்னவோ கொஞ்சம் ஆனந்தப் பரவசமாகி விட்டார், இதற்காக ஒரேயடியாகக் கண்டித்து விடுவதா?—என்று மதவாதிகளிலே ஒரு சாரார் கேட்பர். உண்மையிலேயே, உமையுடன் உல்லாசமாக இருந்து ஒரு சிரம் அறுபட்டதோடு பிரம லீலை முடிவடையவில்லை. இதுபோன்ற இன்னும் பல லீலைகளை, இந்தப் பிரபஞ்சசிருஷ்டியிலே சதா சர்வகாலமும் ஈடுபட்டிருக்கும் பிரமன் செய்த வண்ணம் இருந்திருக்கிறார். நாம் துப்பறிந்து கூறினதல்ல, தோத்திரப் புத்தகங்களென்று ஆரியர் கூறப்படும் புராணங்களிலே இருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறோம். பார்வதியாருக்குத் திருமணம். அதற்குப் பிரமன் புரோகிதர். முகமூடி அணிந்த அந்த மணப்பெண்ணின் காற் பெருவிரலின் அழகைக் கண்டதும், ஆஹா! விரலே இப்படி இருக்கும் போது, பாதம் எவ்வளவு அழகாக இருக்கும். பிறபிற.......என்று யோசித்தாராம் பிரமன்! காமாந்தகாரரானார்! திருமணத்துக்காக மூட்டப்பட்ட ஓம குண்டமே அணைந்துவிட்டதாம், அவருடைய கெட்ட எண்ணத்தின் விளைவின் காரணமாக. எப்படி இருக்கிறது யோக்கியதை! திருமணப் புரோகிதர்க்கு எத்தகைய திருக்கல்யாண குணம். படைப்புத் தொழிலின் தலைவர் மனதிலே, எப்படிப்பட்ட பாதக எண்ணம் திருமண நேரத்தில்? இத்தகைய தீய நினைவு கொண்டவரைத் துதிக்க வேண்டுமாம், இதற்குப் பெயர் பக்தியாம். ஓய்ந்தாரா பிரமன் இத்துடன்? இல்லை. ஒருமுறை பிரமனே அசுவமேத யாகம் செய்தாராம். யாக காரியத்தைத் தரிசிக்க தேவபத்தினிகள் வந்தனர், யாக குண்டத்தருகே வீற்றிருந்த பிரமன், யாகத்தைத் தரிசிக்க வந்த தேவ பத்தினிகளைத் தரிசித்தார். அவ்வளவுதான்! ஆசை கட்டுக்கடங்க மறுத்தது. காம வெள்ளம்! இதன் பயனாகத் தோன்றினராம் ஓமகுண்டத்தருகிலேயே—பிருகு, அங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர் போன்ற புண்ணியவான்கள். ஓம குண்டத்தருகே நேரிட்ட பிரம லீலையைக் கவனியுங்கள். இவர் சிருஷ்டி கர்த்தர்; இவரைப் பூஜிக்க வேண்டும். அந்த பூஜைக்குப் பெயர் பக்தி. இதை ஒப்புக்கொள்வாரா ஒரு சொட்டு மானமும் ரோசமும் பகுத்தறிவும் உள்ளவர்கள்? பிரம புராணத்திலே எழுதப்பட்டிருக்கிறது மற்றோர் லீலை. கௌரிகல்யாணம் நடந்ததாம். அதனைக்காணச் சென்றாராம் பிரமன். கெளரியைக் கண்டார்; காமங் கொண்டதுதான் தாமதம், விளைவு வீறிட்டது. உடனே தோன்றினராம் வாலகில்லிய இருடிகள். எப்படி பிரமனின் பெருங்குணம்! பெண்களைக் கண்ட உடனே இப்பெருங்குணவானுக்கு தோன்றும் காமம், அதன் விளைவு ஆகியவற்றைக் கூறிவிட்டு, இப்படிப்பட்டவரை ஏத்தி ஏத்தித்தொழுவோம் யாமே என்றும் கூறுகிறார்களே புராணத்தைப் பேசி, அக்கற்பனைகளைப் பூஜிக்கும் மதவாதிகள். இவர்கள், எதை மதிக்கிறவர்களாகிறார்கள்? தெய்வத்தை? தீயசெயல் புரிவோன் தெய்வமல்லவே! தீய செயலைச் செய்ததாகக் கதையும் கூறிவிட்டுப் பிறகு, அச்செயலினனைத் தெய்வமென்று கூறினால், மதி தேய்ந்தவர் தவிர மற்றையோர் ஏற்பரோ? ஊர்வசி ஆடினாலும், திலோத்தமை பாடினாலும், பார்வதி கண்ணிலே பட்டாலும், கௌரியைக் கண்டாலும், மகளே எதிர்ப்பட்டாலும் இந்த மகானுபாவனுக்குக் காமவெறி பிடித்து விடுகிறது. இப்படிப்பட்ட காமிவெறிபிடித்தலையும் “கடவுள்கள்" யாருக்குத் தேவை என்று கேட்கிறோம்.

 


சிவலோக வாசிகள்

"சர்வேஸ்வரா! இந்தப் பாவி செய்யும் அட்டூழியத்தைக் கண்டு, இவனை இப்படியே விட்டு வைக்கலாமா? கன்னியரைக் கற்பழிக்கும் காதகனைக் கல்லாய்ச் சபித்து விடலாகாதா? ரௌரவாதி நரகத்தில் தள்ள வேண்டாமா? காமப் பித்துப்பிடித்து அலைகிறானே! பெண்களை இம்சிக்கிறானே! பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதான காமத்திலே புரள்கிறானே! அவனுடைய கபடக்கண்கள் கதியற்ற கன்னியரைக் சூறையாடுகின்றனவே. ஆண்டவனே! அபலைகளைக் கெடுக்கும் இக்காமுகனின் சிரம் ஆயிரம் சுக்கல்களாக வெடிக்க வேண்டாமா? இப்படிப்பட்ட பாவியை ஏன் இந்த பூமிக்குப் பாரமாக விட்டு வைத்திருக்கிறீர் அவனிடம் சிக்கிச் சீரழிந்தவர்களின் கண்ணீர் கல்லையும் கரைக்குமே, உமது மனம் உருகவில்லையா! ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்றுகூடக் கருதாமல் அக்ரமத்தை அடுக்கடுக்காகச் செய்கிறானே இந்தக் காமவெறிபிடித்த கயவன்! இவனை இனியும் நடமாட விடுவது முறையா? பாபத்துக்கேற்ற தண்டனை தரவேண்டாமா? பரமேஸ்வரா! கண் திறந்துபார். இந்தக் காமுகனைத் தண்டித்து, எம்மைக் காப்பாற்று" என்று பக்திமான்கள், குறிப்பாகத் தாய்மார்கள் பரம்பொருளைத் துதித்தனர். அவ்வளவு அக்ரமம்! அவன் செய்து வந்தான் காமுகன்! கயவன், கபடன். இராவணனா? இல்லை! இரணியனா? இல்லை! சிசுபாலனா? இல்லை! சூரபதுமனா? அல்ல; இராட்சதன் அல்ல. இராவணனை அழித்த, இரணியனை ஒழித்த, சிசுபாலனைக் சிதைத்து சூரபதுமனைச் சம்ஹரித்த சர்வேஸ்வரனிடம் தாய்மார்கள், பக்தி பூர்வமாகவும், அழுகுரலுடனும் மனுச்செய்து கொண்டது—ஒரு அரக்கனின் கொடுமையைப் பற்றியல்ல. மற்ற எந்த உயிருக்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் என்று அழைக்கப்படுவதாக அலங்கார அடைமொழியைப் பெற்ற குலம், பிரமனின் முகத்திலே தோன்றிய குலம்! பூசேவர் குலம். பிராமணன்! அவன் செய்த கொடுமை, காமச்சேட்டையைக் கண்டு சகிக்க முடியாமல்தான், முதல்வனை வேண்டிக் கொண்டனர் மாதர்கள்: காமுகனான அந்த பிராமணனுக்கு அற்புதமான பெயர்; சுகுமாரன்!

ஆண்டவன் என்ன செய்தார்! இந்தப் பிராத்தனையைக்கேட்டு சோகித்திருப்பார் என்று எண்ணுகிறேன். சம்ஹரிக்கவில்ல! சபிக்கவில்லை! அவனை நல்வழிப்படுத்தவுமில்லை! நாசத்தைத் தரவுமில்லை. எனவே எதும் செய்ய முடியாத நிலையிலே இருந்திருப்பார் என்றும், அதனால் ஏக்கம் கொண்டிருப்பார் என்றும் யூகிக்கத்தானே வேண்டும். ஏக்கத்திலே எம்பிரான் என்ன எண்ணியிருப்பார், “ஏதடா இது பெரிய நெருக்கடியாக விட்டது! ஏந்திழையார் அழுத கண்களுடன் நின்று தொழுகின்றனர். அந்தத் துர்த்தனோ அழிக்கப்பட வேண்டியவன், ஐயமில்லை. ஆனால், நான் என்ன செய்வது, அவன் அரக்கனாக இருந்தால் அரை நொடியிலே அவனை அழித்து விட்டிருக்கலாம். மற்றோர் புராணமும் ஏற்பட்டுவிடும். இந்தக் காமுகனோ, பிராமணனாக இருக்கிறானே! மாபாதகம் செய்யினும், மறையோனை நான் என்ன செய்வது?" என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், சுகுமாரன் என்ற - அந்தப் பார்ப்பனன் செய்த பாபக்கிருத்யங்களுக்காகப் பரமன் அவனைத் தண்டிக்கவில்லை. அவன் செய்க அக்ரமங்களிலே ஆயிரத்திலே ஒரு பாகம் செய்தாலும் போதும், அரக்கனாக இருந்தால் அரனோ, அரியோ, அவர் தம் ஏவகரோ, நொடியிலே பஸ்மீகரம் செய்து விட்டிருப்பர். காமுகனான சுகுமாரனை ஒழிக்கும்படி கன்னியர் கடவுளைத் தொழுதும் பலன் இல்லை. அவர் அவனை அக்கிரமத்திலேயே புரளத்தான் விட்டுவைக்க முடிந்தது, ஆண்டவனின் கோபம் அவனை அணுக முடியவில்லை? பாபம் அவர்தான் என்ன செய்யமுடியும்? புற்றிலே இருக்கும் பாம்பைக் கொல்ல எத்தனைபேர் கிளம்புவர்? கொசு அடிக்கவோ எக்கோழையும் தயார். அதுபோலத்தான், அரக்கனை அழிப்பது என்றால் ஆண்டவனுக்கு அரை நொடி வேலை; ஆரியனிடம் அவ்வளவு எளிதிலே அவர் அணுக முடியாதே!

காமம் பிடித்த பார்ப்பனனை அவ்வூர் அரசன் நாடு கடத்தினான். சுகுமாரன் காடு சென்றான்; அவ்விடத்தையும் காமவேள் நடன சாலையாக்கினான் எப்படி? இதோ பாருங்கள்.

"ஐயா! நான் புலைச்சி!"

 "இல்லை! வலைச்சி! உன் அழகெனும் வலை வீசி இந்தப் பூசுரனைப் பிடித்துவிட்டாய். புலைச்சியல்ல; என்........."

 

"ஐயையோ! அடுக்காதுங்க இந்தப் பாவம்! நீங்க பூலோகச் சாமி குலம், நான் பூலோக பாவி குலம். என் மேலே இச்சை வைப்பது கேவலம்"

"எவன் சொன்னான் இந்தப் பிச்சைப் பேச்சை! குலமும் கோத்திரமும் குப்பை! குலாவிட ஏற்றவளே எனக்குத் தேவை"

“நான் பு.........."

ஆம்! காட்டிலே கண்டான் ஒரு மாதை! அவள் இழிகுலம் என்று மதவாதிகளால் ஒதுக்கி வைக்கப் பட்ட வகுப்பு. அவளை அழைத்தான்; மறுத்தால் விடவா செய்வான்? அவனோ காமுகன். இடமோ அடவி, அணைத்தான்; அணுச்சஞ்சலமேனும் இல்லாத இடம் சென்றான். புலைச்சி புலைச்சியாமே இப்போது .......... என்று பிறகு கொஞ்சிடாமல் அவன்தான் இருந்திருப்பானா? அவனுடைய அணைப்பைப் பெற்ற பிறகு அந்த மாதுதான் "நீயும் நானும் ஜோடி விளையாடுவோம் வா கூடி" என்று பாடாமல் இருந்திருப்பாளா? நாட்டிலே அவன் காமுகனாக இருக்கவே காடு போ என்றான் காவலன்! காடு அவனுக்கு விபச்சார வீடாயிற்று. விட்டானில்லை தன் பழைய வேலையை. பரமன் என்ன செய்தார்? என்ன செய்தாரா? என்ன செய்ய முடியும்.

"எப்படியோ நம்மிருவருக்குள் சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. இன்பமாக இருந்தோம். கண்ணாளா! இந்த வாழ்வு இதோ முடிகிறது! நான் சாகிறேன்...... ஆம்! இனி நான் பிழைக்க முடியாது" என்று மரணப் படுக்கையில் கிடந்து குளறினாள். காட்டிலே கிடைத்த காமவல்லி காலம் முடியும் நேரத்தில், சுகுமாரனை அருகழைத்து அவன் பெற்ற பெண்மக்களைப் பக்கத்தில் நிறுத்தி, "நான் போகிறேன்! என் மக்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறேன், இவர்களை நீதான் ரட்சிக்க வேண்டும்" என்று கூறினாள். "இனி நீயே இந்தப் பெண்களுக்குத் தாயும் தந்தையும்" என்று கூறித் தலைசாய்த்துவிட்டாள். பிறகு சுகுமாரன், அப்பெண்களுக்குத் தாயும் தகப்பனும் மட்டுமல்ல நாயகனுமானான். தாயை இழந்தபோது தவித்து, "ஐயோ அம்மா! என்று அலறிய அப் பெண்கள், பிறகு அவனுடைய காமச் சேட்டையினால் உண்டான அலுப்புக் காரணமாக "ஐயோ! அப்பா!" என்று அலறி வாழ நேரிட்டது. அவனோ, தாய் இருந்தவரை அவளோடு வாழ்ந்தோம். தாய்க்குப் பிறகு மகள் தொண்டு செய்கிறாள் என்று எண்ணியிருப்பான். ஈனத்தனமான இக்காரியத்திலே ஈடுபட்டு அக்காமுகன் இருந்தபோதாவது இடி கிடைத்ததா இறைவனிடமிருந்து இல்லை.

பிறகு அவன் வழிப்பறி நடத்தினான்? எதிர்ப்பட்டோரைத் தாக்கினான். அவர்களின் கூக்குரலும் தோத்திரமும் அவனுடைய வெற்றிச் சிரிப்பின் சத்தத்தினால் ஆண்டவன் செவியில் விழவில்லை போலும்! அவனை அவர் அப்போதும் ஏதும் செய்யவில்லை!

இந்நிலையில் காட்டுக் கொள்ளைக்காரனான சுகுமாரனைக் காவலாளிகள் பிடிக்க வந்தனர்; மிரண்டோடினான் வேறோர் காட்டுக்கு.

"சரி கடைசியில் காவலரிடம் சிக்கினான்; அவர்கள் அவனைக் கொன்றார்கள். அடாது செய்தவன் படாது படுவான் என்ற பழமொழி பொய்யாகவில்லை" என்று கதை முடிகிறது போலும் என்று கருதிவிடாதீர்கள். வேறு ஒருகாட்டிலே அவன் போனபோது, நாககன்னியர் அங்குச் சிவபூஜை செய்துகொண்டிருந்தனர்; தரிசித்தான்; இறந்தான், கொல்லப்படவில்லை.

"ஒழியட்டும், இறந்தானல்லவா? பிறகு பூலோகத்திலே அவன் செய்த பாவங்களுக்காக, அவனைக் கடவுள் நரகத்திலே தள்ளித்தண்டித்திருப்பார்" என்று அவசர முடிவுக்கு வந்துவிடாதீர். பாபம் செய்தவன் நரகம் சேர்வான் என்ற நியதியின்படி, அவனுக்கும் நடக்கும் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அப்படிஒன்றும் அவனுக்கு நரகவேதனையும் தரப்படவில்லை.

சுகுமாரனின் கெட்ட நடத்தையைப்பற்றிக் கேட்டதும் அப்பாவிக்கு நரகம்தான் என்று பலரும் அவசர முடிவுக்கு வரக்கூடுமே, அதுபோலவே சுகுமாரனின் தீய செயல்களைத் தெரிந்திருந்த யமபடர்கள், இறந்தவனை இழுத்துச் செல்ல வந்தனர். ஆனால் எதிர்ப்புறத்திலே வந்து நின்றனர் சிவகணங்கள்! "தொடாதே! இவன் சிவானுக்கிரகம் பெற்றவன். சிவபதம் அழைத்தேகவந்திருக்கிறோம்" என்றனர் கணங்கள். “இவனா? இக்காமுகனா? கள்ளனா? புலைச்சியைப் புணர்ந்தவனா? தாயையும் கூடி மகளையும் கூடி சேர்ந்த மாபாவியாம் இவனா சிவானுக்கிரகம் பெற்றவன்" என்று கேட்டனர் யமபடர்கள். "ஆம்! இவன் ஆவிபிரியப்போகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் செய்தான்; எனவே சிவபாதம் சேரவேண்டும்" என்றனர் சிவகணங்கள். யமபடருக்குச் சிவகணங்களை எதிர்க்கமுடியவில்லை, எனவே சுகுமாரன் சிவபாதம் அடைந்தான். இப்படியொரு புராணம் இருக்கிறது. இதிலுள்ள புளுகு கிடக்கட்டும் ஒரு புறம்; பார்ப்பனன் மாபாதகம் செய்த போதிலும், கடைசிவரை திருத்தமே அடையாலிருந்த போதிலும், சாகும்போது தன் பாபச்செயலுக்காக மனம் வருந்தாது இருந்தபோதிலும், நாககன்னியர் சிவபூஜையை நடாத்தியதைக் கண்டதற்காக, அந்தப் பாவிக்கு நரகம் இல்லாமல் போனதுடன், சிவபதம் கிடைத்ததாம்! இந்த நீதியை நாதன் அளித்தார் என்றால், நாதனாக இருக்க முடியுமா? ஆண்டவன், இப்படிப்பட்ட அக்கிரமக்காரனை அழிக்காமல், ஆதரிக்கலாமா? பாபியானாலும் பார்ப்பானாக இருந்ததற்காகப் பரமன் பயப்படுவதா?

நாககன்னியர் தாம் நல்வழிபடச் சிவனைப் பூஜை செய்தனர். இவனோ கள்ளன், காமுகன் காட்டிலே ஓடி வரும்போது இப்பூஜை நடைபெறக் கண்டான் தற்செயலாக! இவன் பூஜைசெய்தானா? இல்லை, மனம் உருகி மன்னிப்புக்கேட்டானா? இல்லை! இவ்விதமிருக்க இவன், பிறர் சிவபூஜை நடத்துவதைக் கண்டதையே பாதகம் துடைக்கும் மார்க்கமாக்கிக்காட்டிய மடமை, மாநிலத்திலே பாவிகளை அதிகரிக்கச் செய்யுமா? குறைக்குமா? கள்ளக் கையொப்பமிடுபவனும், கொள்ளையடிப்பவனும், வஞ்சிப்பவனும், பொய்யனும், "இவை பாபமன்றோ! உனக்கு நரகமன்றோ சம்பவிக்கும்" என்று எவரேனும் கூறினால், "நாமென்ன அவ்வளவு அதிகமான பாபம் புரிந்தோமா? சுகுமாரனைப் போலக் கெட்டு அலைந்தோமா? அப்படிப்பட்ட சுகுமாரனுக்கே சாகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் கிடைத்த ஒரே காரணத்துக்காகச் சிவபதம் கிடைத்ததாமே, நமக்கென்ன பயம்? நாம்தான் கிடைத்த பொருளிலே, சிறிதை எடுத்துக்கிருத்திகையன்று சிவன் கோயிலிலே, கைங்கரியம் செய்திருக்கிறோமே, பாவம் பஸ்மீகரமாகியிருக்காதா?" என்றுதானே எண்ணுவான்!

எந்தவிதமான நீதியின்படி, சுகுமாரனுக்குச் சிவ பதம் தந்தார் சிவபெருமான்? சைவத்தின் பெருமை இதுவா? செய்யத்தகாதன செய்பவனானாலும், சாகும் போது சங்கரா என்று பிறர்கூறும் சத்தத்தைக் காதிலே கேட்டாலே - சிவபதமா? இது நீதியா? முறையா? நேர்மையாகுமா? வலிந்து பிறன் பொருள் கொண்டான் அடையும் தீ நிறைந்த இருப்புச்சால் இருக்கிறதாம் நரகலோகத்திலே! அந்த அக்கினிக் குண்டத்திலே அல்லவா வழிப்பறிக்கள்ளனாம் சுகுமாரனைத் தள்ளியிருக்கவேண்டும்! புணரக்கூடாதவரைப் புணர்ந்தவர் அணைத்துக் கொள்ள இரும்புக் கம்பம் உண்டாம் நரகத்தில். வசர கண்டமாம் அதற்குப்பெயர். அந்த வேதனையை அல்லவா அந்தக் காமுகன் பெற்றிருக்க வேண்டும்! முட்களால் கொத்துண்ணும்நரகம் ஒன்றும் - பெயர் சான்மலி என்பதாம், இங்கு உயர்வு தாழ்வு கருதாது புணர்ச்சி செய்தோன் தள்ளப்படுவானாம், புலைச்சியைக் கூடிய இப்பூசுரனை இதிலேயல்லவா போட்டிருக்க வேண்டும்! இவை ஏதும்இல்லை; சிவபதமாம் இந்தச் சீர்கேடனுக்கு! காமுகனுக்குக் கடவுள் அருளாம்! கள்ளனுக்குக் கைலாயபதமாம்! மாபாதகம் செய்தவனுக்கு மகேஸ்வரனின் அருளாம்! இது கடவுள் கொள்கைக்கு உகந்ததா, மனித நீதிக்கு அடுக்குமா, அறிவுக்குப் பொருந்துமா?

இத்தகைய பாப கிருத்தியங்களைச் செய்தும், பரமனருள் பெற்றவர்கள் பார்ப்பனர்களன்றி வேறு வகுப்பினர் காணோமே எந்தப் புராணத்திலும் அது ஏன்? நமது கண்ணப்பர், கண்ணைத் தோண்டித் தந்தார் கடவுள் அருள்பெற. நமதுகாரைக்காலம்மை உடல்தேய உதிரம் ஒழுக உருண்ட பிறகு சிவனருள் பெற்றார். சுகுமாரன் போன்ற பார்ப்பனர்கள் மட்டும், கேட்கவும் குலைநடுங்கும் கேடுகள் செய்தும், மிக மிகச் சாமன்ய—அறிவுக் கொவ்வாத காரணத்துக்காகப் பாபம் துடைக்கப்பட்டுப் புண்யபதம் பெறுவதாகப் புராணங்கள் இருப்பதன் மர்மம் என்ன? சுகுமாரன் ஒருவன் மட்டும் தானா? தாயைப் புணர்ந்து தகப்பனைக்கொன்ற மாபாவி பார்ப்பனனுக்கு ஆலவாயப்பனின் அருள் கிடைத்ததைத் திருவிளையாடற் புராணம் செப்புகிறதே! ஏன் இது போல ஆண்டவன் ஓரவஞ்சனை செய்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்? இது பக்திக்கோ—யுக்திக்கோ ஏற்றதாகுமா? பார்ப்பனன் எக்காரியம் செய்தாலும் அவன் விஷயத்திலே ஆண்டவன் அருள் சுரக்கிறான் ஏன்? அந்தப் பார்ப்பனக் குலத்துக்கு மகிமையைக் கற்பிக்க, மற்றக் குலத்தைத் தாழ்த்த ஏற்பட்ட சூழ்ச்சிகள் இவை.

 "போ! பரதா! எதோ! ஒரு சுகுமாரன் கதையைக் கூறி, ஒரேயடியாக அதிலிருந்து பொது முடிவு கட்டுகிறாயே, ஒரு மரம் தோப்பாகாது பார்" என்று சிலர் கூறக்கூடும். எனவே, இதோ மற்றோர் மாபாவியை அறிமுகப்படுத்துகிறேன். சொல்லொணாத் தீச்செயல் புரிந்தவனுக்குச் சுகுமாரன் என்ற பெயர் இருந்தது. இதோ இவனுக்கும் அழகான பெயர் குணநிதி: என்ன குணம்? என்ன நிதி? என்று நீங்களே பிறகு யோசிக்கலாம். கேளுங்கள் இவன் கதையை!

 

இவன் பிறந்த இடமே புண்யபூமி கோசலநாடு. கோசல நாட்டிலே கிரிநாதன் என்பவனின் மகன் குணநிதி என்பவன் இருந்தான். இப்பார்ப்பனன் குரு பத்தினியைக் கற்பழித்தான். சல்லாபம் கெட்டு விடுமே என்று அஞ்சி குரு இருக்கும்வரை தொல்லை தானே என்று கருதி துணிந்து குருவையே கொலையும் செய்தான். இவை மட்டும் குணமெனும் நிதியைத்தராது என்று எண்ணினான் போலும் இக்குணநிதி. எனவே தாய் தந்தையரைக் கொன்றான். என்ன நடந்தது? குணநிதிக்குக் குட்டம் வந்ததா, குலைநோய் கண்டதா? கண் கெட்டதா; கைகால் பட்டுப் போயிற்றா? இல்லை! இறைவன், அவனை ஏதும் செய்தாரில்லை. ஊரார் கோபித்து அவனைக் காட்டிலே விரட்டினர். அங்கு அவன் இறந்தான்.

"ஒழிந்தானா பாவி! அவனுக்கு அந்தக் கதிதானே கிடைக்கும்!" என்று கூறிவிடாதீர். கதைமுடியவில்லை. குணநிதி இறந்த உடனே யமபடர் வந்தனர் குருத்துரோகியை, பெற்றோரைக் கொன்ற பேயனை—குரு பத்தினியைக் கற்பழித்தகாமுகனை, அவர்கள் எந்தெந்த நரகத்திலே தள்ள எண்ணினரோ தெரியவில்லை. யமபடர்கள் அவனை இழுத்துச் செல்லத் தொடங்கியதும் சிவகணங்கள் வந்துவிட்டன.

"ஆஹா! என்ன ஆணவம், யமபடர்காள்! எமது சிவனடியாரை அணுகும் துணிவு எங்ஙனம் பெற்றீர்?"

 "சிவனடியாரை நாங்கள் இம்சிக்க வருவோமா? இவன் குணநிதி, குருத்துரோகி"

 

"எந்தத் துரோகியாக இருப்பினும் எமக்கென்ன? இவன் சிவானுக்கிரகம் பெற்றுவிட்டான், சிவலோகம் அழைத்துச் செல்லப்போகிறோம்”

இதுபோல உரையாடல் நடந்தது. யமபடர்கள் "இவன் எப்படிச் சிவனருள் பெற்றான்?" என்று கேட்கச் சிவகண நாதர்கள் செப்புகின்றனர். (சிரிப்பை அடக்குங்கள்!) "இந்தக் குணநிதி கொலைசெய்தவன். குருவைக் கொன்றவன், அவர்தம் பத்தினியைப் புணர்ந்தவன் பாவம் இவை. ஆனால் இந்த வனத்திலே உருத்திராட்ச மரத்தின் காற்றுப்போக்கில் இருந்ததால் இவன் சிவனருள் பெற்றான்" என்று கூறிவிட்டுக் குணநிதியைச் சிவலோகம். அழைத்துச் சென்றனர் என்று சிவலோகமகிமையைக் கூறுகிறார் ஒரு புராணிகர். சுகுமாரன் சிவபூசையைக் கண்டான், சிவபதம் பெற்றான் குணநிதியின் உடலிலே உருத்திராட்சத்தின் மேல் உராய்ந்து வந்த காற்றுப்பட்டது. இதற்காக இக்கொடியவனுக்குச் சிவலோகம். அறிவா? அழகா? நீதியா? அன்றி ஆரியனுக்கு உயர்வு ஆணவக்கருத்தா? ஆற அமர யோசியுங்கள்.

 இப்படிப்பட்ட மாபாவிகள் உலவும் இடம் சிவலோகமானால், சீலர்களுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? சிவலோகத்தில் சுகுமாரனும், குணநிதியும் போன்ற மாபாவிகள் மகேஸ்வரன் அனுமதித்ததால் சென்று தங்கியுள்ளனர் என்று புராணம் கூறும் போது, "சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்!" என்று பஜனை பாடுவது தகுமா, சிவபதம் தேவை என்று சித்தம் உருக ஜெபிப்பதில் அர்த்தமுண்டா? அந்த சிவலோகத்திலே இருப்பவர்களின் யோக்யதைக்கு இரு எடுத்துக் காட்டுக்கள் தந்தேன். அத்தகையவர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இடத்துக்குப் போகவேண்டும் என்று இனியும் கருதும் "மெய்யன்பர்கள்" இருப்பரேல், மெய்யல்ல நண்பர்களே. இனம் இனத்தோடு என்பதற்கேற்ப அவர்கள் நாடுகின்றனர் என்றே கருதிடவேண்டும்! தீயாரைக் காண்பதுவும் தீதாமே! சுகுமாரனும், குணநிதியும் சென்ற இடத்துக்குச் செல்வது தீதினும் தீது என்று நான் எண்ணுகிறேன். பன்றியும், எருமையும் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டபிறகும், அந்தக்குளத்திலே நீர் பருக யாருக்கு மனம் இடந்தரும்? மதுக்குடத்திலே பாலூற்றியிருந்தால் பருகுவார் யார்? மலங்கொட்டும் குழி என்று தெரிந்த பிறகும், அங்கு மனை அமைக்க எவன் விரும்புவான்! அதுபோல், சுகுமாரனும், குணநிதியும் சென்றடைந்த சிவலோகத்தில், பாடுபட்டு பிறனை வஞ்சிக்காது, பாபம் புரியாது, கேடு செய்யாது உள்ளவர்களுக்கு வேலையில்லை, விரும்பவும் செய்யார்.

களிமண்ணும் கையுமாக

"வீரர் வாளும் கையுமாக இருந்து நாட்டையும் வீட்டையும், மானத்தையும் காப்பாற்றுகின்றனர்"

"தர்ப்பையும் கையுமாக இருந்துகொண்டு வஞ்சகர்கள், மன உறுதியற்றவர்களை மயக்கியும், மிரட்டியும் அடக்கி வருகின்றனர்"

"பேனாவும் கையுமாக நீ இருக்கிறாய் பரதா! பயன் என்ன?"—என்று வீரன் சலித்துக்கொண்டு கேட்டான்.

"திடீரென்று உனக்கேனப்பா, கைகளின் நிலை பற்றிய ஆராய்ச்சியிலே ஆர்வம் பிறந்து விட்டது?" என்று வீரனை நான் கேட்டேன்.

"கை செய்யும் வேலை கருத்தைக் காட்டுவதுதான்" என்றான் வீரன்.

"உண்மைதான்! கருத்து இருக்கும் விதத்திற்கேற்றபடிதான் கையின் நிலையும் இருக்கும், ஆனால் இன்று என்ன விசேஷம்? இந்த ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாய்?" என்று மேலும் கேட்டேன்.

"அந்தக் கரங்கள், விமான விசையைப் பிடித்துச் செலுத்துகின்றன; டாங்கிகளை ஓட்டுகின்றன; பீரங்கிகளைப் பேச வைக்கின்றன; துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டுள்ளன; எதிரியின் பிடரியிலே பாய்க்கின்றன; சுதந்திரக் கொடியைத் தாங்குகின்றன; ஆராய்ச்சி வாளைப் பிடிக்கின்றன; அறிவுச்சுடரை ஏந்தி உள்ளன. ஆர்ப்பாட்டக்காரரை அடக்குகின்றன; அரசுகள் நடத்துகின்றன; அந்தக் கரங்களே கரங்கள். மற்றவை மரங்கள்!" என்றான் வீரன் ஆர்வத்தோடு.

"வெளிநாட்டவரின் கரங்களைப் புகழ்வதே உன் வேலையா, வீரா? நம் நாட்டுக் கரங்கள் லேசா?" என்றேன் நான்.

"கூப்பிய கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற்றைப் பிசையும் கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற் கரம்"—என்று வர்ணித்தான் வீரன், வெறுப்புக்கலந்த குரலுடன்.

"அதற்கென்ன செய்யலாம்?" என்று நான் கூறினேன். வீரன் திருப்தி அடையவிலலை. "பரதா! கப்பலோட்டும் கரம், கோட்டை எதிரே நின்று கொடி தாங்குங்கரம்; பாட்டுமொழி ஏட்டைத் தாக்கும் கரம் இல்லை என்பதற்கு, வெளிநாட்டான்மீது மட்டும் பழி சுமத்தினால் போதாது. களிமண்ணுங் கையுமாக நம்மவரை இருக்குமாறு அவனா சட்டம் இயற்றியிருக்கிறான்? வெட்டி வேலைக்குக் கரங்களைப் பயன்படுத்தும்படி வெள்ளையனா பணித்தான்? வீணருக்குழைக்கும்படி அவனா ஏவுகிறான்?" என்று வீரன் கேட்க, “எனக்கொன்றும் புரியவில்லையே, களிமண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?" என்று நான் வீரனைக் கேட்டேன். "கைவண்ணங் காணத்தானே போகிறாய். திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களிமண்ணுங் கையுமாகத்தான் இருப்பர். வினாயக சதுர்த்தியப்பா அன்று. வீட்டிற்கு வீடு களிமண்ணுங் கையுமாக இருப்பர். பானை முகத்தான், மத்தளவயிற்றானை, மகேஸ்வரன்மைந்தனை ஈரக் களிமண்ணால் செய்து, எள்ளுருண்டையும், அப்பமும் கொழுக்கட்டையும், அவல், பொறியும் படைத்து குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு, விநாயக சதுர்த்தி பூஜை செய்வர்" என்று வீரன் விளக்கிய பிறகே, “அடடே! அதையா சொன்னாய்! வேடிக்கை தான். களிமண்ணுங் கையுமாகத்தான் இருப்பர்" என்று கூறிக்கொண்டே நான் சிரித்தேன். "கையில் மட்டுமல்ல களிமண்! மண்டையிலும் அதுவேதான்" என்றான் நண்பன் கோபத்தோடு. "திட்டாதே தேவநிந்தனை செய்யாதே, ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது" என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்!

"வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானைமுகம், மத்தளவயிறு, ஒற்றைத் தந்தம்—நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப்பார் நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இத கேட்டால், எவன் தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவார்! உலகமக்களின் பிரிதிநிதிகள் கூட்டமொன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனுங், கழுத்திலே மண்டையோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர்சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காதா? நீயே கூ.று! சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப் பாடும் வேளையிலே நந்தி முகவதி வந்தால், கைகொட்டிச் சிரிக்கமாட்டார்களா! உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணை பொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம் புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு; பக்கத்திலே பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுள்களின் காட்சி எனும் கூத்திலே கணபதி, ஒரு விதூஷகராகவே பாவிக்கப்படுவார்" என்று வீரன் உரைத்தான்.

களிமண்ணுங் கையுமாக இருப்பர் நமது மக்கள் என்று வீரன் சொன்னதிலே தவறு இல்லை. விநாயக சதுர்த்தியன்று, நம்மில் பலர், இத்தகைய வீணாட்டத்திலேதான் இருப்பர். வெளிநாட்டார் கேட்டால் நம்மைக் கேலி செய்வார்கள் என்பதும் உண்மையே. அதுமட்டுமா! விநாயகரின் வரலாற்று விசித்திராதிகள். களிமண்ணுங் கையுமாக இருக்கும் தோழர்கள் சற்றுக் கவனித்தால், வீரன் கூறினதில் தவறில்லை என்று கூறிவிடுவர் என்பது திண்ணம்.

-------

கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல்மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்துகொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்கவேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளில் பாசம் வைத்துக்கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி, பற்றியும், காரல்மார்க்சின் கருத்துப் பற்றியும், புரட்சி பற்றியும் பேசுகிறார்களே!

திருந்தாத வயலிலே, தீங்கனிமரம் கோரி, விதை தூவி, தேன் பெய்தாலும் பயன் கிட்டுமா? ஆடைஅணி புனைந்து, ஆடிப்பாடி வரச்செய்தாலும், அலியை அணைத்துக்கொண்டால் சுகம் கிட்டுமா? ஆரியம் எனும் படுகுழிமீது புராணமெனும் பச்சிலை போட்டு மூடிக்கிடக்கிறது. பச்சையைக் கண்டு இச்சைப்பட்டுச் செல்லும் பாமரர் நிச்சயமாகப் படுகுழி வீழ்வர் என்பது ஆரியருக்குத் தெரியும்! கொக்கெனத் காத்திருந்து, குள்ளநரியோல் குறியை வஞ்சகத்திலேயே நிறுத்தி, கள்ளமும் கபடமும் இல்லாதவரைக் கைதிகளாக்கி விட்டனர்; அவர்களின் கண்ணீர்வெள்ளத்தைக்கொண்டு, தமது சுயநலத்தோப்புக்கு நீர் பாய்ச்சுகின்றனர்; அவர்களின் வியர்வை, இரத்தம் ஆரியப்பண்ணைக்குப் பாய்கிறது. இதனை அறிந்தோறும், அஞ்சுகின்றனர் எடுத்துரைக்க எனில், அறியாதார் நிலைபற்றிக் கூறிடவும் வேண்டுமா?

 அறிவிலே அக்கறை, நாணயத்திலே நாட்டம், நீதியிலே நோக்கம், மனிதத் தன்மையிலே நம்பிக்கை இம்மி அளவேனும் இருப்பினும், ஆண்டவன் பெயரால் அளக்கப்பட்டுள்ள ஆபாசங்களை மக்களிடை எடுத்து விளக்கி அன்னியத் துணிகளை நெருப்பிலிடுவதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, இந்தக் குப்பைகளைக் கொளுத்திவிட்டிருக்க மாட்டார்களா? கள்ளுக்கடை பகிஷ்காரத்திற்கு முன்னரேயே, கடவுள் பெயரைக் கூறிக் காசைப் பறிக்கும் ஸ்தாபனங்களின் முன் மறியல்கள் நடத்தியிருக்க மாட்டார்களா?

 

நாட்டு மக்களின் நிலை தெரியாமல், நாட்டுடைய நாடியைப் பிடித்துப் பார்க்க வகையின்றி, பகுத்தறிவுச் சுடரொளி வீசும் இந்தக் காலத்திலும் இருண்ட இந்தியாவிலே ஒளியின்றி, இருடிகள் தர்பார் நடத்துவதும், அரவிந்தர்கள் அலைகடல் குளிர்ந்த காற்று வீச ஆஸ்ரமம் அமைப்பதும், குன்றின்மீது கோட்டை எழுப்பிக் கொண்டு மகரிஷிகள் மன்னர்போல் மாநிதியுடன் தர்பார் நடத்துவதும், சங்கராச்சாரிகள், சில ஜில்லாக்களிலே சோணகிரிகள் தரும் சோடசோபசாரம் பெற்று ஜெகமெங்கும் குருவென்று ஜம்பம் பேசுவதும், தம்பிரான்கள் சைவத்தின் சரசத்திலே சகல சுகமும் பெற்றுச் சகல சம்பத்துடன் விளங்குவதும் ஆகிய இந்தக் காரியங்கள், அறிவுப் பெருக்கெடுத்தோடும் இந்தக் காலத்திலேயும் நடைபெறலாகுமா என்று கேட்கின்றனரா? துணிந்து கேட்பவர்கள் மீது கல்வீச்சும், சொல்வீச்சும் எவ்வளவு! அதிலே தப்புவோரைத் தள்ளிட வைதிகர்கள் வகுத்துள்ள குழிகள் எவ்வளவு!

நெறியிலாதவனுக்கு நெறிகாட்ட, ஒளி காணாதவனுக்கு ஒளி காட்ட ஒரு ஜோதி—ஆண்டவன்!

அசுத்தமான உலகில், சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை விளக்க, அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க, கபடம், வஞ்சகம் காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன்—ஆண்டவன், எங்கும் நிறைந்து—எந்தச் சக்தியும் பெற்று—எல்லையில்லாத இன்பத்தின் வடிவமாகி, சத்தியசொரூபியாகி சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சகனாகி பதியாகி உள்ள பரமன்—ஆண்டவன்!

கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பலர் கூறுவர் இதுபோல். ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு—இவையே கடவுள். அறிவான தெய்வமே! எங்கும் நிறைகின்றன பொருளே! அன்பேசிவம்! உண்மையே ஆண்டவன்!—என்று பலர் போதித்தனர்.

இவை இருக்கும் இதே இடத்திலே, கடவுட் கதைகள் வேறு உண்டு! தத்துவம் ஒருபுறம், தத்தித்தோம் எனத் தாண்டவமாடும் தர்ப்பா சூரரின் தந்திரக் கதைகள் பக்கத்திலே! இவையும் சரி. அவையும் சரியே என்றுகொண்டு, "இடது காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே" என்பதற்குத் தத்துவம் இதுவென்பதையும் கேட்டுக்கொண்டு, இடதுகாலை இன்னவர் இந்த நாள் இந்தமடத்திலே இவ்வளவு சொகுசாகத் தூக்கி நின்றாடும் காலை, இன்ன மடாதிபதி இத்தனை பெரிய தொந்தி, இப்படிக் குலுங்கநகைத்து, இமைகொட்டாது பார்த்து, இன்னின்ன பரிசுகள் தந்தார் என்ற இந்த நடவடிக்கையும் கண்டு தத்துவத்திற்கும் நடத்தைக்கும் உள்ள தகாத தன்மையைக் கண்டு தணலிடு புழுவெனத் துடிக்காது, கிணற்றுத் தவளைபோல் இருந்து விடுகின்றனர்—மக்கள்—மக்களின் தலைவர்களிலே பலர்!

உங்கள் கடவுள் இப்படி இருப்பார், என்று விநாயக உருவத்தைக் காட்டும்போது, அந்த வைதிகன் கன்னத்திலே பகுத்தறிவாளனின் கரம் விளையாடும் காலம் விரைவிலே வரும் என்பது என் துணிபு. உன் கடவுளின் வரலாறு இது, அவருடைய குணாதிசயம் இன்னவை என்று, இன்றுள்ள புராணாதிகளைக் கூறினால் வேறு விதியற்றவர்கள் கேட்டுகொள்வர். சொந்த மதியற்றவர்கள் பொறுத்துக்கொள்வர். சிந்தனா சக்தி உள்ளவர்கள் கேட்டுக் கொள்வார்களா? எனக்குத் தூய்மையான ஆண்டவன்வேண்டும். தீயன் வேண்டாம் என்று தீர்ப்புக்கூறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கொஞ்சம் தெளிவு, சற்று சொரணை, நாடியிலே இன்னம் கொஞ்சம் முறுக்கு, மனத்திலே சற்று அதிகரித்தகவலை, அறிவிலே அக்கறை பிறக்கவேண்டும்.

பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார்? மூவருள் முதல்வர் என்று சைவர்கள் மார்தட்டிக் கூறிக் கொள்ளும் மூக்கண்ணனாரின் மைந்தன்! கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர் என்று பொருள். ஆனால் இங்கோ கடவுளுக்குக் குடும்பம். பிள்ளைக்குட்டி, பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை.

அத்தகைய சிவனாரும், உமையம்மையும் ஒருநாள் காட்டு மார்க்கமாக உலாவிக்கொண்டிருந்தனராம் கடலோரத்திலே இப்போது காதலர்கள் எதிரே திரை கடலும், இதயத்திலே களிப்புக் கடலும், கடலிலே அலையும், மனதிலே கருத்தும் கொந்தளிக்க நடந்து செல்வதுபோல! எல்லாவற்றையும் கடந்தவர், அங்கு இரு யானைகள் கலவி செய்திடக் கண்டாராம்! கண்டதும் அவர் மனதிலே அலைமோதத் தொடங்கியது. மன்மதனைக் கண்ணால் எரித்தார் எங்கள் மகாதேவர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் சைவர்கள், இந்தப் புராணத்தையும் பூரிப்போடு பேசுவர்; இதைக் கூறியும் நீறு பூசுவர்! காட்டானைகளின் கலவியைக் கண்டதும் காமனைக் கருக்கியவருக்கு உள்ளத்திலே காம உணர்ச்சி ஓங்காரமாகி விட்டது! ஆம்! கடவுளுக்குத்தான் தோழரே இந்த உணர்ச்சி வந்தது! தாங்களும் காட்டானைகளாகிக் கலவி இன்பத்தைக் கண்டு காம ரசத்தை உண்டுகளிக்க எண்ணினார். உமையும் சரி என்றார். இருவரும் யானை உருக்கொண்டனர். காட்டிலே திருவிளையாடல் நடந்தது! அந்தப் போகப் பிரசாதமே யானைமுகக் கணபதி! பிள்ளையார் பிறப்புக்கு இஃதோர் வரலாறு.

இதன் ஆபாசத்தைப் பாரீர்; இத்தகைய ஆபாசத்தை ஆண்டவன் செயலென்று கூறிடும் அன்பர்களைவிட, கடவுளை நிந்திக்கும் கயவர் உண்டோ கூறீர். கருணாமூர்த்தி, கட்டுகளைக் கடந்தவர், மும்மலமற்றவர். பஞ்சேந்திரியங்களின் சேட்டைகள் பரமனை அணுகா என்று பேசுவதும், பின்னர் கண்ணுதற் கடவுள் காட்டானைகள் கலவி செய்யக்கண்டு காமங்கொண்டு, கணபதியைப் பெற்றார் என்பதை உரைப்பதும் பேதைமையன்றோ, பித்தமன்றோ என்று கேட்க உனக்கு உரிமை கிடையாதா?

மற்றுமோர் வரலாறு கேளீர்! பார்வதி குளிக்கச் செல்கையில், தன் உடம்பிலிருந்த அழுக்கை உருட்டித்திரட்டி ஒரு பிள்ளையை உற்பத்திசெய்து, தன் வீட்டு வாயிலைக் காவல் புரியவைத்தாராம். பத்துமாதம் சுமந்து பாமரர் பெற்றால், பார்வதியார் உடல் அழுக்கை உருட்டிப் பிள்ளையாக்குகிறார்! கடவுள் அல்லவா! இதுகூடச் செய்யாவிட்டால், இமையவனை மணந்தவளுக்கு இழுக்கு நேரிடும் என்று புராணப் புளுகர்கள் கருதினர் போலும்!

அழுக்கன், பார்வதியின் வீட்டு வாயலிலே நிற்கையில், பரமசிவனார் உள்ளே நுழைய வந்தாராம் அவருக்கு என்ன அவசரமோ பாவம்! தனயன் தந்தையைத் தடுக்க, தந்தை கோபித்து வாள்கொண்டு பிள்ளையின் தலையை வீசிவிட்டு, உள்ளே நுழைந்தார். மகனின் கழுத்து பனங்காய் போலும்! ஒரே வெட்டு மகன் தலை உருண்டது.

கருணாமூர்த்தியின் காரியத்தைப் பாரீர்! மகன், மாதா நீராடுகிறாள் சற்றுப்பொறும் என்று கூறியதைக்கேட்டுக் கோபம் பொங்கிக் கொடுவாள் கொண்டு சிரச்சேதம் செய்கிறார் சிவனார். எவ்வளவு நீதி, எத்தகையநாகரிகம். விஷயமறிந்த பார்வதி, “ஐயோ மகனே! அழுக்கனே, பாலகா?" என்று அலறி அழ, அரன்கண்டு, செத்தால் என்ன, இதோ பிழைக்க வைக்கிறேன் என்று தேற்றி வெளியே வந்து பார்க்க, உடல் மட்டும் இருந்ததாம். தலையைக் காணோமாம்! செத்தவனை மீட்கும் சக்திபெற்ற சிவனாருக்கு மறைந்த தலையைக் கண்டுப்பிடிக்க முடியாது போன காரணம் என்னவோ? வழியே ஒரு யானை சென்றதாம். அதன் தலையை வெட்டி, உருண்டு கிடந்த உடலிலே ஒட்ட வைத்து பிள்ளையாரைப் பிழைக்கச் செய்ய, யானை முகத்தோடு கணபதி எழுந்தாராம்.

இந்த வரலாற்று மூலமாகலாவது ஏதேனும் கடவுட் தன்மை, கடவுட் கொள்கை, மனிதத்தன்மை, தூய்மை முதலிய நற்குணம் விளங்குகின்றனவா என்று நாத்திகமென்றால் நடுங்கும் நமது ஆத்திக அன்பர்களைக் கேட்கிறேன்.

மற்றுமோர் வரலாறு! நமது புராண இலட்சணம் எப்படியெனில், ஒரு நிகழ்ச்சிக்குக் குறைந்தது ஒன்பது விதமான கதையாவது இருக்கும். புளுகர்கள் கூட்டம், போட்டியிட்டுக்கொண்டு வேலை செய்துள்ளது. விநாயகர், பார்வதியின் கர்ப்பத்திலே இருக்கையில் ஒரு அசுரன், காற்றுவடிவில் கருவிருக்கும் இடஞ்சென்று, குழந்தையின் தலையைக் கொய்துவிட, உடனே பரமன், அந்தத் தலை போனாலென்ன இதோ ஆனைத்தலை இருக்க அருள்கிறேன் என்று பாலித்திட, ஆனை முகத்தோடு குழந்தை பிறந்தது என்று விநாயக புராணம் கூறுகிறது. தக்கன் யாகத்தை அழிக்க, சிவனாரால் ஏவப்பட்ட விநாயகர் சிரம் அறுபட்டுவிழ, சிவனார் சிரமற்ற பிள்ளையைக்கண்டு, யானைச் சிரமொன்றை வைத்துப் பிள்ளையை உயிர்ப்பித்தாராம்! உயிர் வரச்செய்யும் உத்தமர், பழைய மனிதத் தலையை மட்டும் வரவழைக்க அறியார் போலும் என்ன மடமை!

 வடநாட்டிலே ஒரு புராணம் விநாயகருக்கு! விசித்திரமானது. பிரமன் ஒருநாள் கொட்டாவிவிட, திறந்த வாயினின்றும் திடீரென்று தீ வண்ணமாக ஒரு திருக்குழவி தொப்பென்று வெளியே வந்து குதித்ததாம். கொட்டாவி பெற்ற குழந்தையை, பிரமன் தன் உள்ளங்கையிலே வைத்து உவகையோடு பார்த்துக்கொண்டிருக்கையில், குழந்தை தண்ணீரில் குதித்துப் பிசாசு வடிவாயிற்றாம்.

 

இதென்ன விசித்திரம் பாருங்கள்! கொட்டாவியிலே குழந்தை! தண்ணீரில் மூழ்கியதும் பிசாசு! தேவர்களே! உங்களின் வாழ்வு இவ்வளவு ஆபத்தானதுதானா? என்று பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. பிரமன், "ஓ! மகனே சிந்தூரா! வரமொன்று தருவேன் பெற்றுக் கொள். நீ யாரைக் கட்டித்தழுவினாலும் அவர்கள் இறந்து போகக் கடவர்" என்று அருளினார்.

 நாரதர் வந்தாராம் அவ்வழியே! வரத்தைப் பரீட்சிக்க, சிந்தூரன், நாரதரைத் தழுவிக்கொள்ளச் செல்ல, இதை அறிந்து நாரதர் ஒரு தந்திரம் செய்தார். வரத்தைப் பரீட்சிக்க, வரமளித்த பிரமனையே தழுவிப்பார் என்றாராம், போனான் சிந்தூரன்! பிரமாத கோபம் பிரமாவுக்கு. "ஏ சிந்தூரா, உன்னைக் கணேசர் கொல்வார், போ" என்று சபித்து விட்டார். மறைந்தார். பின்னர், பிரமனைத் தேடிச்சிந்தூரன் வைகுந்தம் சென்றான்". விஷ்ணு, "நான் சாமான்யனப்பா, சிந்தூரா! உன் சக்திக்கேற்றவர் சிவனாரே. அங்குபோய்க் காட்டு உன்திறனை" என்று கூறிட, கைலாயம் சென்று சிவனைத் தேடினான் சிந்தூரன். அவர் இல்லை அங்கு! பார்வதிக்கும் சிந்தூரனுக்கும் பலத்த விவாதம் நடந்ததாம்; சிவனார் வந்து சேர்ந்தார் நல்ல சமயத்திலே. சிந்தூரனுடன் சண்டையிட்டு மூர்ச்சையானார். பார்வதியார் பதைத்து விஷ்ணுவை நோக்கி, "அரியே! என் வயிற்றிலே பிறந்து, இந்தச் சிந்தூரனைக் கொல்லு" என்று கட்டளையிட மஹாவிஷ்ணு மலைமகள் வயிற்றிலே கஜமுகத்தோடு தோன்றிசிந்தூரனைச் சம்ஹாரம் செய்தார். அந்த கஜமுகன்தான் விநாயகர்! பார்வதி புத்திரர், மஹாவிஷ்ணுவின் அவதாரம். பிரமனின் ஒரு பொல்லாத கொட்டாவி இவ்வளவுக்கும் காரணம்!!

 

யாக்ஞவல்கியர் காலத்துக்கு முன்பு, விநாயகர், ஆரியருக்குக் கிடையாதென்றும், பின்பு நான்கு விநாயகர்கள் தோன்றினரென்றும், அவர்கள் நாசஞ்செய்யும் கெட்ட குணங்கொண்டோ ரென்றும், இரத்தம் சோறும் இறைச்சிப் பலியும் வேண்டினரென்றும், பிறகு நான்கு விநாயகர் போய் ஒரு மஹாகணபதியாக்கப்பட்டதாகவும், இந்துமார்க்க தத்துவ விளக்கமுரைக்கும் பாபு பகவான் தாஸ் கூறுகிறார்.

எந்தப் புராணத்தை நீங்கள் நம்பினாலுஞ் சரியே, அதிலே ஏதாவது ஆபாசமற்றதாக, அறிவுக்குப் பொருத்தமானதாக, அன்புக்கு இருப்பிடமாக, அநாகரீகமற்றதாக இருக்கிறதா என்று அன்பர்களே எண்ணிப் பாருங்கள். இத்தகைய கதாநாயகரைச் களிமண்ணால் செய்து வைத்துக் கைதொழும் போக்குசரியா என்பதை ஆற அமற யோசிக்கலாகாதா?

இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளைச் சேற்றிலே உழலுமட்டும், முன்னேற்றமேது, வாழ்வு ஏது? களிமண்ணுங்கையுமாக இருக்கும் தோழர்களே! கசடர் புனைந்துரைகளைக் கடவுட் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில், நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும். இவைகளை விட்டு விடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள்! அந்த நாள் என்று வரும், என்ற ஏக்கமே எனக்குப் பிறந்தது வீரனின் பேச்சுக் கேட்டு. இதனைத்தான் உங்கட்கும் உரைத்தேன், உள்ளத்தில் கோபமின்றி, யோசித்துணர்க!

(முற்றும்)

—தமிழ்ப் பாசறையார்.

0 Comments: